ராமாநுசர் தமது வைணவ மதத்தின் தத்துவப் போக்கை விசிஷ்டாத்வைதம் என்று அழைக்கிறார். இதற்குச்
சிறப்புப் பொருந்திய அத்வைதம் என்று பொருள்கொள்கின்றனர். ஆனால் இதனைச் சிறப்புப்
பொருந்திய துவைதம் என்று அழைப்பதே பொருத்தமானதாகும்.
பரம்பொருளைத் தத்துவமசி என்று அகத்தில் வைத்துப்
பார்ப்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருளைத் தமக்கு வேறான புறத்தில்
வைத்து பார்ப்பது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருள் புறத்தில்தான்
இருக்கிறது என்கிறார் ராமாநுசர், மேலும் அந்தர்யாமியாய் அனைத்திலும் உறைகிறார் என்றும்
குறிப்பிடுகிறார். அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் சாட்சியாகத்தான உள்ளார். எந்தச் செயற்பாட்டிற்கும்
அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் பொறுப்பாக மாட்டார்.
புறநிலைக் கருத்துமுதல்வாதமான துவைதம் புறத்தில் உள்ள
பரம்பொருளின் ஆற்றலை அறிந்திட முடியாது. அதன் லீலையைப் புரிந்து கொள்ள முடியாது.
நமது சிந்தனை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. பரம்பொருளின் ஆற்றலை அளந்தறிய முடியாது
என்கிறது. விசிஷ்டாத்வைதம் பரம்பொருள் வேறு, ஆத்மா வேறு முக்தி பெற்ற ஆத்மாவும் வைகுண்டத்தில்
பெருமாளுக்குக் கைங்கரியம் செய்திடுவதே பணியாகும் என்று பரமாத்மாவையும்
ஜீவாத்மாவையும் வேறுபடுத்தியே பார்க்கிறது.
தத்துவ அடிப்படையில் துவைதமும் விசிஷ்டாதவைதமும்
ஒன்றானாலும், வழிபாட்டில்
பக்தியைவிட பரபக்தியை விசிஷ்டாத்வைதம் ஏற்கிறது.
பக்தி என்பது முக்தியடையும் வரை கடைப்பிடிக்க வேண்டியதாகும்.
பலன்கிடைக்க நெடுங்காலமாகும் என்பதாலும், அதனைப் பின்பற்றுவது
கடினமானது என்பதாலும் பரபக்தியையே நாடுகின்றனர். பரபக்தி என்பது சரணாகதி
அடைதலாகும். பரமாத்மாவிடம் ஜீவாத்மா முழுமையாகச் சரணடைவதையே இது குறிப்பிடுகிறது.
துவைதமும் சரணடைதல் பற்றிக் கூறினாலும், இதனை முதன்மைப்படுத்திச் சிறப்பித்து கூறுவது
விசிஷ்டாத்வைதமே.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறு என்பது மட்டுமல்லாது, பரமாத்மாவிடம்
ஜீவாத்மா சரணடைவதே சிறந்ததாகக் குறிப்பிடுவதால், விசிஷ்டாத்வைதத்தைச் சிறப்புப் பொருந்திய
துவைதம் என்றழைப்பதே பொருத்தமானதாகும்.
சித்து, அசித்து, ஈஸ்வரன் என்ற மூன்று உண்மைப் பொருளை துவைதம் போன்றே
விசிஷ்டாத்வைதமும் ஏற்கிறது.
“சித்து
உயிர்களின் தொகுதியையும். அசித்து என்பது உயிரற்ற பொருட்தொகுதியையும், ஈஸ்வரன் என்பது
பரம்பொருளையும் குறிக்கிறது.
.. எம்பெருமான், அவரவர்க்கு ஏற்ற
வகையில் அருள்புரிந்து காப்பதை இயல்பாகக் கொண்டவன். உடலையே ஆன்மாவாகக் கருதி, அதன்மீது விருப்பம்
கொண்டு வாழும் மக்களும், அவனைச் சரண்
அடைந்தால், பகை, பிணி முதலியவற்றை
நீக்கி, அவரவர்கள்
வேண்டிய, உண்டி, உடை போன்ற உலகியல்
இன்பங்களையும் அருள்வான். முக்தியில் விருப்பமுடைய முமுட்சுக்களுக்கு உலகத்
தொடர்பை நீக்கி, பரமபதத்தை
அளிப்பவன் இவன்”
-வைணவம் தந்த
வளம், பக்கம் 122
டாக்டர்.ஆ.இராமபத்திரன்
அவரவர்க்கு ஏற்ற வகையில் அருள்புரிந்து காப்பதை இறைவன்
இயல்பாய்க் கொண்டுள்ளான் என்றுரைப்பதின் மூலம், அந்தந்த மனிதனின் வினைக்கு ஏற்ப இவ்வுலக வாழ்க்கை
அமைந்துள்ளது என்று விளக்குகிறது. இன்றைய உலகில் மக்கள் படும் துன்பங்களுக்கு
மாற்றாக சுயதர்மத்தை ஒழுங்காகக் கடைபிடித்துப் பழைய வினையை நீக்கினால், அடுத்த பிறவியில்
சிறந்த வாழ்வு கிட்டும் என்று வழிகாட்டுகிறது இத் தத்தவம்.
துவைதத்ததைப் போல் இதுவும், உலகத்தை விளக்குகிறதே தவிர மாற்ற முயலவில்லை.
No comments:
Post a Comment