Monday, 5 August 2013

வேதம்

ரிக், யசூர், சாமம், அதர்வணம் என வேதம் நான்காகும். ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. அவை 1,சம்கிதை, 2,பிராமணம், 3,ஆரண்யம், 4,உபநிடதம். சம்கிதையும், பிராமணங்களையும் கர்ம காண்டம் என்றும், ஆரண்யங்களையும் உபநிடதங்களையும் ஞான காண்டம் என்றும் இரண்டாக பிரித்துள்ளனர். சம்கிதைக்கும் உபநிடத்திற்கும் இடையே உள்ள கால இடைவெளி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானதாக கணக்கிடப்படுகிறது. கால மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட, சமூக வளர்ச்சியின் விளைவாக சிந்தனை மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

கர்ம காண்டத்தில் இந்து மதம் தோன்றிய விதத்தையும், ஞான காண்டத்தில் இந்து தத்துவ போக்கின் தொடக்கத்தையும் அறிய முடிகிறது. வேத சம்கிதைகள் வாய்வழியாக பல ஆயிரம் ஆண்டுகளாக பதம், கிரமம், ஜடை, கனம் என நான்கு முறைகளைக் கடைப்பிடித்தே வேத சம்கிதைகளை மனனம் செய்து வந்திருக்கின்றனர். இதனை சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்தான் எழுத்து வடிவத்தில் கொண்டு வந்தனர். இதனால் தமிழில் வேதத்தை எழுதா மறை என்றே கூறப்பட்டிருக்கிறது.

வேத சம்கிதையில் அக்காலகட்டத்தில் வழிபட்டுவந்த தேவர்களை விளித்து, அவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து இவ்வுலக பொருட்களை வேண்டும் முறையில் அமைந்துள்ளது.

பிராமணங்கள் வேத சம்கிதைகளில் கூறப்பட்ட வேள்வியினை நடத்தும் முறைகள் பற்றிய விளக்கங்களை அளிக்கிறது. வேள்விகளை நடத்துபவர்கள் பின் பற்ற வேண்டிய வழிமுறைகளை விவரிக்கிறது.

ரிக் வேத சம்கிதையின் காலச் சமய நிலையும், பிராமணம் தோன்றிய போது காணும் சமய நிலையும் மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. பிராமணங்களில் இந்திரன், அக்கினி முதலிய தேவர்கள் தமது தனித்தன்மையை இழந்து, வேள்ளிக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர். தேவர்களின் பெருமையும், உயர்வும் பிராமணங்களில் வேள்வியினுள் அடங்குகிறது. தேவர்களைவிட வேள்விக்கு முதன்மைத்துவம் ஏற்பட்டிருக்கிறது.

பிராமணங்களை அடுத்து ஆரண்யகங்கள் வருகின்றன. இதில் தத்துவ கண்ணோட்டங்கள் அரும்பத்தொடங்குகிறது. பிராமணங்களைப் போன்று வேள்வியினை நடத்தும் முறையோடு, எதன் பொருட்டு வேள்வி நடத்தப்படுகிறது என்ற உண்மைகளையும் இணைத்து கூறப்படுகிறது.
இங்கு எங்கெல்ஸ் அவர்கள் டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூலின் சிறு பகுதியை பார்ப்போம்
"எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு ஏதுவுமில்லை, இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள் இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின் சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன, மேலும் ஏற்பட்ட பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத் தோற்றங்களை மேற்கொண்டன. இந்த ஆரம்ப இயக்கப் போக்குக்கு மூலதாரம் இந்திய வேதங்களில் தோன்றிய முன்பு - குறைந்தபட்சம் இந்தோ-ஐரோப்பிய மக்கள் விஷத்தில் - ஒப்பியல் புரணாங்களால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பிறகு இதன் கூடுதல் பரிணாமத்தில் இது இந்தியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ரோமானியர், ஜெர்மானியர்களிடையே விவரமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம்பக்கமாகச் சமுதாயச் சக்திகளும் செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்த சக்திகள் மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும் எதிரிடுகின்றன, இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற அதே இயற்கை அவசியத்துடன் அவன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலில் இயற்கையின் விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில் சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகன்றன. பரிணாமத்தின் இன்னும் கூடுதலான ஒரு கட்டத்தில் எண்ணற்ற பல கடவுகளின் இயற்கையான மற்றும் சமூகத்தன்மைகள் ஒரு சர்வவல்லமை கொண்ட கடவுளுக்கு மாற்றப்படுகின்றன, அவர் சூக்கும மனிதனின் பரதிபலிப்பே தவிர வேறு எதுவுமல்ல. ஒரு கடவுள் கொள்கையின் துவக்கம் இத்தகையதே, இதுவே பிந்தியகால கிரேக்கர்களின் கொச்சையான தத்துவவியலின் வரலாற்று வழியிலான கடைசிச் சரக்காகும், "                                                                பக்கம் 555 முதல் 557 வரை

இப்போது வேத சம்கிதையில் ஒரே கடவுள் கொள்கை போக்கிற்கு வந்தடைந்ததைப் பார்க்கலாம்.

தேவர்களை விளித்து, அவர்களைப் போற்றி அவர்களிடம் இவ்வுலகப் பொருட்களை வேண்டும் முறையில் வேத சம்கிதைகள் அமைந்துள்ளது. பெரும் பகுதி இவ்வாரே காணப்படுகிறது, இறுதி காலகட்டத்தில் சில பாடல்கள் மாறுபட்டொலிக்கிறது. அதாவது பல்வேறு தேவர்களை தனித்தனியாக விளித்து வேண்டப்பட்டதற்கு மாறாக, அனைத்தையும் இணைத்து பார்க்கும் போக்கை காண முடிகிறது, ஆனால் இவை மிகவும் பிற்பட்ட காலத்தவையாகும்.
"அவர்கள், சூரியன் இந்திரன் எனவும் மித்திரன் எனவும் வருணன் எனவும் அக்கினி எனவும் கூறினார்கள். இருப்பவன் ஒருவன், அவனை அறிஞர்கள் பலவித நாமங்களால் அழைக்கிறார்கள்" ரிக் 1 - 164 - 46

இந்தக் காலக்கட்டத்தில் சமூகம் பெரிய அளவிற்கு முரண்பட்டுக் காணப்படவில்லை. அதனால் இவ்வகையான கருத்துக்கள் இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை காட்டுவதாக கொள்ளலாம்.

'நாசதீய சூக்தம்' கூறும் படைப்பைப் பற்றிய பாடலின் இறுதி பகுதியை பார்க்கலாம்-
இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றிது. இந்தப் படைப்பைத் தாங்குகிறதா, இல்லையா? மேலான விண்ணில் வாழும் இந்தப் படைப்பின் தலைவர் யரோ அவர் கட்டாயமாக அறிவார், ஒருவேளை அவருக்கும் தெரியாதோ என்னவோ?” ரிக்10 - 129 - 7
என்று சந்தேகத்தை தொடங்கி வைக்கிறது இந்த மந்திரம்.

அடுத்து ஒரு ரிக் வேத சம்கிதை
"இந்த உலகங்களை எவன் கற்பித்தான் என உங்களுக்குத் தெரியாது. உங்கள் உள்ளத்தில் அந்நியனான அவன் இருக்கிறான். அவனை அறிய மூடுபனியான அறிவின்மையிலிருந்தும், பிதற்றும் மொழியிலிருந்தும், உயிராசையில் இருந்தும், சடங்குகளிலிருந்தும் பிரிய வேண்டும்"                                                    ரிக் 10 - 82 - 7     

உள்ளத்திலிருந்து அந்நியமான ஒன்றை தேடத் தொடங்கிவிட்டது. அறியாமையிலிருந்தும், மொழியிலிருந்தும், உயிராசையிலிருந்தும், சடங்குகளிலிருந்தும் விடுபட்டு, பரமாத்மாவை தேடுகிறது இந்த மந்திரம். அதாவது தனது உள்ளொளியின் மூலம் இதனைக் கண்டிபிடிக்க முயல்கிறது.

இந்த பரமாத்வாவை "தத்" அதாவது அது என்று கூறுகிறது இந்த 'நாசதீய சூக்தத்தின்' இரண்டாம் மந்திரம்.

"அப்போது இறப்பில்லை, இறப்பில்லநிலையும் இல்லை, இரவு பகலின் அடையாளமே இல்லை. மூச்சற்ற அது ஒன்றாய், தமது சக்தியால் சுவாசித்தது. அவருக்கு அப்பால் அவரைத் தவிர வேறு ஏதுவும் இல்லை"                                                                                 ரிக் 10. 129. 2                      

இந்த அது என்பது எவ்வாறு பிரம்மாக. பரமாத்மாவாக எவ்வாறு விரிவுபட்டு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை உபநிடத்தில் காணலாம்.

No comments:

Post a Comment