Tuesday 23 July 2013

இந்து மதமும் அதன் தத்துவமும்



இந்து மதம் என்று அழைக்கப்படுகிற மதத்திற்குத் தொடக்க காலத்திலிருந்து இப்பெயர் பெற்று வழங்கிவரவில்லை. இடையில் பிற நாட்டவர்களால் வழங்கப்பட்டதாகும். பாரசீகர்களால் சிந்து நதிக்கு அப்புறம் வாழ் மக்களை இந்துக்கள் என்று வழங்கினர்,  பாரசீகர்கள்  சிக என்ற எழுத்தை  இக என்று உச்சரிப்பர். அதன்படி இந்துக்கள் என்றனர். பிறகு சிந்துக்கு அப்புறம் உள்ள இடங்களை இந்துஸ்தான் என்று வழங்கி வரலாயினர்.

எது இந்து மதம், யார் இந்து என்ற கேள்விக்குத் தெளிவான ஒரேமாதிரியான அதாவது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை அளிப்பது என்பது எளிதான செயல் அல்ல. இதற்குக் காரணம் இந்து மதம் முழுமையான நிறுவனப்படுத்தப்படவில்லை, ஆனால் இதனை நிறுவனப்படுத்தப்பட்ட மதமாகக் கருத முடியாது என்று பொருள்கொள்ள முடியாது. முழுமையாக நிறுவனப்படுத்தவில்லை என்றுதான் கூறமுடியும்.

குறிப்பாக சைவம், வைணவம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதே நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் பெரும் பிரிவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதில் நாட்டுப்புற கடவுளும் அவர்களுக்கான வழிபாட்டு முறைகளும் இந்து மதமாக இணைத்துக் கூறப்பட்டாலும், நாட்டுப்புற மதக் கருத்துக்களையோ, கடவுள்களையோ இந்து மதம் அங்கீகரித்ததாகச் சொல்ல முடியாது.

இந்து மதத்திற்கு என்று குறிப்பிட்ட நூல்களை மக்கள் பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்து மதத்திற்குக் குறிப்பிடும்படியான மதநூல்கள் பல்லாயிரம் இருக்கின்றன. அவற்றில் நாட்டுப்புற வழிப்பாட்டு முறைகள், கடவுள்கள் பற்றிய விவரிப்பு ஏதும் கிடையாது, சிறுதெய்வ வழிபாடு என்று அவற்றின் வழிமுறைகளை ஏளனப்படுத்தும்படியான கருத்துகளையே நிறுவனப்படுத்திய இந்து மதங்களின் கண்ணோட்டமாகப் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் இன்று வணங்கப்படும் நாட்டுப்புற வழிபாடுகளிலும், வேத காலத்திற்கு முந்திய குறிப்பாக சிந்துவெளி மக்களால் பின்பற்றப்பட்ட தாய்தெய்வ வழிபாடுகளிலும் இந்து மதத் தொடக்கக் கூறுகளை காண முடிகிறது. இன்றைய இந்து மத சிலை வழிபாட்டுடன், ஆரியர்களின் வருகைக்கு முன்பாக இங்கிருந்த வட்டார மக்களின் வழிபாட்டு முறைகளில் காணப்பட்ட தாய்த்தெய்வ வழிபாட்டுடன் இணைத்துப் பார்க்க முடியும். வேத கால மக்கள் தங்களது வேண்டுதல்களை அக்கினி வளர்த்து வெளிப்படுத்தினர். அதனால்தான் அக்கினியைத் தேவர்களின் புரோகிதர் என்று வேத கவிகள் புகழ்ந்தனர். வேதமுறைக்கு மாறான வட்டார மக்கள் சிலை வழிபாட்டை கடைப்பிடித்தனர்.

வேதங்களிலேயே மிகவும் பழைமைப் பகுதியான ரிக் வேத சங்கிதையில் முழுமை பெற்ற கடவுள்களைப் பார்க்க முடியாது. இயற்கையை உருவகப்படுத்திப் பார்த்தனர் அவ்வளவே, ஆனால் அந்தக் காலகட்டத்தில் வட்டார மக்கள் தாய்த் தெய்வ வழிபாடும், சிலை வழிபாட்டுமுறையையும் கடைப்பிடித்து வந்தனர். இந்தச் சிலைவழிபாட்டு முறைகளையே பின்னைய இந்து மதம் ஏற்றுக்கொண்டது.

இதனை முதலில் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இன்றைய இந்து மதம் என்பது வேதத்தின் தொடர்ச்சி அல்ல. வேதத்தோடு, வட்டார மக்களின் சிலை வழிபாடும் இணைந்ததின் விளைவே என்பதை ஏற்றுக் கொண்டால் தான் இன்றைய வடிவிலான இந்து மதத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா  மதமும் சமூகமும்  என்ற நூலில் எழுதுகிறார்:-
பிற்காலத்தில் இந்துமதம் என அழைக்கப்பட்டதில் இருந்து வந்த பல முக்கிய காரணிகள்   தாய்த்தெய்வங்கள், சிவ வழிபாடு. சில சமயங்களில் பசுபதி (விலங்குகளின் கடவுள்) யாகவும், வேறு சில சமயங்களில் சாதாரண லிங்கக் குறியீடாகவும் இருப்பது, கடவுளை மிருகங்களாகப் பல வடிவங்களில் காண்பது போன்ற பல குறிப்பிடத்தக்க அளவுக்கு இடம் பெற்றிருந்ததாலும். இவை இந்து மதத்திற்கான முக்கிய அடிப்படைகளாக இருப்பினும் வேத நூல்களில் இவற்றுக்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஹரப்பாப் பகுதிகளை அகழ்வாய்வு செய்த பின்னரே, இவற்றுக்கு ஹரப்பா நாகரிகத்துடன் உண்மையான வேர்கள் இருந்ததையும், அது பிற்கால இந்தியர்களின் மத நம்பிக்கைகளிலும், மரபுகளிலும் ஓரளவுக்கு உயிர்வாழ்ந்து வந்ததையும் நம்மால் உணரமுடிகிறது.”
பக்கம் 49

இறுதியில், வேதத்தின் மீது பெரும் மரியாதை இருந்தபோதிலும் இந்தியாவின் மத வரலாற்றில் வேதக் கடவுள்களுக்கு உண்மையில் ஏன் எவ்வித எதிர்காலமும் இல்லை என்ற மிகவும் சிக்கலான அம்சம் குறித்தும் விவாதிக்க முயல்வோம்.

.. நமது உணர்வில் உள்ள எத்தகைய மத உணர்வையும் அல்லது ஆன்மிக மதிப்பையும் அசல் ரிக் வேதத்தின் பழைமை வாய்ந்த பக்கங்களில் எந்த அளவுக்குக் காணமுடியும் என்பது உண்மையில் கேள்விக்குரியதாக உள்ளது.”
பக்கம் 95

கிராமங்களில் காலனியாக ஒதுக்கப்பட்டவர்கள் தமக்கென சில கடவுள்களை வழிபட்டனர், அவர்கள் மிகவும் பழைய வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்தனர். எப்படி ஊருக்குள் அவர்களை அனுமதிக்கவில்லையோ, அதே போல், மாற்றம் பெற்றுவரும் மதத்தை அவர்களுக்கு அளிக்காமல் அல்லது அவர்கள் பின்பற்ற விடாமல், பழைய முறையையே கடைப்பிடிக்க வைத்தனர். நகரத்தில் உள்ள பெரிய கோயில்களில் கிராமங்களில் உள்ள ஆதிக்கசாதி மக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற கிராம மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. கோயில் நுழைவுப் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

இன்று கிராமங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின்  காரணமாக பழைய மத வழிபாட்டு முறைகள் மாற்றம் பெற்று, நிறுவனமான சைவ, வைணவ மதத்தை நோக்கி வருவதைப் பார்க்க முடிகிறது. சைவ வைணவ மதத்தவர்கள் இதனை புரிந்து கொண்டு, இந்தப் போக்குகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்து மதத்தவர்கள் என்று அழைக்கப்படுபவர் அனைவரும் அனைத்து இந்துக் கோயில்களுக்குள் செல்லவும், இந்து வழிபாட்டு முறையும் பின்பற்றவும் அனுமதிக்கப்பட வேண்டும். இந்து மதத்தவர்கள் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படுவது இந்து மதத்திற்கு இன்றைய தேவையாகிவிட்டது.

மூவகை வேதாந்தம்

மேலை நாடுகளில் தத்துவஞானிகளும், மத அறிஞர்களும் தனித்தனியாக செயல்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது, இந்தியாவைப் பொருத்தளவில் இரண்டும் இணைந்து, பின்னிப்பிணைந்து உள்ளன. வேத சம்கிதையில் சடங்குகள் (கர்ம காண்டம்) மட்டுமே காணமுடிகிறது. பின்னால் தோன்றிய உபநிடதங்களின் (ஞான காண்டம்) சில பகுதியில் தத்துவஞானம் தனிப்போக்கில் செல்ல முயற்சித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்து தத்துவஞான உலகில் அதன் போக்குத் தொடரவில்லை. பின்னால் வந்த தத்துவஞானிகளான சங்கரர், ராமாநுசர், மத்துவர் ஆகியோர் தத்துவஞானத்தையும், மதத்தையும் இணைத்தே கொண்டு சென்றனர்.

இந்து மதம் பல்வேறு தத்துவஞானப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் முதன்மையானவை என்று முதல் வரிசையில் வைத்து பேசப்படும்  தத்துவப் பிரிவுக்கு மூவகை வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. இது துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று வேதாந்த கண்ணோட்டத்தை குறிப்பதாகும்.

மூன்று வேதாந்தத்திற்கும் ஆதார நூல்கள் ஒன்றாய் இருக்க, இதன் தத்துவ போக்குகள் மட்டும் எப்படி வேறுபடுகிறது என்பதை பார்ப்போம். வேதம், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிவற்றின் காலகட்டங்கள் மிகவும் நீண்டநெடியதாகும். இதனுள் பல்வேறு கருத்துப்போக்கை பார்க்க முடிகிறது. ஆதார நூல்களில் காணப்படும் சில வாக்கியங்களை மகா வாக்கியங்களாகக் கொண்டு அதற்கு விளக்கம் அளிக்கும்போது, வேறுபட்டு வேதாந்த மதம் மூன்று வகையாகிறது.

உபநிடதங்களில் சில வாக்கியங்கள் சீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்று  பேதக (வேறுபட்ட) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் வேறாக இருந்தாலும், வேறானவற்றில் ஒன்றி அந்தர்யாமியாய் பரமாத்மா இருப்பதாக  பேத அபேதக (வேறுபட்டும் வேறுபடாத) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று  அபேதக (வேறுபாடற்ற) சுருதியாகவும் அமைந்துள்ளது. 

பேத சுருதியை வலியுறுத்தி துவைத வேதாந்தத்தை மத்துவரும், பேதஅபேத சுருதியை வலியுறுத்தி விசிட்டாத்வைத வேதாந்தத்தை ராமாநுசரும், அபேத சுருதியை வலியுறுத்தி அத்வைத வேதாந்தத்தை சங்கரரும் தத்தமது தத்துவஞானத்தையும் மதத்தையும் அமைத்தனர். இந்தக் கருத்துப் போக்குகள் இதற்கு முன்பு மத, தத்துவஞானத்தில் காணப்பட்டாலும் இதனை இம் மூவரும் மேம்படுத்தி விரிவாக்கி வளர்த்தனர்.

6 comments:

  1. இந்து மதம் மிக அண்மைய உருவாக்கம். பழைய காலத்தில் அப்படி ஏதும் இல்லை. இது குறித்து ரொமிலா தாப்பார் எழுதியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. //இந்து மதம் என்று அழைக்கப்படுகிற மதத்திற்குத் தொடக்க காலத்திலிருந்து இப்பெயர் பெற்று வழங்கிவரவில்லை. இடையில் பிற நாட்டவர்களால் வழங்கப்பட்டதாகும்.// என்று தான் நான் எழுதியிருக்கிறேன். இந்து மதம் என்ற சொல்லின் உருவாக்கம் அண்மையானது தான்.

      விவேகானந்தரும் தமது தத்துவத்தை இந்து மதத்தத்துவம் என்று கூறவில்லை வேதாந்தம் என்றே கூறியிருக்கிறார்.

      Delete
    2. இந்து மதமோ அல்லது இந்து மதம் என்று அழைக்கப்படாத இந்து மதமோ பழைய இந்திய பெருநிலப் பரப்பில் இல்லை.சைவம், வைணவம் என்பவை கூட வட்டார அளவினதாக மட்டுமே இருந்தது. இந்து மதம் நவீனகாலக் கண்டுபிடிப்பு.இது குறித்து கற்பனையான சமயக் குழுக்கள் (Imagined Religous Communites- OUP PRESS) என்ற கட்டுரையில் ரொமிலா தாப்பார் விரிவாக எழுதியுள்ளார்கள். இக்கட்டுரைக்கு ஒரு மோசமான தமிழ் மொழிபெயர்ப்பு வந்துள்ளது. மத வாரலாற்றியலில் நாம் தவறான புரிதலை சீர்செய்ய இக்கட்டுரை உதவும்.

      Delete
    3. //இந்து மதம் நவீனகாலக் கண்டுபிடிப்பு.// இது இந்திய பெருநிலப் பரப்பில் இல்லாத ஒன்றா? சைவ வைணவத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றா?

      சைவம், வைணவம் என்பவை இன்றும் வட்டார அளவினதாக மட்டுமானதாக இருக்கிறதா?

      நீங்களே பழைய இந்திய நிலப்பிரப்பில் என்று கூறுகிறிர்கள். பழைய நிலப்புக்கு இந்தியா என்ற பெயரா இருந்தது. இதனை நீங்களும் so called இந்திய நிலப்பு என்ற பொருளில் தானே கையாளுகிறிர்கள்.

      மதம் என்ற பெயரால் இந்திய நிலப்பிரப்பில் கடைபிடிக்கப்படும நடவடிக்கைகளை என்ன பெயரிட்டு அழைப்பதில் குழப்பிக் கொண்டிருந்தால் அதனை எப்போது விமர்சிப்பது. நான் so called இந்து மதம் என்று தான் சொல்லியிருக்கிறேன். இந்திய நிலப்பரப்பில் இல்லாத ஒன்றை விமர்சிக்கவில்லை இருப்பதை தற்காலத்தில் இந்து மதம் என்று அழைக்கப்படுவதை தான் விமர்சித்துள்ளேன். எனது விமர்சனத்தை பற்றி ஏதும் பேசாது, இந்திய நிலப்பிரப்பில் செயற்படும் மதத்தை இந்து மதம் என்று சொல்ல முடியாது என்று சொல்வதானால் மட்டும் என்ன ஏற்படப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

      இந்து மதம் இந்து தத்துவம் என்ற பெயரால் எம் சமூக மக்களை ஒடுக்கப்படும் போது நான் அதனை so called இந்து மதம் என்று குறிப்பிட்டு எதிர்க்கும் போது இந்து மதம் என்ற ஒன்று

      Delete
    4. //இந்து மதம் என்று அழைக்கப்படுகிற மதத்திற்குத் தொடக்க காலத்திலிருந்து இப்பெயர் பெற்று வழங்கிவரவில்லை//

      //எது இந்து மதம், யார் இந்து என்ற கேள்விக்குத் தெளிவான ஒரேமாதிரியான அதாவது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை அளிப்பது என்பது எளிதான செயல் அல்ல. இதற்குக் காரணம் இந்து மதம் முழுமையான நிறுவனப்படுத்தப்படவில்லை, ஆனால் இதனை நிறுவனப்படுத்தப்பட்ட மதமாகக் கருத முடியாது என்று பொருள்கொள்ள முடியாது. முழுமையாக நிறுவனப்படுத்தவில்லை என்றுதான் கூறமுடியும்//


      //குறிப்பாக சைவம், வைணவம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதே நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் பெரும் பிரிவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.//

      //இந்து மதத்திற்கு என்று குறிப்பிட்ட நூல்களை மக்கள் பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்து மதத்திற்குக் குறிப்பிடும்படியான மதநூல்கள் பல்லாயிரம் இருக்கின்றன//

      இப்படியெல்லாம் நீங்கள் எழுதியதால் இந்து மதம் பழைய இந்தியாவில் இல்லை என்றேன்.இந்து மதம் கீழைதேயவிலாளர்களின் கண்டுபிடிப்பு, இந்து தேசியவாதிகள் வளர்த்தது என்பது தாப்பார் வாதம். அது எனக்கு உடன்பாடு. நீங்கள் இந்து மதம் என்ற வேதாந்தம் என்ற தத்துவம் இருப்பதாக வாதிடுவதால் இதை வ்லியுறுத்துகிறேன்.

      இன்றும்கூட சைவம், வைணவம் ஆகியவற்றுக்கு மையப்படுத்தப்பட்ட நிறுவனம் இல்லை. இருந்தால் சொல்லவும். ஆதிசங்கரரைப் பின்பற்றும் சுமர்த்தர்களால் ’இந்துகள்’என்ற கருத்துரு உருவாக்கப்பட்டபோது சைவர்களும் வைணவர்களும் எதிர்த்தனார். மறைமலை அடிகள் இதற்கு உதாரணம். இப்போதும் கிடைக்கும் அண்மைய வெளியீடான தருமை ஆதீனத்தின் ’அத்வைதம்’என்ற நூலும் இதற்கு உதாரணம். ஆனால் பொதுவெளியில் இவர்கள் இந்துகள் என்று ஒற்றுமை பாராட்டுவது எதிரிகளுக்காகதான்.

      அண்மைய இந்து மதத்தின் அதிகாரப் பூர்வ தத்துவம் ஆதிசங்கரர் போதித்த மாயவாதத்தின் புது வடிவமே.

      வேதாந்தம்(வேதத்தின் முடிவுகள்) பலவகைபட்டவை. மூவகை மட்டுமல்ல.அவை பெரும்பாலும் இறையியல்கள், ததுவங்கள் அல்ல.நீங்களே சொல்வது போல அவற்றில் பலவற்றுக்கு பெயரளவில் மட்டுமே வேதத்தோடு சம்பந்தம்.அவை பல்வகையான வழிபாட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவை.அதிகாரப்பூவர்வ வேதாந்தத்தை எதிர்த்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.இதைப் பற்றி கோசாம்பியும் மிருணள்காந்தியும் எழுதியுள்ளனர். இவையெல்லாம் நீங்கள் அறியாததல்ல.

      இந்திய மக்களின் மத மனபான்மை, இறையியல் பற்றி புரிந்துகொள்ள தந்திரநெறி ஆய்வு அவசியம். இதனை சட்டோபாத்தியாயாவின் நெருங்கிய நண்பர் என்.என்.பட்டாச்சார்யா செய்துள்ளார். அவருடய ஆய்வுகள் பயனுடையவை.

      மதம் பற்றிய ஆய்விலும் இந்திய தேசியவாதத்தின் தாக்கமே நாம் இவ்வாறு பேசி கொண்டுள்ளோம்.

      // பழைய நிலப்புக்கு இந்தியா என்ற பெயரா இருந்தது. இதனை நீங்களும் so called இந்திய நிலப்பு என்ற பொருளில் தானே கையாளுகிறிர்கள்.//

      இப்படி நீங்கள் நவ்ய நியாயத்தின்படி தர்க்கித்தால் நாம் இத்துடன் நம் விவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.ஏனென்றால் அதனால் பயனேதும் இல்லை. நானும் உங்களைப் போன்றே மதத்தை மார்க்சிய நோக்கில் அணுக முயலும் சிறியவன்.

      தங்களைப் போன்றே எல்லாவித இறையியல்களை, கருத்துமுதல்வாதத் தத்துவங்களை எதிர்க்கிறேன்.

      Delete

    5. //இப்படியெல்லாம் நீங்கள் எழுதியதால் இந்து மதம் பழைய இந்தியாவில் இல்லை என்றேன்.// நான் இந்தியாவில் இந்து மதம் தொன்று தொட்டு வந்ததாக கூறவில்லை. இந்து என்ற வார்த்தை எப்படி வந்தது என்று கூறியுள்ளேன். அதற்குள் நீங்கள் போகத் தயாராக இல்லை.

      //அண்மைய இந்து மதத்தின் அதிகாரப் பூர்வ தத்துவம் ஆதிசங்கரர் போதித்த மாயவாதத்தின் புது வடிவமே.// இவ்வாறு கூறுகிற உங்களிடம் மதம் பற்றிய ஆய்வில் இந்திய தேசியவாதத்தின் தாக்கத்தை காண முடிகிறது.

      வேதாந்தம் மூவகைப்பட்டது என்பதையே நான் ஏற்றுக் கொள்ளவில்லை. துவைதம், விசிட்டாத்வைதம் புறநிலை கருத்துமுதுல்வாத வகைப்பட்டது, அத்வைதம் அகநிலை கருததுமுதல்வாத வகைப்பட்டது என்று இரண்டுக்குள் அடங்கும் என்று தான் எனது தொடர்ந்து எழுதியிருக்கிறேன். அதனை படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் வேதாந்தம் பலவகைப்பட்டது என்றும் அது பொரும்பாலும் இறையியல்கள் தத்துவம் அல்ல என்ற உங்களது முடிவு எதைநோக்கி போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

      சிறியவன் கருத்து பெரியவன் கருத்து என்று கருத்தை நான் பிரிப்பது இல்லை.

      Delete