Friday, 12 January 2018

சமுதாய வாழ்நிலையும் சமுதாய உணர்வும் – கி.ஷஹ்நாஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

சமுதாயத்தின் வரலாறு இயற்கையின் வளர்ச்சியிலிருந்து கணிசமாக மாறுபடுகிறது. இயற்கையில் உணர்வுள்ள சக்திகள் கிடையாது, அங்கே வளர்ச்சி தன்னிச்சையாக நடைபெறுகிறது. சமுதாயத்தில் விஷயம் வேறு விதமானது. இங்கே உணர்வும் சித்தமும் கொண்ட மனிதர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் தம்முன் குறிப்பிட்ட கடமைகளை வைத்து அவற்றை நிறைவேற்ற முயலுகின்றனர். உணர்வு, கருத்துக்கள், லட்சியங்கள் தான் சமுதாய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்ற ஒரு மாயை ஏற்படுகிறது.

உண்மையில் இப்படியல்ல. உணர்வோடு இயங்கக் கூடிய மக்கள் அவர்களது சித்தத்தையும் பகுத்தறிவையும் சாராத குறிப்பிட்ட புறவயச் சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். மனிதன் வாழ வேண்டுமானுல் அவன் உணவு, உடை, காலணி, இருப்பிடம் முதலிய பொருளாயதத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தேவைகள் அவனை இயற்கையுடனும் மற்ற மக்களுடனும் குறிப்பிட்ட உறவு முறைகளை வைத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கின்றன: அவன் நிலத்தை உழுகிறான், வீடுகளைக் கட்டுகிறான், ஆடையைத் தைக்கிறான், உற்பத்திக் கருவிகளைத் தோற்றுவிக்கிறான், தனது உழைப்பின் விளைபொருட்களைப் பரிவர்த்தனை செய்து கொள்கிறான். இவை எல்லாவற்றிலிருந்தும் மனிதர்களின் பொருளாயத வாழ்க்கை, அவர்களது சமுதாய வாழ்நிலை உருவாகிறது. சமுதாயத்தில் எந்தவிதக் கருத்துக்களும் தத்துவங்களும் நிலவினாலும் இவற்றைச் சாராத புறவய விதிகள் இந்த வாழ்நிலைக்கு உண்டு.
பொருளாயத நலன்களை உற்பத்தி செய்வதற்கான மக்களின் உழைப்பு நவடிக்கைதான் சமுதாய வாழ்நிலையின் முக்கிய சாரமாகும்.
...
உழைப்பு என்பது மனித வாழ்க்கைக்கும், சமுதாயம் நிலவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் இயற்கையான மற்றும் அவசியமான நிபந்தனையாகும்.

மக்களின் சமுதாய வாழ்நிலைதான் அவர்களது சமுதாய உணர்வை அதாவது கண்ணோட்டங்கள், கருத்துக்கள், சித்தாந்தங்கள், தத்துவங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை, சுருங்கக் கூறின் சமுதாயத்தினுடைய ஆன்மீக வாழ்வின் உள்ளடக்கமாக எவை விளங்குகின்றனவோ, அவையனைத்தையும் நிர்ணயிக்கின்றது. சமுதாய உணர்வின் பல்வேறு வடிவங்களில் மக்களது சமுதாய வாழ்நிலையின் நிபந்தனைகளும் முதிர்ச்சியடைந்த தேவைகளும் ஒரளவு முற்றிலுமாகப் பிரதிபலிக்கின்றன.

எந்த ஒரு கருத்தையும் அல்லது தத்துவத்தையும் எடுத்துக் கொண்டாலும் அவற்றின் வேர்கள் எப்போதும் சமுதாய வாழ்நிலையில், சமுதாய வாழ்க்கையின் பொருளாயாத சூழ்நிலைகளில் இருக்கும். சமுதாய வளர்ச்சியின் அடிப்படையை மக்களின் உணர்வில் தேடாமல், அவர்களது சமுதாய வாழ்நிலையில், பொருளாயத நலன்களின் உற்பத்தி வளர்ச்சியில் தேடி வேண்டும் என்று முக்கிய முடிவு இதிலிருந்து தோன்றுகிறது.”

(சமூக விஞ்ஞானம்)

No comments:

Post a Comment