துவைதம் பதிலளிக்க முடியாமல் தவிக்கும் இடத்திலிருந்து
அத்வைதம் தொடங்குகிறது. இறைவனின்
படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பது ஏன்? மனிதர்களில் சிலர் பிறக்கும்போதே செல்வந்தர்களாகவும், சிலர் ஏழையர்களாகவும்
இருப்பது ஏன்? இதற்குப்
பதில் அளிப்பதில் உண்டான சங்கடத்தை நீக்குவதற்குத் தோற்றம் பெற்றவையே அத்வைதம்
என்ற தத்துவப் போக்காகும்.
இதனை சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
“இந்தப்
பிரம்மம் என்பது என்ன? அவர் என்றும்
இருப்பவர், என்றும்
தூய்மையானவர், என்றும்
விழிப்போடு இருப்பவர், எல்லா
ஆற்றலும் கொண்டவர், எல்லாம்
அறிந்தவர், கருணைமயமானவர், எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், பிரிவு இல்லாதவர்.
அவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்கிறார்.
அவர் எப்போதும்
படைத்துக் கொண்டும் காத்துக் கொண்டும் இருப்பதாகச் சொன்னால் இரண்டு சங்கடங்கள்
எழுகின்றன. நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கிறோம். ஒரு மனிதன்
பிறந்ததிலிருந்தே மகிழ்ச்சியாக இருக்கிறான், மற்றொருவன் துயருறுகிறான். ஒருவன் பணக்காரனாக இருக்கிறான், மற்றொருவன் ஏழையாக
இருக்கிறான். இது ஓரவஞ்சனையையே காட்டுகிறது. அதோடு, படைப்பில் கொடூரம் இருக்கிறது. வாழ்க்கையின்
நியதியே மரணமாக அல்லவா உள்ளது. ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை நார்நாராகக்
கிழிக்கிறது. ஒவ்வொருவனும் தன் சொந்தச் சகோதரனிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு
பறித்துக் கொள்ள முயல்கிறான். இந்தப் போட்டி, கொடூரம், பயங்கரம், ஏக்கப் பெருமூச்சுகள் எல்லாம் இரவும் பகலும் இதயங்களைக்
கிழித்துக் கொண்டே இருக்கின்றன. இதுதான் நமது உலகத்தின் நிலைமை. இது கடவுளின்
படைப்பு என்றால், அந்தக்
கடவுள் கொடூரத்தைவிட மோசமானவர், மனிதனால் கற்பனை செய்ய முடிவதைவிட மிகவும் பயங்கரமான பிசாசு
அவர்.
ஆனால் இங்கே ஓரவஞ்சனை
இருக்கிறது என்றால், போட்டி
நிலவுகிறது என்றால் தவறு கடவுள் மீது இல்லை என்கிறது வேதாந்தம். அப்படி என்றால்
இவற்றை உண்டாக்குவது யார்?
நாமே.
மேகம் எல்லா நிலங்களின் மீதும் சமமாகவே மழையைப் பொழிகிறது. ஆனால் நன்றாக உழுது
பண்படுத்தப்பட்ட நிலம் மட்டுமே அந்த மழையால் பயன் பெறுகிறது. பண்படுத்தப்படாத
நிலமோ, நல்ல
முறையில் கவனம் செலுத்தப்படாத நிலமோ
மழையின் எந்தப் பலனையும் பெற முடியாது. அது மேகத்தின் குற்றம் அல்ல. அதுபோல்
கடவுளின் கருணை நிரந்தரமானது, மாறாதது. நாம்தான் வேற்றுமைகளை உண்டாக்குகிறோம். ஆனால்
பிறந்ததிலிருந்தே சிலர் மகிழ்ச்சியோடு இருப்பதையும், சிலர் துன்பத்தில் வாடுவதையும் எப்படி
விளக்குவது? இந்த
வேற்றுமையை உண்டாக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை, இந்தப் பிறவியில் ஒன்றும் செய்யவில்லை. சென்ற
பிறவியில் செய்தவை இந்தப் பிறவியின் நிலைமைக்கான காரணங்கள் என்பதே வேற்றுமைகளின்
விளக்கம்”
-ஞானதீபம் 5 , பக்கம் 26-27
பண்பட்ட நிலத்தில் பொழிந்த மழையால் விளைச்சலுக்கும், பண்படாத நிலத்தில்
பொழிந்த மழையால் பயன் ஏதும் கிட்டாததற்கும், மழையைக் குற்றம் சாட்ட முடியாததைப் போலவே, சிலர்
செல்வந்தர்களாகவும், பலர்
ஏழைகளாகவும் சமூகத்தில் காணப்படுவதற்குக் கடவுளின் கருணையை குற்றம்சாட்டக் கூடாது.
கடவுளின் கருணை நிரந்தரமானது, மாறாதது என்று சுவாமி விவேகானந்தர் விளக்கம்
கொடுக்கிறார். அது மட்டுமல்லாது, சமூகத்தில் காணும்
ஏற்றத் தாழ்வுக்கு அவரவரே காரணம். செல்வம் கிடைத்திருக்கிறது என்றால், அவர் பண்பட்ட நிலத்திற்கு
ஒப்பாவார், ஏழையாக
இருப்பதற்கு அவன் பண்படாததே காரணம் என்று சொல்வதின் மூலம், செல்வந்தர்களுக்குக்
கிடைத்த சொத்திற்கு ஆன்மீக அங்கீகாரம் அளித்திடுகிறது, இந்த அத்வைதக்
கூற்று. மேலும் இதற்கு முற்பிறவியில் செய்த வினையே இந்தப் பிறவியின் நிலைமைகளுக்கு
காரணமாகக் காட்டுவதன்மூலமும் சமூகத்தில் சுரண்டுபவர்களுக்கும்
சுரண்டப்படுவர்களுக்கும் காணப்படுவது முற்பிறவியின் அடிப்படையில் என்று
சுட்டுவதின் மூலமும் சுரண்டல் சமூகத்தை அங்கீகரிக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு அத்வைத தத்துவத்தை
ஆராயும் போது அதன் வர்க்கச் சார்பு முழுவதும் வெளிப்பட்டுவிடுகிறது.
அத்வைதம் தனித்த மதக்கருத்து எதையும்
கொண்டிருக்கவில்லை, அது தத்துவக்
கண்ணோட்டத்தையே பெற்றிருக்கிறது. அத்வைதத்திற்கு மதச்சடங்குகள் என்று ஏதும்
கிடையாது. ஆனால் அத்வைதம் என்பதை எடுத்தயெடுப்பிலேயே அடைந்திடக் கூடியதாக
கூறப்படவில்லை, அது படிநிலை
வளர்ச்சியில் அடையக்க கூடியது. இந்த வளர்ச்சியில் துவைதம் முதல்படி, விசிட்டாத்வைதம்
இடைப்படி, அத்வைதம்
இறுதிநிலை என்பதே சுவாமி விவேகானந்தர் போன்றோர்களின் கருத்து. சமூகத்தில் மதத்தின்
படிநிலை வளர்ச்சியும் இந்த வழியில் வந்தடைந்துள்ளது என்பது மெய்யே.
“.. சாதகன் துவைதத்தில்
ஆரம்பிக்க வேண்டும். அதாவது நன்மை எல்லாம் இறைவனால் செய்யப்படுகின்றன, தீமையைச் செய்பவன்
நான் என்று கொள்ள வேண்டும். மனத்தைத் தூய்மைப்படுத்த இதுவே எளிய வழி. அதனால்தான்
வைணவரிடையே துவைதம் மிகவும் பின்பற்றப்படுகிறது. ஆரம்பத்திலேயே அத்வைதத்தைக்
கைக்கொள்வது மிகவும் கடினம். துவைத நிலை படிப்படியாக அத்வைதத்திற்கு இட்டுச்
செல்கிறது.”
ஞானதீபம் 6 - பக்கம் 314
படிநிலை வளர்ச்சியாக ஏற்றுக் கொள்ளாததால், மூவகை வேதாந்தத்தின்
விளக்க ஆசான்காளான மத்துவர்,
ராமாநுசர், ஆதிசங்கரர்
ஆகியோர்களின் விளக்கத்தை சுவாமி விவேகானந்தர் விமர்சிக்கிறார்.
“உபநிடதங்கள்
மட்டுமே பிரமாணம் என்றுதான் ஒவ்வொருவரும் கருதினர். ஆனால் அவை ஒரே ஒரு விஷயத்தை, ஒரே ஒரு வழியை
மட்டுமே காட்டுவதாக எண்ணினர். உபநிடதங்கள் அத்வைதத்தைத் தவிர வேறு எதையும்
போதிக்கவில்லை என்று சங்கராச்சாரியார் எண்ணினார், தெளிவாகத் துவைதக் கருத்துப் பற்றிக் கூறும்
வாக்கியங்களைத் திரித்துச் சிதைத்துத் தமது கோட்பாட்டிற்கு ஏற்ற பொருள் வருமாறு
செய்தார். அதே போல்தான் ராமாநுசரும் மத்வரும் அத்வைதப் பகுதிகளைத் திரித்துக்
கூறினர். உபநிடதங்கள் ஒன்றையே போதிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்
படிப்படியாக அந்த உண்மைக்குச் செல்வதையே அவை கூறுகின்றன.”
-ஞானதீபம் 5 , பக்கம் 404-405
பொதுவாக மக்கள் மதம் என்பதை வாழ்க்கைக்கு
வழிகாட்டியாகக் கருதி வருகின்றனர். அதனால்தான் மதத்தை மார்க்கம், நெறிமுறை, வழிமுறை என்றெல்லாம் கூறிவருகின்றனர்.
அத்வைதம் காட்டும் வாழ்விற்கான வழிமுறை அல்லது விடுதலை
என்ன என்பதைப் பார்ப்போம்.
"உலக வாழ்வின்
நிலையாமையைக் கண்ட பிறகு, அனுபவித்த
பிறகு அதை விட்டுவிட வேண்டும். இதுதான் லட்சியம் என்பதை நாம் அறிவோம். பொருள்களால்
அமைந்த போக வாழ்க்கை வெறுமையானது, வெற்றுச் சாம்பல் என்பதை இதய
பூர்வமாக அறிந்தும் அதைவிட்டு விலகு. புலன்களை நோக்கிச் சுற்றிவரும் மனம்
பின்னால் திரும்பிச் சுற்ற வேண்டும். பிரவிருத்தி "உலக வாழ்க்கை"
நிறுத்தப்பட வேண்டும், நிவிருத்தி
"ஆன்மீக வாழ்க்கை" துவக்கப்பட வேண்டும். இது தான் லட்சியம்".
-ஞான தீபம் 1, பக்கம் 76
அத்வைதம் இவ்வாறு உலகில் இரண்டு வாழ்க்கை
இருப்பதாகக் கூறுகிறது. இதில் ஒன்றைத் துறந்து மற்றதைத் தேர்ந்தெடுக்கும்படி
கோருகிறது. அதாவது உலக வாழ்கையை நிறுத்திவிட்டு
ஆன்மீக வாழ்க்கையைத் துவக்க வேண்டும் என்பதை லட்சியமாக காட்டுகிறது. இதற்கான
விளக்கமாகவே அத்வைதம் தமது தத்துவக் கண்ணோட்டத்தை அமைத்துள்ளது.
இதன் அடிப்படையில்தான் சுவாமி விவேகானந்தர்
கூறிய பசியைப் பற்றியும், கால்பந்து
விளையாடுவது பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும்.
“முதலில் நமது
இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும். என்
வாலிப நண்பர்களே, வலிமை
பெறுங்கள். இதுவே நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட
கால்பந்தாடுவதன்மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும். இவை தைரியமான
வார்த்தைகள். இருப்பினும் இவற்றை நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான்
உங்களை நேசிக்கிறேன்.”
-ஞான தீபம் 5, பக்கம் 209
“பசியால் வாடும் மக்களிடம் மதப் பிரச்சாரம் செய்வது அவர்களை
அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்குத் தத்துவ போதனை செய்வது அவனை
அவமதிப்பதாகும்.”
-ஞான தீபம் 1, பக்கம் 53
“பசிக்கே உணவில்லாத ஒரு நாட்டு மக்கள் மதத்தை எவ்வாறு
கடைப்பிடிக்க முடியும்? போகங்களுக்காக
ஆசைப்பட்டு, அதைச்
சற்றும் திருப்திப்படுத்த முடியாத மக்களிடம் துறவு என்பதை எப்படி எதிர்பார்க்க
முடியும்? எனவே முதலில்
மனிதன் உண்ணவும் வாழ்வின் இன்பங்களைச் சற்று அனுபவிக்கவும் வழி செய்யுங்கள்.
அப்போதுதான் படிப்படியாக வைராக்கியம் வரும். அதன்பிறகே அவர்கள் ஆன்மீக வாழ்வில்
ஈடுபடி முடியும்.”
-ஞான தீபம் 6, பக்கம் 283
இந்தக் கால்பந்து விளையாட்டு, பசிப்பிணி போன்ற
சுவாமி விவேகானந்தரின் கூற்றெல்லாம் வைராக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்கேயாகும்.
ஆரோக்கியம் மற்றும் பசியைப் போக்குவதற்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலக வாழ்வை அனுபவித்து படிப்படியாக வைராக்கியம் பெற்று, அதன் பிறகு ஆன்மீக
வாழ்வில் ஈடுபட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். உணவிற்காக பாடுபடுவதையும், உண்பதையும் பற்றிய
சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களைப் பார்க்கும் போது இதனை மேலும் புரிந்து
கொள்ளலாம்.
“..வெறும் உணவும் பணமும்
உடையும்தான் கடவுள் என்று போதிக்கின்ற உங்கள் அளவுகோலைக் கொண்டுதான் ஒவ்வோர்
உண்மையும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
மதம் உணவை உட்கொண்டு
உயிர் வாழ்வதில்லை. ஒரு வீட்டிலும் வசிப்பதில்லை.
மதத்தினால் என்ன நன்மை? அது ஏழைகளின் வறுமையைப் போக்குமா? அவர்களுக்கு நிறைய
ஆடைகள் கொடுக்குமா? என்று
திரும்பத்திரும்ப மறுப்புகள் எழுப்பப்படுவதை நீங்கள் கேட்கிறீர்கள். அவற்றைச்
செய்ய முடியவில்லை என்றால் அதனால் மதம் உண்மையல்ல என்று ஆகிவிடுமா? “
-ஞான தீபம் 4 , பக்கம் 315-316
“முட்டாள்கள்தான்
புலனின்பங்களை நாடி ஓடுகிறார்கள். புலனின்பங்களில் உழல்வது எளிது. உண்பது, உறங்குவது என்ற பழைய
பாதையிலேயே செல்வது எளிது. நவீனத் தத்துவவாதிகளின் கருத்து என்ன? புலன்களின்
திருப்திக்குக் காரணமான கருத்துக்களைக் கூறி அதற்கு மதம் என்ற முத்திரை
குத்துவதுதான். இது ஆபத்தானது. புலன்வழிச் செல்லும் வாழ்வில் மரணம்தான் இருக்கிறது.
ஆன்ம நிலையில் நிலை பெற்று வாழ்வதே வாழ்க்கை. வேறு எந்தவிதமான வாழ்க்கையும் மரணமே.
வாழ்க்கை முழுவதுமே ஓர் உடற்பயிற்சிக் கூடம் எனலாம். உண்மையான வாழ்வை அனுபவிக்க
வேண்டுமானால் இதைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும்.”
-ஞானதீபம் 1, பக்கம் 468
உண்பதையும், உறங்குவதையும் தாண்டி, அதாவது புலன்வழிச்
செல்லும் வாழ்வை விடுத்து மரணமற்ற ஆன்மீக வாழ்கைக்கு நம்மை அழைத்துச்செல்கிறார்
சுவாமி விவேகானந்தர். புலன்களின் திருப்திக்கு மதம் வழிகாட்டும் என்பது ஆபத்தான
கருத்தாகும் என்றும் கூறுகிறார்.
அத்வைதம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக்
செயல்படவில்லை. வாழ்க்கையை விளக்கவே செய்கிறது.
ஜீவன் முக்தி அடைய வேண்டுமென்றால் அத்வைத வழியில்
செல்லலாம். வாழ்க்கைக்கு வழி வேண்டுமானால் அத்வைதத்தை விட்டு விலக வேண்டும்.
அதாவது வாழ்க்கைக்கு வழிகாட்டும் தத்துவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், சமூகத்தை
மாற்றுவதற்கான வழிகாட்டும் தத்துவத்தை நாடவேண்டும்.
உலக வெறுப்பையும், வாழ்க்கை
வெறுப்பையும் ஊட்டி வைராக்கியம் பெற்று, ஆன்மீக பாதையில் செல்ல வேண்டும் என்று மக்களுக்கு
முக்தியடைய வழிகாட்டுகிறது அத்வைதம்.
“துன்பம்
இல்லாத இன்பமோ, தீமை இல்லாத
நன்மையோ ஒருபோதும் இருக்க முடியாது. வாழ்வு என்பது சமச்சீர் நிலையை இழந்த ஒரு
நிலை. நாம் விரும்புவது முக்தியே தவிர வாழ்வு அல்ல. இன்பம் அல்ல, நன்மையும் அல்ல.”
-ஞானதீபம் 2 ,பக்கம் 377
“இந்த உலகத்தை
விரும்பாதே. எதை நீ விரும்புகிறாயோ அது உனக்குக் கிடைக்கும். இறைவனை, இறைவனை மட்டுமே நாடு.
அதிகாரம் அதிகரிக்கப் பந்தமும் பயமும் அதிகரிக்கிறது”
-ஞானதீபம் 2, பக்கம் 439
“நன்மையை
உலகில் ஏன் தேட வேண்டும்? அப்படி என்ன
நன்மையைத்தான் உலகம் தந்துவிட முடியும்? சேற்றில்
விளையாடும் குழந்தைகளுக்குக் கிடைக்கின்ற சில கண்ணாடி மணிகளைப்போல் ஏதோ அற்பமான
சிலவற்றைத்தான் அது நமக்குத்தர முடியும். அவற்றையும் நாம் இழக்கிறோம், மீண்டும் தேடுகிறோம்.”
-ஞானதீபம் 2 பக்கம் 493
“ஒவ்வோர்
இன்பத்திற்குப் பின்னரும் துன்பம் வருகிறது. அது விரைந்தும் வரலாம், காலம் தாழ்ந்தும்
வரலாம். ஆன்மா பக்குவமடையுந்தோறும் ஒன்று மற்றொன்றைத் தொடர்கின்ற வேகமும்
அதிகரிக்கிறது. நமக்கு வேண்டுவது இன்பமும் அல்ல, துன்பமும் அல்ல. இரண்டும் நமது உண்மை இயல்பை
மறக்கச் செய்கின்றன, இரண்டும்
சங்கிலிகளே. ஒன்று இரும்புச் சங்கிலி, மற்றொன்று பொன் சங்கிலி. இரண்டின் பின்னணியிலும் இருப்பது
ஆன்மா. அது இன்பம், துன்பம்
இரண்டையும் அறியாதது. இவை இரண்டும் குறிப்பிட்ட நிலைகளே இவை, நிலைகள் எப்போதும்
மாறியே ஆகவேண்டும். ஆனால் ஆன்மாவின் இயல்பு மாற்றமில்லாத ஆனந்தம், மாற்றமில்லாத அமைதி.
நாம் அதை அடைய வேண்டுவதில்லை. அது நம்மிடமே உள்ளது. மாசுகளைக் கழுவுங்கள். அது
தெரியும்.”
ஞானதீபம் 2 பக்கம் 375
இவ்வாறு துன்பத்திற்கு விளக்கமும், ஆன்ம இன்பத்திற்கு
வழியும் அத்வைதம் நமக்குக் காட்டுகிறது. உலகில் காணும் இன்பத்திற்குப் பின்
துன்பம் வந்தே தீரும். அதனால் நிலையற்ற துன்ப மயமான உலகிலிருந்து விடுபட்டு, மாற்றமில்லாத
ஆனந்தத்தை நிரந்திரமாகக் கொண்ட ஆன்மாவில் நிலைத்திருப்பதே அமைதி என்று மரணமில்லாப்
பெருவாழ்விற்கு வழிகாட்டுகிறது அத்வைதம்.
சமூகம் சுரண்டல் மயமானது என்பதை அறிந்த அத்வைதம், இதனை நீக்குவதற்கு
வழி காணமுடியாமல், இதிலிருந்து
தப்புவதற்கு, இவ்வுலகம்
என்பது துன்பமயமானது என்றும், நிலையற்றது என்றும் கூறி ஆத்மாவின் அடிப்படையில் அனைவரையும்
ஒன்றுபடுத்திக் காட்டுகிறது.
“ .. மொத்தம் சமமாகவே
இருக்கிறது. எனவே ஒருவனை இன்புறச் செய்வது என்பது மற்றொருவனைத் துன்புறுத்துவதே.
புற இன்பம் ஜடமயமானது, அளவுக்கு
உட்பட்டது, துளியளவாக
இருந்தாலும் அது பிறரிடமிருந்து எடுக்கப்பட்டது. ஜட உலகிற்கு அப்பால் இருக்கும்
பேரின்பம் மட்டுமே பிறருக்கு இழப்பு ஏற்படாமல் பெறக் கூடியது. ஜட உலகம் இன்பம், ஜட உலகத் துன்பத்தின்
மாற்று வடிவமே தவிர வேறல்ல.
தீமை இல்லாது
போய்விட்டால் உயர்ந்த எதையும் நம்மால் பார்க்க முடியாது. இருக்கும் நிலையிலேயே
நாம் திருப்தி அடைந்து விடுவோம். முக்தி பெற முயல மாட்டோம். ஜடப் பொருட்களில்
இன்பத்தைத் தேடுவது மடத்தனம் என்பதும் மனிதனுக்குப் புலப்படும்போதுதான் மதம்
தொடங்குகிறது.”
-ஞானதீபம் 2, பக்கம் 485 - 486
ஒருவன் இன்பம் பெறவேண்டுமானால், மற்றொருவனுக்குத்
துன்பம் ஏற்படவே செய்யும் என்று சொல்வதின் மூலமும், சமூகத்தில் காணும் ஏற்றத் தாழ்வைப்
போக்குவதற்கு வழியில்லை என்றுரைப்பதின் மூலமும், இன்பம் அனுபவித்து வருபவருக்குத்
துணைபுரிகிறது. அத்துடன் நில்லாமல், சமூகத்தில் தீமை இல்லாது போனால், உயர்ந்ததை அடைய
வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல், இருக்கும் நிலையிலேயே திருப்தி அடைந்து விடுவோம் என்று
கூறுவதின் மூலம் சமூகத்தில் காணும் தீமைக்குப் புனிதத் தன்மையை ஊட்டுகிறது
அத்வைதம்.
சுவாமி விவேகானந்தர் தான் உலகத்தைத்
தாழ்த்திப் பேசவில்லை என்று சாதிக்கிறார். வேதாந்தம் வறட்டு அழிவு போதனை
செய்யவில்லை என்று கூறி, துறத்தல்
என்பதற்கு உலகை தெய்வீகமாக்குதல் என்று பொருள் கொள்ளும்படி கூறுகிறார். இதற்கு ஈசா
உபநிடதத்தின் தொடக்கத்தை மேற்கோள் காட்டுகிறார்.
“பிரபஞ்சத்திலுள்ள
அனைத்துமே இறைவனால் சூழப்பட வேண்டும் என்று மிகவும் பழைய ஓர் உபநிடதத்தின்
ஆரம்பத்தில் காண்கிறோம். அனைத்தையும் இறைவனால் மூட வேண்டும், ஒருவகை போலியான இன்ப
நோக்காகவோ இல்லை, துன்பங்களைக்
கண்டும் காணாததுபோல் இருக்கும் பாசாங்காகவோ அல்ல. உண்மையிலேயே எல்லாவற்றிலும்
இறைவனைக் காண்பதன்மூலம் இதைச் செய்ய வேண்டும்”
-ஞானதீபம் 3, பக்கம் 286
ஈசா உபநிடதத்தின் முதல் மந்திரம்:
“ஓம், பூமியில்
காணும் அனைத்தும் இறைவனால் சூழப்பட்டுள்ளது. தியாகத்தால் உன்னை காப்பாற்றிக்கொள்.
பிறருடைய செல்வத்திற்கு ஆசைப்படாதே.”
ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள அண்ணா அவர்களின் இந்த மந்திரத்திற்கான
உரையைப் பார்ப்போம்:
“ஓம், (தோன்றி மறையும்)
இவ்வுலகில் தோன்றி மறைவதாயுள்ளது எது உண்டோ அது அனைத்தும் ஈசனால்
வியாபிக்கப்பட்டதாக (காண) வேண்டும் (ஈசுவர பாவனையால் ஏற்பட்ட) அந்த தியாகத்தால்
உன்னை ரட்சித்துக்கொள்- (உயிரை ரட்சிப்பதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன்
கொடுத்ததென ஏற்றுக் கொண்டு வாழ்வாயாக) எவருடைய பொருளுக்கும் பேராசைப் படாதே”
துன்ப, துயரங்களோடு வாழ்வோர்களுக்கு, உயிரை
ரட்சிப்பதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்ததென ஏற்றுக் கொண்டு
வாழ்வாயாக என்று அறிவுறுத்துகிறது. ஆனால்
சமூகத்தில் சமமாக வாழமுடியாமல் போனதற்கு, செல்வம் ஓரிடத்தில் சேர்ந்ததே காரணமாகும். செல்வத்தைச்
சேர்த்தவர்களிடம் உள்ள பொருளாசையை தடுக்காமல், கடுமையாக உழைத்தும் துயர்ப்படுபவர்களிடம் இத்தகைய
தியாகத்தை எதிர்ப்பார்க்கிறது இம் மந்திரம்.
செல்வம் சேர்த்தவர்களைக் காப்பதற்காகவும், இல்லாமையில்
அவதிப்படுவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காகவும் தோன்றியதே ஆளும் வர்க்கத் தத்துவம்.
பாடுபட்டு உழைத்து அவதிப்படும் மக்களுக்கான தத்துவம் இதுவல்ல என்பதையும், இம் மந்திரம்
உணர்த்திவிடுகிறது.
பிரம்மம் சத்தியம் ஜகத் மித் என்று கூறும்
அத்வைதம், ஜகத்தை
எவ்வாறு மித் அதாவது மாயை என்று கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.
கனவில் காணும் பொருட்கள், நிகழ்வுகள் போன்று நாம் நனவில் காணும்
பொருட்களும் நிகழ்வுகளும்கூட, முற்றிலும் நமது உணர்வில் மட்டுமே தோன்றுகிறது. பொருட்கள்
உணர்வுகளின் தொகுப்பு. இதுவே அகவய கருத்துமுதல்வாதத்தின் கண்ணோட்டமாகும்.
இதனை சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:-
"உலகம் இருக்கிறது
என்று கூறுவதற்கு என்ன பொருள்? இந்த உலகம் இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான
இருப்பு இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதுதான். என்
மனம். உங்கள் மனம் என்று எல்லோருடைய மனங்களையும் சார்ந்து தான் உலகம்
இருக்கிறது."
-ஞான தீபம் 3, பக்கம் 232,
"நாம் நமது கற்பனையால், நமது அனுமானத்தால்
உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த
அனுமானம் முழுமையற்ற அனுபத்வதை, ஆழமற்ற அறிவை நமது சொந்த பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதைத் துறந்துவிடுங்கள். நாம் இதுவரை நினைத்துவந்த, எல்லோரும் உடும்புப்பிடியாகப் பிடித்துக்
கொண்டிருக்கின்ற உலகம். அதை விட்டுவிடுங்கள். நன்றாகக் கண்களைத் திறந்து
பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் உலகம் எப்போதுமே இருக்கவில்லை என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள். அது ஒரு கனவு,
மாயை.
இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில்
இருப்பதும் அவரே. தீயவரில் இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார்.
சாவிலும் அவரே இருக்கிறார்.
உண்மையிலேயே
துணிச்சலான கருத்துதான். ஆனாலும் வேதாந்தம் இந்தக் கருத்தைத்தான் பிரச்சாரம் செய்ய, செயலில் காட்ட
விரும்புகிறது. போதிக்க விரும்புகிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே, இவ்வாறு நாம்
வாழ்க்கையின் அபாயங்களையும் தீமைகளையும் விலக்குகிறோம.்"
- ஞான தீபம் 3, பக்கம் 286 -287
இந்தியாவின் அகநிலைக் கருத்துமுதல்வாதமான அத்வைதத்தை
இங்கே சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார். இதன்மூலம் அத்வைதமான அகநிலைக்
கருத்துமுதல்வாதத்தின் நோக்கமும் புரிந்துவிடுகிறது. அதாவது வாழ்க்கையில் காணும்
தீமைகளுக்குத் தோற்றம் புறத்தில் இல்லை, அகத்தில் காணும் பொய்த்தோற்றமே என்று வலியுறுத்துவதின்
மூலம், தீமைகளின்
மூலத்தை அறிந்திடும் முயற்சியைத் தடுக்கிறது.
“அகப்பொருளைப்
புறப்பொருளில் கலப்பதல்ல, அது
புறப்பொருளை அகப்பொருளில் இரண்டறக் கலப்பது. உண்மையில் அந்த நிலையில் இந்த உலகம்
அழிகிறது, நான்
இருக்கிறேன். உண்மையில் அப்போது இருப்பது நான் மட்டுமே.”
- ஞான தீபம் 4 பக்கம் 16
ஆக,
செயல்படும்
உலகத்தை, அதாவது உலக
வாழ்க்கையை மறுத்து, உலகத்தை
அழித்து, தான்மட்டும்
உண்மையில் உள்ளதான ஒற்றை முடிவிற்கு வருகிறது. உலக வாழ்க்கை நிறுத்தப்பட்டு, ஆன்மீக வாழ்க்கையைத்
தொடங்குவதே லட்சியம் என்று,
சமூக
முரண்பாடுகளுக்கு அத்வைதக் கண்ணோட்டத்தில் தீர்வாக வைக்கிறார் சுவாமி
விவேகானந்தர்.
தனிப்பொருளான சத் என்பது மாறாதது என்று அத்வைதிகள்
ஏற்கின்றனர். அவ்வாறெனில் சத் எப்படி மாறுதலுக்கும் அழிவுக்கும் உட்படுகிறது
என்பதற்கு, அத்வைதிகள்
விவர்த்த வாதத்தை கையாள்கின்றனர். விவர்த்த வாதம் என்பது தோற்றம் பற்றிய
கொள்கையாகும். இதற்கு அத்வைதிகள் காட்டும் உவமை
இரவில் இருட்டில் கீழே கிடக்கும் கயிறு பாம்பு போல் தோற்றம் கொள்கிறது. உண்மையில் கயிறு பாம்பாக மாறவில்லை. மாறியதாக
அறிவது தோற்றத்தில் மட்டுமே. அதே போல்
“இப்போது நாம்
காண்கின்ற பிரபஞ்சமும் அந்தப் பரம்பொருள்தான். அது மாறவே இல்லை, அதில் நாம் காணும்
மாற்றங்களெல்லாம் வெறும் தோற்றங்கள் மட்டுமே. இந்த மாறுதல்கள் தேசம், காலம், நிமித்தம் இவற்றால்
தோன்றுபவை, இன்னும்
உயர்ந்த மனத் தத்துவப் பொதுமையில் சொல்வதானால் நாமரூபங்பகளால் ஆனவை. நாமரூபங்கள்
ஒரு பொருளை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. நாமரூபத்தினால்தான்
வேறுபாடு உண்டாகிறது. உண்மையில் அவை ஒன்றே. தோற்றம், உண்மை என்ற இரண்டு நிலைகளே இல்லை என்றுதான்
வேதாந்திகள் கூறுகிறார்கள்”
- ஞான தீபம் 4 பக்கம் 9
“பிரபஞ்சம்
முழுவதையும் ஒன்றாக, அதாவது, எது உண்மையாகவே
இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாக இருக்கிறதோ, அதுவாகப் பொதுமைப்படுத்துவதே அத்வைதிகளின் நோக்கம்”
- ஞான தீபம் 4 பக்கம் 8
“அறியாமையில்
இருக்கும்போது, தோற்றத்தை
மட்டுமே ஒருவன் காண்கிறான்,
இறைவனைக்
காண்பதில்லை. இறைவனைக் காணும் அந்தக் கணமே
அவனைப் பொறுத்தவரையில் பிரபஞ்சம் மறைந்துவிடுகிறது. மாயை என்று சொல்லப்படும்
அறியாமையே இந்தத் தோற்றங்களுக்கெல்லாம் காரணம், தனிப்பொருளான, மாறுதல் இல்லாத, என்றும் ஒரே தன்மையாக உள்ள ஒன்றை, பிரபஞ்சமாகத் தோன்றச்
செய்வது இந்த மாயையே.”
- ஞான தீபம் 4 பக்கம் 9
சுவாமி விவேகானந்தர் விவர்த்த வாதம், மாயா வாதம், அநிர்வசனீயம் போன்ற
கோட்பாட்டின் அடிப்படையில் தமது அத்வைத
தத்துவத்தை நிறுவுகிறார்.
பிரபஞ்சம் இறைவனின் பரிணாமம், ஆனால் அது வெறும்
தோற்றம் மட்டுமே, உண்மையான
பரிணாமம் அல்ல என்று விவரிப்பது விவர்த்த வாதம். கயிறு பாம்பு உவமையில், பாம்பு என்பது
தோற்றம் மட்டுமே உண்மை அல்ல,
அதே
போல், பிரபஞ்ச
பரிமாணம் என்பது தோற்றம் மட்டுமே உண்மையல்ல.
அறியாமையில் வீழும்போதுதான் தோற்றம் எனத் தோன்றுகிறது. தோற்றம் என்பது மாயை, இந்த நோக்கில் மாயை
என்பது இல்லாதது.
“இதை (மாயையை)
இல்லாதது என்றும் கூறமுடியாது. ஏனெனில் இல்லாத ஒன்றானால் தோற்றப் பிரபஞ்சத்தை
உண்டாக்க அதனால் இயலாது. எனவே மாயை என்பது இது இரண்டும் அல்லாத ஒன்று. வேதாந்தத்
தத்துவத்தில் இதை அநிர்வசனீயம் அல்லது விளக்க முடியாதது என்கிறார்கள்”
- ஞான தீபம் 4 பக்கம் 9
இது போன்ற கோட்பாடுகளின் மூலமே அத்வைதத்தை நிறுவ
முடிகிறது, அதாவது
பிரபஞ்சம் என்பது பிரம்மத்தின் தோற்றமே, இந்த தோற்றம் என்பது மாயையே, இந்த மாயை எனபதை
இருக்கிறது என்றும் இல்லாதது என்றும் கூறமுடியாது. அதனால் விளக்க முடியாதது என்று
பொருள்படும் படியாக அநிர்வசனீயம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
விளக்க முடியாத அத்வைதத்தை விளக்குவதின் நோக்கத்தை சுவாமி
விவேகானந்தர் கூறுகிறார்.
“ஒருவருக்கும்
தீங்கு செய்யாதே. உன்னை நேசிப்பது போலவே எல்லோரையும் நேசி, ஏனெனில் பிரபஞ்சம்
முழுவதுமே ஒன்றல்லவா? பிறருக்குத்
தீங்கு செய்வதால் நமக்கே நாம் தீங்கு செய்து கொள்கிறோம். இதிலிருந்துதான் அத்வைத
நீதிநெறியும் உண்டாகிறது.”
- ஞான தீபம் 4 பக்கம் 10
“உண்மையான
தனிப்பொருள் பரம்பொருளே. மாயை காரணமாகவே பல்வேறு தனித்துவங்கள் காணப்படுகின்றன.
இந்தப் பன்மை வெறும் தோற்றம், உண்மையில் அவை தனிப் பரம்பொருளே. உண்மையில் ஒன்றே உள்ளது, மாயையால் அது பலவாகத்
தோன்றுகிறது. இந்தப் பன்மை மாயையிலேயே உள்ளது. எனினும் ஒருமையை நோக்கித்
திரும்புகின்ற போக்கும் மாயையில் உண்டு. இந்த முயற்சியே எல்லா நாடுகளின்
நீதிநெறிகளிலும் ஒழுக்க நெறிகளிலும் வெளிப்படுகிறது. அப்படித் திரும்புவது என்பது
ஆன்மாவின் இயல்பிலேயே அமைந்துள்ள ஒரு தேவையாகும் ஒருமையை அடைவதற்கான போராட்டத்தையே
நாம் நீதிநெறி என்றும் ஒழுக்கநெறி என்றும் கூறுகிறோம்.”
- ஞான தீபம் 4 பக்கம் 27
உலக வாழ்க்கையே துன்பமயமானது என்று உணர்ந்து, வைராக்கியம் பெற்று, இந்த உலகம் என்பது
பொய்த் தோற்றமே என்பதை அறிந்து, தோற்றத்தில் காணும் பன்மையே தீமைகளுக்கு காரணம் என்பதை
புரிந்து, நாம்
அனைவரும் பிரம்மநிலையில் ஒருமை பெற்றவர்களே -என்பதை நிறுவுவதே அத்வைதத்தின் சாரம்.
அத்வைதம் தமது தத்துவத்தை இவ்வாறு அமைத்துக்கொள்வதின்
மூலம், சமூக
முரணிற்கான காரணத்தையும், அதனை நீக்க
வேண்டிய கடமையையும் மறுதலித்து, அத்தோடு இந்த முரண்பாடான சமூகத்தை அங்கீகரித்து, அந்தச் சமூகம்
அவ்வழியிலேயே தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற வழிவகுக்கிறது.
அத்வைதத்தின் லட்சியமாக சுவாமி சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:-
“எப்போது ஒரு
மனிதன் ஒரு பூச்சிக்காகக்கூடத் தன் உயிரையே கொடுக்கும் தியாக நிலையை அடைகிறானோ, அந்தக் கணமே அவன்
அத்வைதிகளின் லட்சியமான பூரண நிலையை அடைகிறான். அப்படி அவன் தயாராகின்ற அந்தக்கணமே
அவனது அறியாமைத் திரை கழன்று வீழ்கிறது, அவன் தன் உண்மை இயல்பை உணர்கிறான். தான் பிரபஞ்சத்துடன்
ஒன்றுபட்டிருப்பதை இந்தப் பிறவியிலேயே உணர்கிறான். அந்த நேரத்திற்கு இந்தத்
தோற்றப் பிரபஞ்சம் அவனுக்கு மறைந்தேவிடும். துரன் தான் யார் என்பதை அவன் உணர்வான்.
ஆனால் அவனுடைய வினைப்பயன் செயலாற்றும் வரையில் அவன் வாழ்ந்தேயாக வேண்டும்.
அறியாமைத் திரை விலகிய பின்னரும், உடம்பு சில காலம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நிலையைத்தான்
வேதாந்திகள் ஜீவன்முக்தி அல்லது வாழும்போதே முக்தி என்கிறார்கள். கானல்
நீரைப்பற்றிய உண்மை தெரிந்த மனிதன் அதில் ஏமாறுவதில்லை. அது மறுநாளோ வேறொரு நாளோ
மீண்டும் அவன் முன் தோன்றினாலும் அவன் அதை உண்மை என்று நினைத்து மயங்க மாட்டான்.
முதலில் அந்த உண்மை தெரியும்வரையில் உண்மை எது, பொய் எது என்று பிரித்தறிய அவனால் முடியவில்லை. ஒருமுறை
அதன் உண்மை தெரிந்த பிறகு அவனது கண்களும் புலன்களும் வேலை செய்யும் வரையில் அவன்
அந்தக் கானல்நீரைப் பார்ப்பான், ஆனால் ஏமாற மாட்டான். உண்மைப் பிரபஞ்சத்திற்கும் அதன்
தோற்றத்திற்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு விளங்கிவிட்டது. பிரபஞ்சத் தோற்றம் அவனை
இனி ஏமாற்ற முடியாது. எனவே வேதாந்தி தன் உண்மை இயல்பை என்று உணர்கிறானோ, அன்றே அவனுக்குப்
பிரபஞ்சம் மறைந்து விடுகிறது. தோற்றம் மறுபடியும் அவன் முன்வரும். ஆனால் அது
இப்போது துயர் மண்டிக் கிடக்கின்ற பிரபஞ்சமாக இருக்காது. துன்பச் சிறையாக இருந்த
அது இப்போது சத்-சித்-ஆனந்தமாக, தனியிருப்பாக, தனியறிவாக, தனி ஆனந்தமாக மாறிவிட்டது. இந்த நிலையை அடைவதுதான் அத்வைத
வேதாந்தத்தின் லட்சியம்.”
- ஞான தீபம் 4, பக்கம் 11
அத்வைதத்தின் லட்சியத்தை காட்டுவதின்
நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். சிறு பூச்சிக்காக உயிரைக் கொடுக்கும்
தியாகத்தை செய்யும்போது அத்வைத லட்சியத்தின் முழுமையை அடைந்தவனாகிறான் என்று
கூறிவிட்டு, தோற்றப்
பிரபஞ்சத்துடன் ஒன்றுபட்டிருப்பதை இந்தப் பிறவியிலேயே உணர்ந்தவனாக சுட்டிக் காட்டி, கூறுகிறார் வினைப்பயன் செயலாற்றும் வரையில் அவன்
வாழ்ந்தேயாக வேண்டும் . ஜீவன் முக்தி
அடைந்த பின்பும், வினைபுரிய வேண்டும்
என்று சொன்னால் பரவாயில்லை. வினைப்பயன் செயலாற்றும்வரை வினைபுரிய வேண்டும்
என்கிறார். இப்பிறவியில் செய்த கர்மங்களால் உருவான புதிய வினையை எப்போது எவ்வாறு
தீர்ப்பது, ஜீவன்முக்தி
அடைந்தவுடன் இப்பிறவியில் செய்த கர்மவினை மறைந்துவிடும் என்றால், முன்பிறவியில் செய்த
வினையும் சேர்ந்து கரைந்து,
மறைந்து
விடவேண்டியதுதானே.
ஆக, இந்த அத்வைதக் கண்ணோட்டமும், கர்மவினையை
செயல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது. உலகம் பிரம்மத்தின் தோற்றம்
என்றுரைக்கும் அத்வைதம், வினைப்பயனை
தோற்றம் என்று கூற மறுப்பதில் இருந்து, இந்தத் தத்துவத்தின் குறிக்கோள் (லட்சியம்) கர்மவினை என்ற
பெயரில் சமூகம் செயற்படுவதை
விரும்புகிறது. அதாவது முரண்பட்ட வர்க்க சமூகத்தில், வர்க்கப் பிரிவினைக்கு ஏற்ப வினையாற்றுவதை
வலியுறுத்துவதே அத்வைதத்தின் நோக்கமாகிறது.
ஜீவன் முக்தியடைந்த பிறகு, இந்தப் பிரபஞ்சமானது
துயர் மண்டிக் கிடப்பதாகத் தோன்றாது. தன் உண்மை இயல்பை உணர்ந்து அதாவது தான்
இயல்பிலேயே சத்-சித்-ஆனந்தன் என்பதை உணர்ந்து ஆத்ம இன்பத்தில் திளைத்து, உலகியல் துன்பத்தை
மறந்து (மறுத்து) வினைப்பயனை
செயலாற்றும்படி அத்வைத லட்சியம் வழிகாட்டுகிறது.
“ .. மொத்தம் சமமாகவே
இருக்கிறது. எனவே ஒருவனை இன்புறச் செய்வது என்பது மற்றொருவனைத் துன்புறுத்துவதே.
புற இன்பம் ஜடமயமானது, அளவுக்கு
உட்பட்டது, துளியளவாக
இருந்தாலும் அது பிறரிடமிருந்து எடுக்கப்பட்டது.”
-ஞானதீபம் 2, பக்கம் 485
சுவாமி விவேகானந்தர் கூறுகிறபடி ஒருவன் இன்புற வேண்டும்
என்றால் மற்றொருவன் துன்புற நேருகிறது என்ற நிலையில் உள்ள சமூகத்தில், உன்னை நேசிப்பது போலவே அனைவரையம் நேசி, ஒருவருக்கும் தீங்கு
செய்யாதே என்கிற பொது நன்னெறி, இன்புறுபவனுக்குச் சாதகமாகவும், துன்புறுபவனுக்குப் பாதகமாகவும் அமைகிறது. இதுவே அத்வைதத்தின் வர்க்கச் சார்பு.
மாயை என்ற அறியாமையினாலேயே இந்தப் பிரபஞ்சத் தோற்றம்
பெற்றுள்ளது. இந்தத் தோற்றத்தைக் காண்பவனால், இறைவனைக் காணமுடிவதில்லை. இறைவனைக் கண்டவனுக்கு அக்கணமே
பிரபஞ்சம் மறைந்து விடுகிறது. இவ்வாறு பிரபஞ்சத்தின் மறைவை விளக்குகிறது அத்வைதம்.
பிரம்மையால் மாயைச் சூரியனான மதம் மனிதனைச்
சுற்றிவருவதைத் தடுத்து, இந்த
பிரம்மையைக் குலைத்துப் பகுத்தறிவால் மீண்டு, மனிதன் தன்னைத் தானே சுற்றி வரவேண்டும் என்கிறது
மார்க்சியம்.
அத்வைதத்திற்குப் பிரபஞ்சம் மாயையானது. மார்க்சியத்தற்கு
மதம் பிரம்மையானது. அத்வைதம் பிரபஞ்ச மாயையிலிருந்து விடுபடவேண்டும் என்கிறது.
மார்க்சியம் மதப் பிரம்மையிலிருந்து விடுபடவேண்டும் என்கிறது.
அதுமட்டும் அல்லாது, சமூக சீர்திருத்தத்தை சுவாமி விவேகானந்தர் ஏற்கவேயில்லை
என்பதுடன் கடுமையாக மறுக்கவும் செய்கிறார். இதன்மூலம் நடைமுறையில் உள்ள சமூகத்தைக்
கட்டிக்காப்பதே அவரது விருப்பம் -அத்வதைத்தின் விருப்பம்- என்று அறிய முடிகிறது.
“பல
நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்படையச்
செய்து வருபவையுமான ஜாதி மற்றும் சமூக சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள்
இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன. நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச்
சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையோக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.”
- ஞான தீபம் 5, பக்கம் 103-104
“ .. உண்பது, குடிப்பது, சமுதாயத்திற்குச்
சிறிது நன்மை செய்வது இவற்றுடன் நிம்மதியாக இருக்கக் கூடாதா? இப்படிப் பலர்
நினைக்கவும் செய்கின்றனர். உலகத்திற்கு
நன்மை செய். அவ்வளவுதான் மதம். அப்பால் என்ன இருக்கிறது என்று மூளையைக் குழப்பிக்
கொள்ளாதேக என்றுதான் மிகப் பெரிய பண்டிதரிலிருந்து மழலை பேசும் குழந்தைவரை
எல்லோருக்கும் சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்லிச் சொல்லி இது ஓர் உண்மைபோலவே
ஆகிவிட்டது.
..
நாம் உலகிற்குப்
பெரிதாக எந்த நன்மையும் செய்துவிட முடியாது. உலகிற்கு நன்மை செய்வது மிகவும்
நல்லதுதான். ஆனால் அவ்வாறு அதிக நன்மை செய்ய நம்மால் முடியுமா? எத்தனையோ நூறு
வருடங்களாக நாம் போராடி வந்திருக்கிறோமே. இந்தக் காலத்தில் உலகிற்கு நிறைய நன்மை
செய்துவிட்டோமா?, உலகின் மொத்த
மகிழ்ச்சியை அதிகரித்துவிட்டோமா? உலகின் மகிழ்ச்சியை வளர்ப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான
வழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நான் கேட்கிறேன், இன்று உலகில்
உள்ள மகிழ்ச்சி ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இருந்ததைவிட அதிகமாக இருக்கிறதா? அது இயலாது.
ஏனென்றால் கடலில் ஓர் இடத்தில் அலை எழுகிறது என்றால், அது இன்னோர் இடத்தில்
பள்ளம் விழுவதன் காரணத்தினால்தான். ஒரு நாடு செல்வம் கொழிப்பதாகவும் ஆற்றல்
மிக்கதாகவும் இருக்கிறது என்றால், அது எங்கேயோ இன்னொரு நாடு வீழ்த்தப்பட்டதன் காரணமாகத்தான்
இருக்க வேண்டும்.
கண்டு
பிடிக்கப்படுகின்ற ஒவ்வோர் எந்திரமும் இருபது பேரைப் பணக்காரர்களாக்கும். அதே
வேளையில் இருபதாயிரம் பேரை ஏழைகளாக்கும். போட்டியின் நியதியே இதுதான். ஆற்றலின்
மொத்தம் எப்போதும் ஒரே அளவாகத்தான் உள்ளது. துன்பம் இல்லாமல் இன்பம் இருக்க
முடியும் என்று சொல்வது நியாயமற்றது. அந்த முயற்சி ஓர் அசட்டுத் துணிச்சலும்கூட.
இந்தச் சாதனங்களை அதிகரிப்பதன்மூலம் நீங்கள் உலகின் தேவைகளை அதிகரிக்கிறீர்கள்.
தேவைகள் அதிகம் என்றால் தணியாத தாகம் என்று பொருள். அதைத் தீர்க்கவே முடியாது.
இந்தத் தேவையை, இந்தத்
தாகத்தை எது திருப்தி செய்ய முடியும்? இந்தத் தாகம் இருக்கும்வரை துன்பத்தையும் தவிர்க்க
முடியாது. இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கையின் இயல்பு.
நீங்கள் நன்மை
செய்வதற்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறதா என்ன? உலகில் வேறு எந்தச்
சக்தியும் வேலை செய்யவில்லையா என்ன? என்றும் இருப்பவரான, எல்லாம் வல்லவரான, கருணைக் கடலான, எப்பொழுதும் விழித்துக் கொண்டிருப்பவரான, உலகம்
தூங்கும்பொழுதும் தூங்காதவரான, கண் இமைகள் அசையாதவரான அந்தக் கடவுள் உங்களிடமும் என்னிடமும்
உலகை ஒப்படைத்துவிட்டுச் செத்துப்போய் விட்டாரா என்ன? இந்தப் பரந்த ஆகாயமே
அல்லவா எப்பொழுதும் திறந்துள்ள அவரது கண்ணாக உள்ளது. அவர் இறந்துவிடவில்லையே!
இந்தப் பிரபஞ்சத்தில் அவர் செயல்படவில்லையா என்ன? அது இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நீங்கள்
அவசரப்பட வேண்டாம். உங்களையும் வருத்தப்படுத்திக் கொள்ளவேண்டாம்.”
- ஞான தீபம் 4, பக்கம் 309-312
இதைப் படிக்கும்போது, சுவாமி விவேகானந்தர்
அத்வைதியா, தீவிரமான
துவைதியா என்ற சந்தேகம் எழுகிறது. நானே கடவுள் தத்துவமசி என்றெல்லாம் சொல்லும்
அத்வைதி, கடவுளிடம்
விட்டுவிடுங்கள், உலகிற்குப்
பெரிதாக எந்த நன்மையும் செய்துவிட முடியாது என்று கூறுவதின் மூலம், யதார்த்த உலகை மாற்ற
முடியாது என்று நமக்குக் காட்டுகிறார். உலகில் காணும் போட்டியைப் பார்த்து இதுதான்
நியதி என்று முடிவெடுத்ததின்மூலம் நிகழும் சமூகத்தைச் செல்வழியிலேயே, எதிர்ப்பின்றி செல்ல
வழிவிடுகிறார். போட்டி, தாகம் என்றெல்லாம்
கூறிவிட்டு, உலகே மாயம்
என்று ஓடி ஒளிகிறார்.
அத்தோடு, நீங்கள்
நன்மை செய்வதற்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறதா என்ன? உலகில் வேறு எந்தச்
சக்தியும் வேலை செய்யவில்லையா? என்று சமூக
மாற்றத்திற்கு பாடுபடுபவர்களைப் பார்த்து கேட்கிறார். எப்பொழுதும் விழித்துக்
கொண்டிருப்பவரான கருணைக் கடலான கடவுள், உலகத்தை நம்மிடம் ஒப்படைத்துவிட்டுச் செத்துப்போய்
விட்டாரா என்ன? என்றும் கேட்கிறார்.
நாமே பிரம்மம் என்று கூறிவிட்டு, துன்பங்களுக்கும்
இன்பங்களுக்கும் நாம்தான் காரணம் என்று சொல்லிவிட்டு இப்போது சமூகச் சிக்கலைப்
போக்குபவர்களை பார்த்து, உலகத்தை
உங்களிடம் கொடுத்துவிட்டு கடவுள் செத்துவிட்டாரா?- என்று வினா எழுப்புவதின் மூலம் கடவுளிடம்்
கொண்டு சேர்க்கிறார்.
சமூகத்தில்
ஓரவஞ்சனை இருப்பதற்குக் கடவுள்மீது குறை சொல்லாதீர்கள். கடவுள்
கருணைமயமானவர். சென்ற பிறவியில் செய்தவினையே இந்த பிறவியின் நிலைமைகள் என்று
கூறிவந்த சுவாமி விவேகானந்தர் இப்போது, (கடவுளும் பொருப்பாக மாட்டார்) சமூகத்தை நீங்களும்
சீர்திருத்த முடியாது என்று கூறிவிடுகிறார்.
ஆக ஓரவஞ்சனையிலும் போட்டியிலும் முரண்பட்ட சமூகத்தை
அப்படியே விட்டுவிடுங்கள். நீங்கள் அவசரப்பட வேண்டாம். உங்களையும்
வருத்தப்படுத்திக் கொள்ளவேண்டாம். அது செல்வழியிலேயே செல்லட்டும் என்ற
முடிவைத்தான் அத்வைதம் வைக்கிறது.
No comments:
Post a Comment