Monday 5 August 2013

உபநிடதங்கள்

வேதத் தொகுப்பு எனப்படுவதில் உபநிடதம் இறுதியில் வைத்து எண்ணப்படுவதால் உபநிடதத்திற்கு வேதம் + அந்தம் = வேதாந்தம் எனப்படுகிறது. இதனை மேலும் விரித்து வேத்தின் சாரம் என்றும் மரபுசார்ந்தவர்கள் அழைக்கின்றனர்.

குருவிற்கு மிக அருகில் ஈடுபாட்டோடு அமர்தல் என்பதே உபநிடதம் என்ற சொல்லிற்கு பொருளாகும். தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேள்விகளாக்கி, அதனை குருவிடம் சென்று, சீடன் பதில் பெறுவது போலவே, பெரும்பாலான உபநிடதங்கள் அமையப் பெற்றுள்ளது. இதில் இடம் பெறும் முனிவர்கள் பல்லோரானதாலும், இந்த முனிவர்கள் பல காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பதாலும், உபநிடதங்களின் கருத்துக்கள், தொடர்ச்சியற்றதாகவே காணப்படுகிறது. அதனால் உபநிடதங்களின் கருத்தை தொகுத்துப்பார்த்தல் என்பது மிகவும் கடினமான செயலாகயிருக்கிறது. குவிப்பிட்ட வினாக்களுக்கு மட்டுமே விடையளிப்பதாக இதன் உரையாடல்கள் அமைந்திருப்பதால், பேசப்படும் பொருளைப் பற்றிய விவரங்கள் அந்தத்த உபநிடதத்தில் முழுமையாக கிடைப்பதில்லை. முதன்மையான உபநிடதங்களின் கருததுக்களை தொகுத்து, இணைத்துப பார்க்கும் போதும் பலசிக்கல்கள் எழுகின்றன, ஒரே கருத்தை ஒரு முனிவர் ஒருவிதமாகவும், மற்ற முனிவர் வேறுவிதமாகவும் கூறியிருப்பாதால், உபநிடதங்களின் கருத்தை திரட்டிப்பார்த்தல் என்பது எளிதாக இருக்கவில்லை.

உபநிடதங்கள் தோன்றிய காலத்தையும், வரிசையையும் கூறுதல் என்பதில் பல்வேறு அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. பொதுவாக ஏற்றுக் கொண்டவைகள் மட்டும் இங்கே குறிப்பிடுவோம். புத்தருக்கு முன். பின்னாக முதன்மையான உபநிடதங்கள் தோன்றின. தொன்மையான உபநிடதங்கள் கி.மு 700 முதல் கி.மு. 100 வரையிலான காலகட்டத்தில் உருவானவையாகும். தொன்மையான உரைநடையில் அமைந்துள்ள உபநிடதங்கள் மிகப் பழங்காலாத்தையாகும். பொதுவாக செய்யுள் வடிவத்தில் அமைந்த உபநிடதங்கள் பிற்காலத்தவை எனக் கூறலாம். பிற்கால நடையைச் சேர்ந்த உபநிடதங்கள் மிகவும் பிற்காலக்கட்டத்தை சேர்ந்தவையாகும்.

உபநிடதங்களின் எண்ணிக்கையும் ஒத்த கருத்தைக் பெற்றவையாக இருக்கவில்லை. ஆயிரத்தி எட்டு. நூற்றெட்டு, பதினெட்டு, பன்னிரெண்டு, பத்து என்று பல கண்க்கீடுகள் உண்டு. ஒவ்வொரு வேத சாகைகளின் இறுதியிலும் உபநிடதம் உண்டு எனக்கொண்டால், உபநிடதங்களின் எண்ணிக்கை ஆயிரத்து நூற்று எண்பது காணப்படவேண்டும். ஆனால் இன்று அச்சில் ஏற்றப்பட்ட உபநிடதங்கள் நூற்றெட்டு மட்டுமே, இருநூற்றுக்கு மேலான உபநிடதங்கள் காணக்கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
கிடைக்கும் உபநிடதங்களில் பதினெட்டு குறிப்பிடத் தக்கவையாக இருக்கிறது. அதில் பன்னிரெண்டு சிறப்பானவையாகவும், அதில் பத்து மிகச் சிறப்பானதாக கொள்ளப்படுகிறது.

ஒரு பழைய சமஸ்கிருத பாடல் அந்தப் பத்து உபநிடதங்களை பட்டியலிடுகிறது, அவை ஈசா, கேன, கடம், பிரசனம், முண்டகம், மாண்டூக்கியம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிருகதாரண்யகம் ஆகியவையாகும். இந்தப் பத்து உபநிடதங்களுக்கே சங்கரர், மத்துவர் போன்ற ஆச்சாரியர்கள் விளக்கவுரை எழுதியுள்ளனர். ராமாநுசர் தமது பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய பேருரைகளிலும், தாம் எழுதிய மற்ற நூல்களிலும் இந்த உபநிடதங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment