Tuesday 23 July 2013

துவைதம்



மதத்தின் தோற்றம் அனைத்தும் துவைதமே. அதுமட்டுமல்ல உலகில் நடைமுறையிலுள்ள மதம் அனைத்தும் துவைத போக்கைக் கொண்டவையே.

இவ்வுலகைப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் இயற்கையிலிருந்தும் மனிதனிடத்திலிருந்தும் வேறுபட்டவர். இவற்றில் இயற்கையும், மனிதனும் மாற்றத்திற்குட் பட்டவையாகும். கடவுள் மாற்றமேதும் அடையாமல், என்றும் நிலைத்திருப்பவர். இதுவே துவைதத்தின் அடிப்படைக் கருத்தாகும். இந்த இரட்டையை வலியுறுத்துவதனால் இம்மதச் சித்தாந்தத்துக்கு துவைதம் (இரண்டு-ரெட்டை) என்று அழைக்கப்படுகிறது.

கடவுள் சகுணமானவர், அதாவது குணங்களைப் பெற்றவர். அருள்மயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர். கடவுளிடம் அன்பு செலுத்தலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால் அவரது சக்தியை முழுமையாக அறிந்திட முடியாது. அவரே உலகை படைத்தவர். அவர் ஏன் படைத்தார் என்றால், அது அவரது லீலை, அதாவது விளையாட்டு. விளையாட்டு என்றால் மனிதன் விளையாடும் விளையாட்டைப் போன்றதல்ல. அவர் விளையாடுவது  விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதல்ல. அவர் லீலை புரிவது, மனிதன் விளையாட்டில் இன்பம் அடைவதுபோல் தேவையின் பொருட்டல்ல.  அவரது லீலையை மனித அறிவால் அறியமுடியாது. கட்டுண்டு கிடக்கும் மனிதன், கட்டற்ற ஆளுமை பெற்ற கடவுளின் சக்தியை முழுமையாக அறிந்திட முடியாது. மனிதன் சீவாத்மா, கடவுள் பரமாத்மா. மனிதனின் அறிவு சிற்றறிவு, கடவுள் பேரறிவாளர்.

ஆத்மாவைப் பெற்ற மனிதன் (உயிர்), இயற்கையை உள்ளடக்கிய இப்பிரபஞ்சம், அனைத்தையும் ஆளும் கடவுள் ஆகிய முப்பொருள் உண்மையை ஏற்கிறது துவைதம்.

இதனைத் துவைதம்  ஸ்வரூபத்தைப்போல் காலம், ஆகாயம் நித்யமானவை. அகியவற்றைப் பரமாத்மாவால் அழிக்க முடியாதோ எனில், அவை நித்திய வஸ்துகளாக இருப்பதே பரமாத்மாவின் இச்சைப்படியே ஆகும். எனவே ஸ்வரூபம் நித்யமாயினும், அது பரமாத்மாவின் இச்சைக்கு உட்பட்டது. பரமாத்மாவின் சக்தியை யாராலும் ஏதும் செய்ய முடியாது.  (துவைத சித்தாந்த வைஜயந்தி.. பக்கம் 220) என்கிறது. உயிரும், பிரபஞ்சமும் உள்பொருளே, ஆனால் பரமாத்மாவின் இச்சைக்கு உள்ளங்கியவையாக இருக்கிறது. அவற்றின் சுதந்திரம் பரமாத்மாவின் இச்சைக்கு உட்பட்டது.

விஷ்ணுவின் எல்லா குணங்களும் ஸத்யமானவை. ஜீவனுக்கும் ஈஸனுக்கும் உள்ள பேதம் (வேற்றுமை) ஸத்யமானவை. ஜீவஜீவர்களுக்குள் உள்ள பரஸ்பர பேதமும் ஸத்யமானவை, இந்த ஜகத்தும் ஸத்யமானவை 
-ஷ்ரீமன் மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம் , அத்தியாயம்I -68, (பக்கம் 81)
துவைதம் மனித உடலில் ஆத்மா உறைவதாகக் கூறுகிறது.

மனித உடல் கரைந்த பின்பு, மனிதனின் உயிர்ச்்சக்திகள் மனத்திற்குச் செல்கிறது, மனம் பிராணனில் ஒடுங்குகிறது, பிராணன் ஆத்மாவில் ஒடுங்குகிறது என்பது ஆத்மாவைப் பற்றிய கருத்தாகும்.

கர்ம பூமியான, இங்கே மனிதன் கர்மங்களைச் செய்திட வேண்டும். அவ்வாறு கர்மங்கள் செய்திடும்போது புண்ணியத்தையும், பாவத்தையும் சேர்க்கின்றனர்.  புண்ணிய கர்மத்தால் சொர்க்கம் சென்று சொர்க்க போகத்தை அனுபவிக்கின்றனர். புண்ணியத்தின் பலன்களான போகத்தை சொர்கத்தில் கழிந்த பின்பு, முன்பு செய்த பாவங்களின் பலனால் மறுபடியும் பூமியில் பிறந்து கர்மங்களில் ஈடுபடுகின்றனர். பூமியில் செய்திடும் பாவங்களால் நரகம் சென்று பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கின்றனர்.

கடந்த கால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதேபோல் நிகழ்காலத்தால் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. பிறப்பிற்குப்பின் இறப்பு, இறப்பிற்குப் பின் பிறப்பு என்ற தொடர்ச்சியில் பாவ புண்ணியங்கள் சேர்ப்பதும், தீர்ப்பதும் தொடர்கிறது.

இந்த வினைக் கோட்பாட்டால், மக்கள் பாவ, புண்ணியத்திற்குப் பயந்து அல்லது கட்டுப்பட்டு நடப்பதின்மூலம் சமூகத்தின் ஒழுங்கு நிலைநிறுத்தப்படுவதாக மதக் கண்ணோட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இன்று சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் கிளர்ந்து எழாமல், நடைமுறையில் உள்ள சமூகத்துக்கு கட்டுப்பட்டு இருப்பதற்கே, மதம் இவ்வகையான கருத்துக்களை நிலைநிறுத்துகிறது.

தீயவர்கள் மகிழ்வோடு வாழ்வதை சமூகத்தில் பார்க்க முடிகிறது. நல்லவர்கள் அல்லது தீயசெயலில் ஈடுபடாதவர் துன்பத்திலேயே மூழ்கி இருப்பதையும் சமூகத்தில் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் என்ன? இதனை மாற்றுவது எப்படி? என்று கேட்கப்படும் கேள்விக்கு துவைதம் பொதுவாக இந்திய மதங்கள் அனைத்தும்,  அவரவர் முற்பிறவியில் செய்த வினைப் பயனே என்று காரணம் காட்டுகிறது. இன்று தீய செயல் செய்பவர்கள் தண்டிக்கப்படாமல், சுதந்திரமாக நடமாட முடிகிறதே? என்ற கேள்விக்கு, அடுத்த பிறவியில் கண்டிப்பாக இதற்குத் தண்டனை கிடைக்கும் என்று பதில் அளிக்கப்படுகிறது. நடைமுறையில் உள்ள சமூகத்தில் செய்த செயற்பாட்டிற்கு அடுத்த பிறவியில் பதில் கிடைக்கும் என்பது இன்றை சமூகத்தை கட்டிக் காக்கும் முயற்சியேயாகும்.  இந்தப் போக்கு, இன்றைய சுரண்டல் சமூகத்தில் சுரண்டுபவருக்கு சாதகமாகவும், சுரண்டப்படுபவருக்கு பாதகமாகவும் இருக்கிறது.

இன்று வாழும் வாழ்க்கை அவரவர் செய்த வினைக்கு ஏற்ப கிடைத்தவை, அதனால் கிடைத்ததைக் கொண்டு, பொறுமையுடன் வாழ்ந்து சுயதர்மத்தை அதாவது பிறப்பால் உண்டான கடமையினை மனம் கோணாமல் செய்து   -வினையைக் கழித்து- அடுத்த பிறவியில் நல்வாழ்வு கிட்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கோட்பாட்டின் நோக்கமாகும்.

இன்று நல்லவர்கள் அல்லது உழைப்பவர்கள் பாடுபட்டும் வேதனைக்கு ஆளாவது முற்பிறவியின் பயன் என்றும், தீயவர்கள் அல்லது பாடுபடாதவர்கள் சிறப்பான வாழ்வு கிடைத்திருக்கிறது என்றால் அடுத்த பிறவியில் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்கின்றனர்.

இன்றைய வாழ்வின் சிக்கலுக்கு முற்பிறவியை காரணம் காட்டுவதும், இதற்கான தீர்வை அடுத்தபிறவிக்கு கொண்டு செல்வதும், இன்றைய சமூகத்தை தக்கவைப்பதற்கேயாகும்.

சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, உனக்கு என்று விதிக்கப்பட்டுள்ள (சுயதர்ம) கடமைகளைச் செய், அவற்றின் பலன்களை எதிர்பார்த்து மாய்ந்து போகாதே. பகவானே அதற்கான பலன் அளிப்பான். அதை அனுபவி. தர்மங்களை புரியும்போதும், அதற்கான பலன்களை அனுபவிக்கும்போதும் பகவானுடைய நினைவோடு செய்.
-ஷ்ரீ மத்வ தர்சனம்  (சத்யா ஷ்ரீனிவாசன்) பக்கம் 140

மதம் என்ற பெயரால் பல்வேறு சடங்குகளைச் செய்வதென்பது, தம் வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்கேயாகும். இச் சடங்குகளில் பிரார்த்தனை என்பது முதன்மை பெற்றதாகும். வாழ்வில் துன்பங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரார்த்தனையின் மூலம், அதாவது தங்களின் வினையால் உருவான, இந்தத் துன்பகரமான வாழ்வில் இருந்து வேண்டுதலின் மூலம் விடுதலை கிட்டும் என்று நம்புகின்றனர்.

மக்கள் வாழ்வில் சந்தித்த இன்பங்கள், கடவுள் தந்த வரம் அல்லது கடவுள் தந்த வாழ்வு என்கிறது மதம். ஆனால் துன்பத்தை மட்டும் அவரவர் பெற்றது என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

இதுவரை மக்களுக்கு கிடைத்தவை பிரார்த்தனையின் மூலம் அல்ல என்று, துவைத மத வேண்டுதலை, அத்வைத மதவாதியான சுவாமி விவேகானந்தர் அவரது கண்ணோட்டத்தில் மறுக்கிறார்.

உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது, கற்பனைத் தெய்வங்களை நோக்கிப் பிரார்த்திப்பது என்று உங்கள் குறுகிய எண்ணங்களுள் பலவும் மூடநம்பிக்கைகளே என்பது உங்கள் உள்ளத்திற்கே தெரியும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறியது என்று ஒரு சம்பவத்தை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள் பெறும் விடைகள் அனைத்தும் உங்கள் இதயங்களிலிருந்தே பிறந்தவை.
-ஞானதீபம் 4 - பக்கம் 233-234

“ .. இந்தக் கர்ம வலையை நாமே நம்மைச் சுற்றிப் பின்னியிருக்கிறோம். அறியாமை காரணமாக பந்தப்பட்டவர்களைப்போல் நம்மைக் கருதிக்கொண்டு உதவிக்காகக் கதறி அழுகிறோம். ஆனால் உதவி வெளியிலிருந்து வருவதில்லை. நமக்கு உள்ளிருந்தே வருகிறது. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா கடவுள்களிடமும் கதறி அழுங்கள். நான் வருடக்கணக்காகக் கதறி அழுதேன். கடைசியில் உதவி வந்தது. ஆனால் அது எனக்கு உள்ளிருந்துதான் வந்தது. நான் செய்த தவற்றை விலக்க வேண்டியதாயிற்று. இதுதான் ஒரே வழி.
-ஞானதீபம் 4 - பக்கம் 295-296

அத்வைதத்துக்கு எதிராக மத்துவரின் துவைதம்

மத்துவர் சிறப்பாகத்  தமது துவைத மதச் சித்தாந்தத்தை நிலைநிறுத்தியுள்ளார். பொதுவாக இந்திய சித்தாந்தத்தை விளக்கும் அனைத்து அறிஞர்களுமே துவைதத்தை விரிவாக விளக்குவதில்லை. துவைத சித்தாந்தம்  மிகவும் எளிமையானது. புரிந்து கொள்வதற்கு சிரமம் ஏதுமில்லை, விரிவான விளக்கம் தேவையில்லை என்று கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் மத்துவர் தமது சித்தாந்தத்தை நிலைநிறுத்த, அத்வைதம் கூறும் உலகம் மாயை என்பதை மிகச் சிறப்பாக மறுத்து நிறுவியுள்ளார்.

                பிற்கால பவுத்தர்கள் (மாத்யமிகர்கள்) என்று கூறப்படுகின்ற சூனியவாதிகளின் கருத்தும், ஆதிசங்கரரின் அத்வைதக் கருத்தும் நெருங்கிய ஒன்றாக துவைதிகள் பார்க்கின்றனர்.

                மாத்யமிகர்கள் வேதங்களையும், ஆகமங்களையும் மறுக்கும் புத்தமதப் பிரிவினர் ஆவர்.

                சூன்யம் என்ற ஒரே தத்துவம்தான் உண்டு என்பது இவர்களது கொள்கை. இதனை இவர்கள் வெளிப்படையாக உரைப்பர். ஆனால் வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைத்து வைத்திருப்பவர்கள் மாயாவாதிகள் (அத்வைதிகள்) என்கின்றனர் துவைதிகள்.

                பவுத்தர்களுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையே சிறிதளவு கூட வேறுபாடு இல்லை. எதைப் பவுத்தர்கள் சூன்யம் என்று கூறுகிறார்களோ, அதையே மாயாவாதிகள் (அத்வைதிகள்) குணமில்லாத (நிர்குண) பிரம்மம் என்று கூறுகிறார்கள். பவுத்தர்கள், சூனியத்திற்கு உருவம் இல்லை என்றும் மாறுதல் அடையாது என்றும் கூறுவர். இதனையே மாயாவாதிகள் குணங்களற்ற பிரம்மம் என்று கூறுகிறார்கள்.

                மாயாவாதிகளுக்கும், சூன்யவாதிகளுக்கும் இடையே எந்த விதமான வேறுபாடும் கிடையாது, ஆதலால் மாயாவாதிகளை (அத்வைதிகள்) மாறுவேடம் பூண்ட பவுத்தர்கள் (பிரசன்ன பவுத்தர்கள்) என்று துவைதிகள் அழைக்கின்றனர்.

                மேலும் பவுத்தர்கள் பானை செய்வதற்கு குயவன் இருப்பது போல், உலகத்திற்கு இந்த சூன்யம் காரணம் ஆகாது. யாரோ ஒருவருடைய அறியாமையால் உலகம் உண்டாக்கப்பட்டது. அதுதான் காரணம்.

சூன்யம் என்பது வார்த்தைகளால் விளக்கப்பட முடியாத ஒன்று. மாயத் தோற்றத்தால் போர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது இல்லாத ஒரு பொருளை இருப்பதாக கருதுவது இந்த மாயத் தோற்றம். சூன்யம் அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது.

                உதாரணமாக, சூரிய ஒளியின் காரணமாக சிப்பி வெள்ளிபோலத் தோன்றுவது மாதிரி, இருள் காரணமாக, கயிறு பாம்புபோல தோன்றுவது மாதிரி, அறியாமை காரணமாகப் பிரம்மம் (சூன்யம்) உலகம்போல் தோன்றுகிறது.

                இதற்கு மறுப்பாக துவைதம் தமது வாதத்தை வைக்கிறது. கயிறு, பாம்புபோலக் காணப்பட்டால், பாம்பு என்ற ஒரு பொருள் உண்மையாகவே இருக்கவேண்டும். குழந்தை பாம்பைப் பார்த்திராததால், பயமின்றி கயிறைத் தொடுகிறது. ஆனால் பாம்பை பார்த்த பெரியவர்கள், கயிறைத் தொடுவதற்குப் பயப்படுகின்றனர்.

                சூன்யவாதத்திற்கும் மாயாவாதத்திற்கும் இடையே எந்த விதமான வேறுபாடும் இல்லை. சூன்யவாதம் முதலில் தோன்றியது. எனவே சூன்யவாதத்திற்கான கண்டனமே, மாயாவாதத்திற்கும் உரியதாகிறது என்கின்றனர் துவைதிகள்.

                தனிப்பட்ட முறையில் மாயாவாதத்தை கண்டிக்கும் முகமாக துவைதிகள் கூறுவதைப் பார்ப்போம். பிரம்மத்திற்கு இருத்தல் உண்டு என்பதை ஒப்புக்கொண்டால் பிரம்மத்துக்கு குணங்கள் இல்லை (நிர்குண) என்ற மாயாவாதிகளின் வாதம் பொய்யாகிறது. மாயாவாதிகளின் வாதம் தோற்றுப்போகிறது. பிரம்மம்  அசத்க (இல்லாமல் இருப்பது) என்பதை ஒப்புக்கொண்டால், அங்கும் மாயாவாதிகள் மண்ணைக் கவ்வுகின்றனர்.  அசத்க என்றால் சூன்யம். ஒரு பொருள் இருக்க வேண்டும் அல்லது இல்லாமல் இருக்கவேண்டும். இதை விடுத்து வேறு வழியில்லை.  சத்க என்றால் பிரம்மனின் நிர்விசேஷத்வம் அடிப்பட்டு போகிறது.  அசத்க என்றால் பிரம்மம் இல்லை என்றாகிறது. இரண்டு வழிகளிலும் மாயாவாதிகளுடைய வாதம் தோற்றுப்போகிறது.

                மேலும் மத்துவர் கூறுகிறார், ஆகாயத்தில் மரம் இல்லை. செடி, கொடிகள் இல்லை. அப்படியிருக்கும்போது, ஆகாயத்தில் ஒரு அழகிய புஷ்பம் இருக்கின்றது என்று ஒருவன் சொன்னால், அதே நிலைதான் மாயாவாதிகளுக்கும். ஏனென்றால் அந்த புஷ்பம் எப்படியிருக்கும் என்று கேட்டால் விடை கிடைக்காது. அதே மாதிரி மாயாவாதிகளின் பிரம்மம் என்பது அசத் இவற்றுக்கு எந்தவிதமான குணங்களும் இல்லை. அப்படிப்பட்ட பிரம்மம் அவர்களின் யூகத்திற்கு ஏற்றவாறே அமையும் என்பதே துவைதிகளின் கருத்தாகும்.

                இதுவரை பார்வையிட்ட பகுதிகள்  ஷ்ரீஸூமத்வ விஜய மஹா காவ்யம்  என்ற நூலின் பதினைந்தாம் சர்க்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment