Monday 5 August 2013

1, ஈசா உபநிடதம்

பத்து உபநிடதங்கள் என்று வரிசைப்படுத்தும் பட்டியலில் முதலில் இடம்பெறுவது ஈசா உபநிடதம். ஈசாவாசிய உபநிடதம் என்றும் அழைக்கப்படும்.

உபநிடதங்களின் அடிப்படைக் கருத்தை தொகுத்து கொடுத்தது போல் இந்த உபநிடதம் அமைந்துள்ளது. இவ்வகையில் இதனை உபநிடதங்களின் கருத்துரை அல்லது முடிவுரை என்று அழைக்கலாம். இந்திய ஆய்வாளர்களில் சிலர் இந்த உபநிடதத்தை பழைமையானவைகாக கருதுகிறார்கள், ஆனால் மேற்கத்திய ஆய்வாளர்களும், அரவிந்தர், ராதாகிருஷ்ணன் போன்ற இந்திய ஆய்வாளர்கள் ஈசா உபநிடதத்தை பிற்காலத்தவையாக தெரிவிக்கின்றனர். இக் கருத்தே ஏற்புடையதாக இருக்கிறது. பொதுவாக உரைநடையில் அமைந்த உபநிடதங்கள் காலத்தால் பழைமையானவையாக கொள்ளப்படுகிறது. செய்யுள் வடிவில் இந்த உபநிடதம் அமைந்துள்ளதால் இதனை பிற் காலத்தவையாக கருதலாம். பிற உபநிடதங்கள் அமைந்தது போல் ஆரண்யகத்தை தொடர்ந்து வராமல், யசூர் சம்கிதையின் இறுதியில் இவ்வுபநிடதம் காணப்படுகிறது.

இயற்கையின் சீற்றத்தை அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த ஆதிகால மக்கள், இவற்றிற்குப் பின்னால் ஏதோ சக்தி இருந்து இயக்குவதாக கருதினர். இவையே மத சிந்தனையின் தொடக்கமாக இருந்தது. சமூக வளர்ச்சியால் உருவான, ஏற்றதாழ்வுகளால் உண்டான முரண்பாடுகள் தத்துவ சிந்தனையினை தொடங்கிட செய்தது. இவ்வகையில் ஈசா உபநிடதம் தன் பணியினை நேரடியாக தொடங்கிவிடுகிறது. பிற உபநிடதங்களைப் போல் உலகப் படைப்பைப்பற்றி கூறுவதோடுமட்டும் நில்லாது, உலகத்தை படைத்தது ஈசன் என்பதால் சமூகத்தில் காணும் முரண்பாடுகளை எவ்வாறு புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் நேரடியாக கருத்துரைக்கிறது. துன்ப, துயர நீக்கத்திற்கான வழியைத் தேடியே மக்கள் மதம், தத்துவம் போன்றவற்றை நாடி செல்கிறார்கள், ஆனால் இவைகள் துன்பத்திற்கான காரணத்தை சொல்கிறதே தவிர துன்பதைப் போக்குவதற்கான வழியை காட்ட முடியவில்லை. ஓரிடத்தில் செல்வம் குவிவதும், மறு இடத்தில் இல்லாமையும், ஓரிடத்தில் செழிப்பும் மறு இடத்தில் வறுமையும் உருவானதிற்கான காரணத்தை கூறாமலும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் காட்டாமலும் இருந்து விட்டு இவ்வகையான முரண்பாடுகளோடு முரண்படாமல் வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொடுக்கிறது.

மந்திரம் 1 ஓம், பூமியில் காணும் உலகம் அனைத்தும் இறைவனால் சூழப்பட்டுள்ளது. தியாகத்தால் உன்னை காப்பாற்றிக்கொள். பிறருடைய செல்வத்திற்கு ஆசைப்படாதே.

இந்த மந்திரம் ஏதோ நன்நெறியைப் பற்றி கூறுவது போல் மேற் பார்வைக்குத் தெரிகிறது. ஆனால் உள்ளர்த்தம் உலகில் காணும் ஏற்றத்தாழ்வால் உருவாகும் கோபத்தையும், போராட்ட உணர்வையும், சமூகத்தில் ஏற்படாமல் பாதுகாக்கவே உருவான தத்துவக் கருத்துக்கள் என்பதை உணர்த்துகிறது.

இந்த மந்திரத்தின் விளக்கங்களாகவே அனைத்து உபநிடதங்களும் அமைந்துள்ளது. அதனால் இந்த மந்திரத்தின் பொருளை தெளிவுபடுத்தினால் அனைத்து உபநிடதங்களும் உருவானதற்கான நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும்.

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள அண்ணா அவர்களின் இந்த மந்திரத்திற்கான உரையைப் பார்ப்போம்
ஓம், (தோன்றி மறையும்) இவ்வுலகில் தோன்றி மறைவதாயுள்ளது எது உண்டோ அது அனைத்தும் ஈசனால் வியாபிக்கப்பட்டதாக (காண) வேண்டும். (ஈசுவர பாவனையால் ஏற்பட்ட) அந்த தியாகத்தால் உன்னை ரட்சித்துக்கொள்- (உயிரை ரட்சிப்பதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்ததென ஏற்றுக் கொண்டு வாழ்வாயாக). எவருடைய பொருளுக்கும் பேராசைப் படாதே.

துன்ப, துயரங்களோடு வாழ்வோர்களுக்கு, "உயிரை ரட்சிப்பதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்ததென ஏற்றுக் கொண்டு வாழ்வாயாக" என்று அறிவுறுதப்படுகிறது. ஆனால் சமூகத்தில் சமமாக வாழமுடியாமல் போனதற்கு, செல்வம் ஒரிடத்தில் சேர்ந்ததே காரணமாகும். செல்வத்தைச் சேர்த்தவர்களிடம் உள்ள பொருளாசையை தடுக்காமல், கடுமையாக உழைத்தும் துயர்படுபவர்களிடம் இத்தகைய தியாகத்தையே எதிர்ப்பார்க்கிறது இம் மந்திரம். செல்வம் சேர்த்தவர்களைக் காப்பதற்காகவே, இல்லாமையில் அவதிப்படுவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காகவே தத்துங்கள் தோன்றுகிறது என்பதை இந்த மந்திரம் முழுமையாக தெரிவித்துவிட்டது. பாடுபட்டு உழைத்தும் அவதிப்படும் மக்களுக்கான தத்துவம் இது அல்ல என்பதையும் இம் மந்திரம் உணர்த்திவிடுகிறது. இதன் மூலம் தத்துவத்தின் சார்புத் தன்மையையும் இம் மந்திரம் வெளிப்படுத்திவிட்டது.

மந்திரம் 2 இவ்வுலகில் விதித்த கர்மங்களைச் செய்த வண்ணம் நூறாண்டு வாழ விரும்பவேண்டும். இப்படி விரும்புகின்ற மனிதனாகிய உனக்கு கர்மம் செய்வதைத் தவிர வேறுவழி கிடையாது. இவ்வகையில் கர்மம் செய்து வாழ்ந்தால் பந்தம் உருவாக்காது.

இவ்வுலகில் வாழ விரும்புபவன் முற்பிறவியால் உண்டான இந்த கர்மத்தை நீக்கும் பொருட்டு, இன்றைய வாழ்நிலையை தியாக உணர்வோடு ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், அடுத்த பிறவியில் முக்தி கிடைத்து, அனைத்துத் துயரங்களிலிருந்தும் விடுதலை அடையலாம், என்று வழிகாட்டுகிறது.

இதன் அடிப்படையில் வர்ண தர்மங்களும், தர்ம சாஸ்திரங்களும் உண்டாக்கப்படுள்ளது.

மந்திரம் 3 அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளது. ஆத்மாவை அழிக்க நினைப்பவர்கள் இறப்பிற்குப் பின் அசுரர்களின் அந்த உலகங்களை அடைகிறார்கள்.

வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தப்பட்ட பின், இந்த மந்திரத்தில் ஆத்ம போதம் அளிக்கப்படுகிறது. இன்பதுனபமான இவ்வுலகில் வாழ விருப்பம் கொண்டு புற வளர்ச்சியில் ஈடுபவோர் பிறவி துன்பங்களுக்கு ஆளாகிறார்கள், ஆத்மாவை அறிந்து அதனோடு ஒன்றி அக வளர்ச்சியில் நாட்டம் கொள்வோர் இறைநிலையோடு இறவா பெரு நிலை அடைகிறார்கள் என்று இம் மந்திரம் ஆத்ம ஞானத்தினை வலியுறுத்துகிறது.

அது மட்டுமன்றி, உடலை முன்னிருத்தி வாழவிரும்புவோர் ஆத்மாவை அழிப்பவர்கள் என்றும் அசுரர்களின் இருள்சூழ்ந்த உலகத்தை அடைவார்கள் என்றும் அச்சுருத்தப்படுகிறார்கள்.

மந்திரம் 4    ஆத்மா அசைவற்றது, ஒன்றாயிருப்பது, மனதைவிட வேகமானது, புலன்கள் அதனை அடைய முடியாது. அது நிலையாக நின்றுக் கொண்டே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது, ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது. அது நிலையாக இருந்து பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.

இயங்கும் உயிரை இயக்குவதற்கு நிலையாக இருக்கும் ஆத்மா உதவுவதாக இம் மந்திரம் கூறுகிறது.

அசையாத ஆத்மா உயிரை எவ்வாறு அசைக்கிறது என்பதை அடுத்த விவரிக்கிறது.
மந்திரம் 5 அது அசைகிறது, அது அசைவதில்லை. அது தொலைவில் உள்ளது, மிக அண்மையில் உள்ளது. அது அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் வெளியிலும் உள்ளது.

மந்திரம் 6 எல்லா உயிரினங்களையும் யார் தன்னுடைய ஆத்மாவில் காண்கிறானோ, மற்ற உயிரினங்களில் தன்னுடைய ஆத்மாவை காண்கிறானோ, அவன் யாரையும் வெறுப்பதில்லை.

மந்திரம் 7 எல்லா உயிரினங்ளிலும் தன் அத்மாவே என்ற ஒருமையுணர்வைப் பெற்றவனுக்கு என்ன கவலை, என்ன மனமயக்கம்.

மந்திரம் 8 அந்த ஆத்மா எங்கும் பரவியவன், ஒளிர்பவன், உடலற்றவன், முழுமையானவன், தசைகளற்றவன், தூய்மையானவன், பாவமற்றவன், அனைத்தையும் அறிந்தவன், மனதை ஆள்பவன், எல்லாமாக இருப்பவன், தானே தோன்றியவன், அவர்வர்கள் செய்த கர்ம, உபாசனைகளுக்குத் தக்கபடி ஆற்ற வேண்டிய கடமைகளை வகுத்துக்கொடுக்கும் சக்தியை அதிககாலம் இருக்கின்ற பிராஜாபதிக்கு ஈஸ்வரன் கொடுத்தார்.

மந்திரம் 9 யார் கர்மங்களில் மட்டும் ஈடுபடுகிறார்களோ அவர்கள் இருளை அடைகின்றனர். யார் தேவர்களின் வழிபாட்டில் மட்டும் ஆசை கொள்கிறார்களோ அவர்கள் அதைவிட கொடிய காரிருளை அடைகின்றனர்.

மந்திரம் 10 “‘வழிபாட்டால் ஒருவித பலனும், கர்மத்தினால் வேறுவித பலனும் கிடைக்கின்றதுஎன்று எங்களுக்கு விளக்கமளித்த ஞானிகள் கூறினார்கள்.

மந்திரம் 11 வழிபாடு, கர்மம் ஆகிய இரண்டையும் பின்பற்றுபவர் யாரோ, அவர் கர்மத்தால் இறப்பைக்கடந்தும், வழிபாட்டால் இறவாபெருநிலையை அடைகிறார்கள்.

மந்திரம் 12 யார் உருவமற்றதை வழிபடுகிறார்களோ அவர்கள் இருளை அடைகின்றனர். யார் உருவத்தை வணங்குகிறர்ர்களோ அவர்கள் காரிருளை அடைகின்றனர்.

மந்திரம் 13 “"உருவ வணக்கத்தால் ஒருவித பலனும், உருவமற்ற வழிபாட்டால் வேரொரு பாலனும் கிடைக்கும்" என்று எங்களுக்கு விளக்கமளித்த ஞானிகள் கூறினார்கள்.

மந்திரம் 14 உருவம் மற்றும் உருவமற்ற வழிபாடுகள் இரண்டையும் அறிபவர், உருவ வழிபாட்டால் இறப்பைக் கடந்து, உருவமற்ற வழிபாட்டால் இறவாபெருநிலையை அடைகிறார்.

மந்திரம் 15 உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப்பட்டுள்ளது. சூரிய தேவரே, அதனை, உண்மையின் தர்மத்தை கடைபிடிக்கும் என்னுடைய பார்வைக்காக திறந்துவிடுங்கள்.

மந்திரம் 16 உலகை காப்பரே, தனியாக செல்பவரே, அனைத்தையும் ஆள்பவரே, சூரிய தேவா! பிரஜாபதியின் மகனே, உனது கதிர்களை விலக்கிக் கொள், பேரொளியை ஓடுக்கிக் கொள், உனது கல்யாண வடித்தை உனதருளால் நான் பார்க்க வேண்டும். அந்த சூரியனில் இருப்பது நானே.

மந்திரம் 17 உடலிலுள்ள பிராணன் வெளியேறி, எங்கும் நிறைந்த அழிவற்ற பிராணனுடன் கலக்கட்டும். இந்த உடம்பு சாம்பலாகட்டும். ஓம்!, மனமே நினைப்பாயாக, செய்யப்பட்டதை நினைப்பாயாக!

மந்திரம் 18 அக்கினியே! எங்களைக் கர்மபலனின் போகத்திற்காக நல்ல பாதையில் அழைத்துச் செல்வீராக, தேவனே, நாங்கள் செய்த அனைத்துக் கர்மங்களையும், வழிபாட்டையும் அறிந்துள்ள நீங்கள் எங்களது கொடிய தவறுளிலிருந்து விலக்குவீராக. உங்களுக்கு பற்பல வணக்கங்களைத் தெரிவிக்கிறோம்.

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள அண்ணா அவர்களின் இந்த மந்திரத்திற்கான உரையைப் பார்ப்போம்
அக்னியே! (எங்கள் செயலால் உண்டான) செல்வத்தை யனுபவிப்பதற்கு நல்ல மார்க்கத்தில் எங்களை அழைத்துச் செல்வீர். தேவனே! எல்லா எண்ணங்களையும் நீர் அறிவீர். மறைந்திருந்து கெடுக்கும் பாவத்தை நாசம் செய்வீர். நமஸ்கார வசனங்களை வெகுவாய்ச் சமர்ப்பித்து உம்மை பூஜிக்கிறோம்.

இந்த மொழியாக்கம் மறைந்திருந்து கெடுக்கும் சுரண்டுவோரின் குணத்தை வெளிப்படுத்தி, அந்த தவறுகளிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டப்படுவது வெட்டவெளிச்சமாகக் காட்டிவிடுகிறது.

பிறர் செல்வத்திற்கு விருப்பங்கொள்ளாதே என்று முதல் மந்திரம் வலியுறுத்தியது. தியாக உணர்வோடு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யச் சொன்னது இரண்டாம் மந்திரம். இவ்வுலக இன்பதுன்பங்களை விரும்பாது ஒதுக்கி. ஆத்ம நாட்டத்தில் ஈடுபட வழிகாட்டியது முன்றாம் மந்திரம். அசையாத ஆத்மா அசைகின்ற உயிரை இயக்கிய விதத்தை நான்காம் மந்திரம் விவரிக்கிறது. புலன்களால் அறிய முடியாத ஆத்மா ஆராய்சிக்கு அப்பாற்பட்டது என்கிறது ஐந்தாம் மந்திரம்.

ஆறாம் மந்திரம் ஆத்மாவால் ஒருமைப்படுத்தப்பட்டு, சமூகத்தில் ஏற்றம் பெற்றவர்களையும், தாழ்மைப் படுத்தப்பட்வர்களையும் சமநிலைப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் யாரையும் வெறுக்காமல் காக்கப்படுகிறது.

ஏழாம் மந்திரத்தில் ஆத்ம ஒருமையால் கவலையில்லா, மனமயக்க மற்ற மயக்க நிலையை உணர்த்திவிடுகிறது.


அதாவது அனைவரையும் ஆத்மாவில் ஒன்றவைத்து, சமூகத்தில் காணும் அனைத்து ஏற்றத் தாழ்வையும், முரண்பாடுகளையும் நீங்கிய மயக்க நிலைக்கு வழிகாட்டுகிறது. இந்த ஆத்ம நிலையை அடையவைத்து, இறைவனால் சூழப்பட்ட இவ்வுலகில், துயர்பட்ட மக்கள் தியாக உணர்வோடு செயல்படவைத்து, சமூக முரண்பாடுகளை களைய முயல்கிறது இந்த உபநிடதம்.

No comments:

Post a Comment