Wednesday, 14 May 2014

ஆதிசங்கரர் இறைமறுப்பாளரல்ல- அவர் உலக மறுப்பாளர்

       ஆதிசங்கரரை இறைமறுப்பாளர் என்று கூறுவது தவறாகும்.

      ஆதிசங்கரரை இறைமறுப்பாளர் என்றுரைப்பதை, மார்க்சிய விளக்கமாக கூறுவது அபத்தமானதாகும்.

      ஆதிசங்கரர் கடவுளை (பிரம்மத்தை) அகத்தில் கண்டவர், அவரது தத்துவமான அத்வைதம் அகநிலைக் கருத்துமுதல்வாதமாகும்.

      துவைதம் கடவுளை (பிரம்மத்தை) புறத்தில் காண்கிறது. அதனால் துவைதத்தின் தத்துவம் புறநிலை கருத்துமுதல்வாதமாகும்.

      தோழர் இ.எம்.எஸ் போன்றோர்கள் கூறுகின்ற, ‘கடவுளை மறுக்கின்ற வகையில் பொருள்படும்படும் அளவுக்கு ஆதிசங்கரர் பிரம்மம் பற்றிய தன்னுடைய போதனையை வளர்த்தார்’ என்ற வாதம் ஆதிசங்கரரின் கருத்துக்குப் புறம்பானதாகும். 

      ஆதிசங்கரரை இறைமறுப்பாளராக பார்ப்பது, அத்வைதத்தின் கருத்துமுதல்வாதத் தன்மையை புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடாகும்.

      ஆதிசங்கரர் புறஉலகை மறுத்து, அதனை மாயை என்கிறார். கடவுளை (பிரம்மத்தை) மறுக்கவில்லை. தத்துவமசி -நீயே அது- அதாவது நீயே பிரம்மம் (கடவுள்) என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறார். இது எப்படி கடவுள் மறுப்பாகும். மனிதனில் இருந்து அப்பால் பிரம்மத்தை (கடவுளை) காண்கிற போக்கை மறுத்து, அந்த பிரம்மத்தை (கடவுளை) அகத்தில் காணவேண்டும் என்றார்.

ஆதிசங்கரர் தமது “விவேகசூடாமணி” என்ற நூலின், பாடல் 252ல் கூறுகிறார்:-
"உறக்கத்தில் கற்பிக்கப்பட்ட இடம், காலம், பொருள், அறிபவன் முதலிய எல்லாம் எங்ஙனம் பொய்யோ அங்ஙனமே இங்கும் விழிப்பு நிலையில் உலகு உனது அஞ்ஞானத்தால் ஆக்கட்டிருப்பதால்-பொய்யே.

எக்காரணத்தால் இந்த உடல், இந்திரியங்கள், பிராணன், அகங்காரம் முதலியவையும் பொய்யோ அக்காரணத்தால் அமைதி நிறைந்ததும் மாசற்றதும் இரண்டற்றதுமான எந்த பொருளுண்டோ -தத்துவமசி- அதுவாக நீ உளாய்"

ஆதிசங்கரர் பிரம்மம் உண்மையானது உலகம் பொய்யானது என்கிறார். இதுவே அவரது அத்வைதத்தின் அடிப்படை. 20வது பாடலில் அவர் கூறுகிறார், “பிரம்மம் மெய் உலகம் பொய் (பிரம்மம் சத்தியம் ஜகத் மித்யா) என்றிவ்வடிவான திடமான நிச்சய புத்தி எதுவோ அந்த நிச்சய புத்தி நித்யா நித்ய வஸ்து விவேகம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது”

86வது பாடல், “உடல், மனைவி, மக்கள் ஆகியவற்றில் மதிமயக்கமாகிற கொடிய எமனை வெல்லுவாயாக. அவனை வென்றே முனிவர்கள் விஷ்ணுவின் பரமபதம் எனப்படும் அந்நிலைமை அடைகிறார்கள்”

415வது பாடல், “கற்பனையற்றதும் என்றுமுள்ள இயல்புடைய ஆத்மாவாவதுமான பிரம்மாகிய அக்கினியில், இந்தப் பிரபஞ்சத்தை வேருடன் நன்கு எரித்துவிட்டு பிறகு சிறந்த ஞானியானவன் தான் தானாகவே என்றும் பரிசுத்த அறிவு வடிவினனும் ஆனந்த வடிவின்னுமாய் நிலை பெற்று நிற்கிறான்.”

246வது பாடல், "இந்த ஸ்தூல பிரபஞ்சம் உண்மையன்று, இந்த சூக்குமப் பிரபஞ்சம் உண்மையன்று, கயிறில் காணப்பட்ட பாம்பு போலும் கனவில் கண்ட காட்சிபோலும் கற்பனை செய்யப்பட்ட காரணத்தால் அவை உண்மையாகா"

இப்படி பிரபஞ்சத்தை மறுக்கின்ற அவரது கருத்தை முன்வைத்து பேசாமல், அவர் இறைமறுப்பாளர் என்றும், மார்க்சியத்துடன் அவரை முடிச்சுப்போடுவதும் வேடிக்கையான தத்துவ விவாதமாகும்.

      புறஉலகை மட்டும் ஏற்றுக் கொள்கிற மார்க்சியமும், புறவுலகை மறுக்கிற அத்வைதமும் இணைப்பதற்கு எந்த வித ஒற்றுமையும் இல்லாத நேரெதிர் துருவங்களாகும்.

      மதத்தில் கடவுள் என்று குறிப்பிடுவதும், தத்துவத்துறையில் பிரம்மம் என்று குறிப்பிடுவதும் கருத்துமுதல்வாதப் போக்கேயாகும். கடவுளும் பிரம்மமும் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்ற அனுமானித்தில் ஒன்றுபடுகிறது.

      ஆதிசங்கரரை கடவுள் மறுப்பாளராக முன்வைக்கும் வாதங்கள், கருத்துமுதல்வாதம் மற்றும் பொருள்முதல்வாதம் பற்றிய கருத்துத் தெளிவின்மையையே வெளிப்படுத்துகிறது.

தோழர் இ.எம்.எஸ்:-
"இந்தியாவின் கருத்துமுதல்வாதப் பிரிவை, ஆதிசங்கரர், தன்னுடைய அத்வைத வேதாந்தத் தத்துவத்தைக் கொண்டு, மிக அற்புதமாக மிகவும் சாதுர்யமான நுண்ணறிவுடன் விளக்கியவராவார் (பிரம்மத்தைத் தவிர அனைத்தையும்) கடவுளையும் கூட மறுக்கின்ற வகையில் பொருள்படும் அளவிற்கு அவர் "பிரம்மம்" பற்றிய தன்னுடைய போதனைகளை வளர்த்தார்." (ஆதிசங்கரரும் அவரது தத்துவமும் ஒரு மார்க்சியப் பார்வை)

உலகத்தைப் படைத்தவராக மதம், உருவக் கடவுளைக் குறிப்பிடுகிறது.

உலகத்தைப் படைத்தவராக தத்துவம், பிரம்மம் என்ற சக்தியைக் குறிப்பிடுகிறது.

கடவுள் பிரம்மம் பற்றிய குழப்பமான கருத்தை தோழர் இ.எம்.எஸ் முன்வைத்துள்ளார்.

பிரம்மத்தை இறைவன் (ஈஸ்வரன்) என்று கூறுவதில் ஆதிசங்கரருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, விவேகசூடாமணியின் 232ஆம் பாடலில், "இந்த உலகு உண்மையாக இருக்குமேயானால் ஆத்மாவின் அளவற்ற தன்மைக்கு அழிவு ஏற்படும், வேதமும் பிரமாணமில்லாமல் போகும், ஈசுவரனுக்கு பொய் பேசிய குற்றம் ஏற்படும், மஹாத்மாக்களுக்கு இம்மூன்றும் நல்லதெனச் சம்மதிக்கக் கூடியவையாகா"

233ஆம் பாடலில், "பொருட்களின் உண்மை உணர்ந்தவரான பகவான் "நான் அவற்றினிடம் இருப்புடையவனும் அல்லன், மேலும் பொருட்கள் என்னிடம் இருப்புடையனவும் அல்ல" என்று இங்ஙனமே கூறியுள்ளார்". இங்கே ஆதிசங்கரர் கீதைக் கிருஷ்ணனைக் குறிப்பிடுகிறார்.

கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் பற்றியும் கதம்பமான கருத்துடையவராகவே தோழர் இ.எம்.எஸ் காணப்படுகிறார்.

"கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் இரு நேரெதிர் துருவங்கள் என்றும், அவை எங்கும், எப்போதும் ஒன்றையொன்று எதித்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் இக்கேள்வி பாவித்துக் கொள்கின்றது. யதார்த்த வாழ்விலும், மனிதனின் சிந்தனையிலும் உள்ள மற்ற எதிரிடைகளைப் போல, கருத்துமுதல்வாத மற்றும் பொருள்முதல்வாத தத்துவார்த்தப் போக்குகளும், மாயாவாத (metaphysics) ரீதியாக அல்லாமல், இயக்கவியல் ரீதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை அது கவனிக்கத் தவறுகின்றது.

கருத்துமுதல்வாதமோ அல்லது பொருள்முதல்வாதமோ இயங்காமல் இருப்பவை அல்ல, இரண்டுமே எப்போதும் ஒன்றையொன்று மறுத்தவண்ணம் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன, இரண்டிற்கும் இடையில் புதுப்புது வடிவங்களில் நிகழும் போராட்டம் மனிதசிந்தனையின் வளர்ச்சி விதியாகும். ஆதலால், பொருள்முதல்வாதம் தன்னளவிலேயே கருத்துமுதல்வாதத்தை விட மேலானது அல்லது கருத்துமுதல்வாதம் தன்னளவிலேயே கீழானது என்கின்ற கேள்விக்கே இடமில்லை." (ஆதிசங்கரரும் அவரது தத்துவமும் ஒரு மார்க்சியப் பார்வை)

தோழர் இ.எம்.எஸ்-யின், பாட்டாளி வாக்கத்தின் தத்துவப் போக்கு பொருள்முதல்வாத அடிப்படையிலானது என்பதையே மறுத்திடுகிற இந்தக் குழப்பமான கருத்து, கதம்பப் போக்காக காட்சியளிக்கிறது.

எங்கெல்ஸ், கருத்துமுதல்வாதம் மற்றும் பொருள்முதல்வாதம் என்பது தமது அடிப்படை கருத்தால் இரண்டு முகாமாகப் பிரிந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்;-

"எது முதன்மையானது, ஆன்மாவா இயற்கையா என்னும் பிரச்சினை – அப்பிரச்சினை கிறிஸ்துவத் திருச்சபையைப் பொறுத்தவரை இப்படியொரு கேள்வியாய் கூர்மையாக்கி முன்வைக்கப்பட்டது: கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?

இந்தக் கேள்விக்குத் தத்துவவாதிகள் அளித்த பதில்கள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்தன. இவர்களுள் இயற்கையைவிட ஆன்மாவின் முதன்மையை வலியுறுத்தி, அதன்காரணமாக, இறுதி நிலையில், ஏதோ ஒரு விதத்தில் உலகம் படைக்கப்பட்டது என்று அனுமானித்துக் கொண்டவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமைச் சேர்ந்த தத்துவவாதிகளிடயே, எடுத்துக்காட்டாக ஹெகல் போன்றவர்களிடையே, உலகத்தின் உருவாக்கம் பற்றிய கருத்து கிறிஸ்துவ மதத்தில் இருப்பதைக் காட்டிலும் மேலும் சிக்கலானதாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. இயற்கையை முதன்மையாகக் கருதிய மற்றவர்கள் பொருள்முதல்வாத முகாமின் பல்வேறு கருத்துப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டு கூற்றுகளும் தொடக்கத்தில் இதைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. இந்த நூலிலும் வேறு எந்தப் பொருளிலும் அவை பயன்படுத்தப்படவில்லை." (லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

அதே போல் பொருள்முதல்வாதம் ஒன்றே பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்பதையும் அதிலிருந்து விலகிச் செல்லும ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறானது என்று மார்க்சும் எங்கெல்சும் கருதினர் என்பதோடு, பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு பாதுகாத்தனர் என்பதை, லெனின் சுட்டிக்காட்டுகிறார்:-
"மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வ்தத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள்.

எங்கெல்ஸ் எழுதிய லுத்விக் ஃபாயர்பாக், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கையேடாகும்" (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

வர்க்க உணர்வு பெறுகிற மற்றும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளிகளுக்கு, அவர்கள் பொருளமுதல்வாதத்தை உறுதியாக பின்பற்றுவதற்கு கதம்பவாதம் மிகவும் கேடுவிளைவிக்கும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கருத்துமுதல்வாதம் வழங்கியுள்ள பங்களிப்பை உயர்வாக மதித்தனர் என்று தவறான கருத்தை நம்முன்வைக்கிறார் தோழர் இ.எம்.எஸ்:-
"வரலாற்றின் மகத்தான தத்துவார்த்த கருத்துமுதல்வாதியான ஹெகலின் சீடர்களான மார்க்சையும், எங்கெல்சையும் போலவே, மனித அறிவுக்கு கருத்துமுதல்வாதம் வழங்கியுள்ள கொடையை லெனின் மிக உயர்வாக மதித்தார்" (ஆதிசங்கரரும் அவரது தத்துவமும் ஒரு மார்க்சியப் பார்வை) 

ஹெகலின் கருத்துமுதல்வாதத்தின் சீடராக மார்க்ஸ், தம்மை அழைத்துக் கொள்ளவில்லை. ஹெகலின் இயக்கவியலின் சீடராகவே கூறியுள்ளார். அதுவும் ஹெகலின் கருத்துமுதல்வாத மாயாவாத வடிவத்திலான இயக்கவியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் ஹெகலின் இயக்கவியலைப் பற்றியும், தமது இயக்கவியல் ஹெகலின் இயக்கவியல் வழிமுறையிலிருந்து வேறுபட்டது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்:-
"ஹெகலிய இயக்கவியலின் மாயாவாத அமிசத்தை, சுமார் முப்பது ஆண்டுகள் முன்னரே, அது மோகத்துக்குரிய மோஸ்தராக இருந்து வந்த காலத்திலேயே, நான் கண்டன விமர்சனத்துக்குள்ளாக்கினேன்.
..
..அந்த மாபெரும சிந்தனையாளரின் மாணவன் நான் என்று பகிரங்கமாகப் பறைசாற்றினேன்,..

ஹெகலின் கையில் இயக்கவியல் மாயாவாதத் தன்மைக்கு உள்ளாகிறதென்றாலும், அதன் பொதுவான செயற்பாட்டு வடிவத்தை விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் முதன்முதலாக முன்வைத்தவர் அவரே. அவரிடம் இயக்கவியல் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறது. மாயாவாதச் சிப்பிக்குள் மறைந்துள்ள அறிவார்ந்த முத்தைக் காண வேண்டுமானால், அதனை நேராகத் திருப்பி நிறுத்த வேண்டும்."

"எனது இயக்கவியல் வழிமுறை ஹெகலிய வழிமுறையில் இருந்து வேறுபட்டது மட்டுமன்று, அதற்கு நேர் எதிரானதுமாகும். ஹெகலுக்கு, மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது, சிந்தனை நிகழ்முறையானது- இதனை அவர் "கருத்து" என்ற பெயரில் சுயேச்சையான கர்த்தாவாகவே மாற்றி விடுகிறார்- எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும், எதார்த்தஉலகம் "கருத்தின்" புற வடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை. மாறாக எனக்கு, கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிப்பலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை" (மூலதனம் முதல் தொகுதி- இரண்டாம் ஜெர்மன் பதிப்புக்குப் பின்னுரை)

இவைகளை முன்வைத்தே மார்க்சும் எங்கெல்சும், பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர் என்கிறார் லெனின். தோழர் இ.எம்.எஸ் அவர்களின் கதம்பப் போக்கு, பொருள்முதல்வாதத்தை ஆதரிக்கவோ பாதுகாக்கவோ திறமற்றதாகிறது.

பாட்டாளி வாக்கத்துக்கு, பொருள்முதல்வாதமே என்றும் பயன்படும், சுரண்டல் வர்க்கத்துக்கு கருத்துமுதல்வாதம் துணையுரியும்.

இப்போதைக்கு லெனின் கூறிவற்றோடு முடித்துக் கொள்வோம்:-
"மார்க்சின் தத்துவம் முழுநிறைவு பெற்ற தத்துவப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள்முதல்வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாக தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது." (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

லெனின் கூறுகிறபடி பாட்டாளி வர்க்கத்துக்கு அறிவுச் சாதனங்களை பொருள்முதல்வாதமே வழங்கும். பாட்டாளி வர்க்கத்தினர் தமது விடுதலைக்கு பொருள்முதல்வாதத்தை பின்பற்றி வெற்றி நடைபோடட்டும். பாட்டாளிகளுக்கு பொருள்முதல்வாதம் என்பது அறிவுச் சாதனங்களை வழங்குகிற, முழுநிறைவு பெற்ற தத்துவமாகும். இந்த வகையில் பொருள்முதல்வாதம் பாட்டாளிகளுக்கு தன்னளவில் முழுமைப்பெற்ற மேலான தத்துவமாகும்.


Sunday, 11 May 2014

அத்வைத ஒருமைக்கும் மார்க்சிய ஒருமைக்கும் உள்ள வேறுபாடு

விவேகானந்தர்:-
“அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவுக்கு இடமில்லை. தனி ஆன்மாவைப் படைத்தது மாயை என்பது அவர்களின் வாதம். உண்மையில் தனி ஆன்மாக்கள் இருக்க முடியாது. இருப்பது உண்மையில் ஒன்றே என்றால் நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்க முடியும்? நாம் அனைவரும் ஒன்றே. பன்மையைக் காண்பது தான் தீமைக்கான காரணம். நான் வேறு,  பிரபஞ்சம் வேறு என்று உணர ஆரம்பித்த உடனே முதலில் பயம் தோன்றுகிறது, தொடர்ந்து துன்பம் உண்டாகிறது.”- ஞான தீபம் 4, பக்கம் 10

பன்மையில்தான் தீமைக்கான காரணம் இருக்கிறது. அதனால் பன்மையை மறுத்து ஒருமையை வலியுறுத்துகிறார் சுவாமி விவேகானந்தர். புறத்தில் காணும் பன்மைகள் தோற்றங்களே. உண்மையில் நாமெல்லாம் ஆத்ம நிலையில் ஒருமை பெற்றவர்களேயாவோம். நாமே பிரம்மம். தத்துவமசி - அதுநாமே என்கிறது அத்வைதம். இதன் அடிப்படையில் தான் அத்வைத நன்னெறி அமைந்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். அத்வைத ஒருமை ஆத்மாவில் (பிரம்மத்தில்) நிலவுகிறது, மார்க்சிய ஒருமை பொருளாயதத்தில் அடங்கியிருக்கிறது.

தொடக்க காலத்திலிருந்து உலகத்தின் ஒருமையை அறிவதுபற்றி தத்துவம் முயற்சித்து வருகிறது. உலகத்தின் மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பின்னணியில் உள்ளவற்றை ப்பற்றி ஒரு கோட்பாட்டை அமைத்துக்கொள்ள முயன்றனர். அதாவது உலகத்தில் காணப்படும் பல்வேறுபட்ட பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது எது என்று தேடினர்.

கருத்துமுதல்வாதமும், மதமும் உலகத்தின் ஒருமையை ஆன்மீகத்தில் கண்டது. அத்வைதம் அதனை உலக ஆத்மாவில் அதாவது பிரம்மத்தில் கண்டது.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், உலக ஒருமையின் உண்மையை அதன் பொருளாயதத் தன்மையில் கண்டது. அதாவது மனிதனது உணர்வைச் சாராமல் புறநிலையின் இருப்பில் அந்த ஒருமையை அறிந்துகொண்டது.

அத்வைத ஒருமை

இயற்கைக்கு அப்பாற்பட்ட பரமகருத்து அதாவது பிரம்மம்தான் உலகத்திற்குக் காரணம் என்று அத்வைதம் கருதுகிறது. கணக்கில்லா தோற்றங்களாகக் காட்சியளிக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய் இருப்பது இந்த ஒன்றே.  நாம் காணும் அனைத்தும், நாம் உணரும் அனைத்தும் இந்த ஒன்றே. இதனை  ஏகம் சத்  அதாவது அனைத்தும் இந்த ஒன்றே என்று நிறுவுகிறது அத்வைதம்.

நான்  என்னும் உணர்வில் உறைந்துள்ளது ஆத்மா,  நீ  என்று சொல்லும்போது அங்கே உறைந்துள்ளதும் அந்த ஆத்மாவே. அந்த நீ யாராக இருந்தாலும், இருப்பதென்பது இந்த ஒரே ஆத்மாவான பிரம்மமே. நீ என்பவற்றில் ஞானியோ, கொலைகாரனோ, ஆடோ, மாடோ, செடியோ, மரமோ கூட இருக்கலாம். அனைத்தும் ஒன்றேயான ஆத்மாவே. அதாவது பன்மையாகக் காணும் இவையனைத்தும் பிரம்மத்தின் மாயையான வெளிப்பாடே என்கிறது அத்வைதம்.

“எல்லா தீமைகளும் தோன்றக் காரணம் எல்லையற்ற ஒன்றிற்கு நாம் எல்லையை ஏற்படுத்தியதே என்கிறான் வேதாந்தி.”- ஞான தீபம் 4, பக்கம் 295

அத்வைதம் பிரம்மத்தின், அவித்தையினால் (அறியாமையினால்) உண்டான  தோற்ற வெளிப்பாடே, பன்மையாகத் தெரியும் உலகம். இந்த உலகம் பிரம்மத்தைப் பற்றிய அறியாமையின் வெளிப்பாடாக இருப்பதால், இந்த பிரபஞ்சமும் பிரம்மமும் ஒருமை பெற்றதாக அறிவிக்கிறது.

மார்க்சிய ஒருமை

அளவற்ற பொருட்கள் மற்றும் புலப்பாடுகளினால் மனிதன் சூழப்பட்டுள்ளான். இவையனைத்தும் குறிப்பிட்ட உறவுநிலையில் காணப்படுகிறது. ஒரு பொருள் மற்றொன்று அத்துடன் வேறொன்று என பொருட்களிடையே இணைப்பைப் பெற்றுள்ளது. இப்பொருட்கள் அனைத்தும் விசும்பிலும் காலத்திலும் இருக்கின்றன.

நிகழ்வுகளின் தொடர்வரிசை, அதாவது மற்றவற்றுடன் ஏற்படும் தொடர்ச்சி, நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை கால அளவைக் குறிக்கின்றன. உலகில் இயக்கம் என்பது விசும்பு காலம் ஆகியவற்றின் ஊடே இணைந்தும் பிணைந்தும் ஒருமையாய் நடைபெறுகிறது. விசும்பும், காலமும், பருப்பொருளில் இருந்து பிரித்தறிய முடியாத புறநிலையானதாகும். இவற்றின் இயக்கம் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்குகிறது.

ஒருமை வாதத்தின் உயர்ந்த முரணற்ற ஒரே வடிவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கை, சமூகம் இத்துடன் மனித உணர்வின் பலவிதமான நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சிடைந்து வருகின்ற பருப்பொருளின் உற்பத்திகளே என்கிறது.

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகத்தின் பொருளாயத ஒருமையை வலியுறுத்துகின்றன. உலகத்தின் பொருளாயத ஒருமை என்பது பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் இடைத் தொடர்புகளையும் இடைச் சார்புநிலையையும் உள்ளடங்கிய வகையில் இருக்கிறது. பூமிக்கும் வானத்துக்கும் ஈர்ப்புச் சக்தியின் விசை, சக்தியின் வேறுபட்ட வடிவங்களின் பரிமாற்றம், வேதியல் மூலகங்கள் உருமாற்றம் அடைதல், தாவர உலகத்துக்கும் விலங்கின உலகத்துக்கும் உள்ள ஒற்றுமை, இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவு, ஆகியவற்றை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டுள்ளது எனவே, இயற்கை மற்றும் சமூக சக்திகளை அனுசரித்து அவற்றை மனித சமூகத்திற்குச் சேவை செய்ய வைப்பதைச் சாத்தியமாக்குகிறது.


அத்வைத ஒருமை பிரம்ம நிலையோடு ஒடுங்கி, இயற்கை மற்றும் சமூகத்தின் புறநிலையான உண்மையினை மறுத்து, சமூக மாற்றம் என்பதைச் சாத்தியமற்றது என்கிறது.

Tuesday, 4 February 2014

மக்களது அபினியே மதம்

ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்து விட்டது என்றும், மதத்தைப் பற்றிய விமர்சனம், அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது என்றும் மார்க்ஸ் “மார்க்ஸ்  ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு” என்ற நூலினுடைய முன்னுரையில் முதலிலேயே கூறியுள்ளார்.

பரலோகத்தில் தம்மை விடுவிக்கும் அதிமானுடனைக் காண விரும்பிய மனிதன் அங்குத் தமது சொந்தப் பிரதிபிம்பத்தையே கண்டான். அந்த அதிமானுடத்தில், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது, அதனால்  மனிதன் தனது உண்மையான யதார்த்தத்தைக் கண்டறிந்தாக வேண்டும்.

இதனை அடுத்து மத எதிர்ப்பின் அடிப்படையை விவரிக்கிறார். இதுவே இந்த முன்னுரையின் சாரம்சம் என்று சொல்லலாம்.

மதத்தை மனிதன்தான் படைத்தான், மதம் மனிதனை படைக்கவில்லை. இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளது. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, மதம் ஆன்மீக மணத்தோடு குறிப்பிடும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

தம்மை விடுவிக்கும் சக்தி என்று கருதிவந்த பரலோக அதிமானுடன் என்பவன் இகலோக மனிதனின் பிரதிபிம்பம்தான் என்பதை அறிந்து, அதனிடம் நம்பியிருத்தல் பயனற்றது என்பதைத் தெரிந்து, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பதை, ஆன்மீக மணம் கமழும் மறுஉலகத்தை மறுதலிக்கும் போராட்டமாக மாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்.

இதனை மேலும் விரிவாக்கி, மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக விளங்கும் மதம், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்கிறார் மார்க்ஸ். இது மக்களின் அபினியாக உள்ளது

இதனை சில மார்க்சிய அறிஞர்கள்!! இதயம் இழந்தவர்களுக்கு இதயமாகவும், ஆன்மாவை இழந்தவர்களுக்கு ஆன்மாவாகவும் மதம் உதவுகிறது என்று மாற்றி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர். இங்கு மார்க்ஸ் கூறிய  “இது மக்களின் அபினியாக உள்ளது”  என்பதற்கும், பொருள்மாற்றி விளக்குகின்றனர்.

“ஒடுக்கப்பட்ட வர்க்க சமூகத்தி்ல், புகலற்ற மனிதன் மதத்திடம் கற்பிதமான உதவியை நாடுகிறான். தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது. அந்தத் துன்பத்திற்கு உண்மையான, நிரந்தரமான நிவாரணத்திற்குத் தற்காலிக நிவாரணம் மாற்றாக முடியாது. அதேபோல், மதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றது”

மார்க்சின் கருத்திற்கு மாறாக கூறப்படும் விளக்கம் இந்த வழியிலேயே செல்கிறது. 

பல காலத்திற்கு முன்பே லெனின் இதற்கான விளக்கத்தை தெளிவோடு எழுதியிருக்கிறார்.  “மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேணும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்”  (சோஷலிசமும் மதமும்) இங்கே லெனின், மார்க்சினுடைய கருத்தான மக்களின் அபினியே மதம் என்பதற்கு மிகத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து கூறுகிறார்:-
“வர்க்க உணர்வு படைத்த நவீன காலத் தொழிலாளி, பெருவீத ஆலைத் தொழிலால் வளர்த்து ஆளாக்கப்பட்டு  நகர வாழ்வினால் ஒளியூட்டப் பெற்ற இந்தத் தொழிலாளி, மதத்தின் தப்பெண்ணங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, விண்ணுலக வாழ்வைக் குருமார்களிடத்தும் முதலாளித்துவப் பித்தர்களிடத்தும் விட்டுவிட்டு, தனக்கு இங்கே மண்ணுலகில் நல்வாழ்வைப் போராடிப் பெற முயலுகின்றான். இன்றையப் பாட்டாளி வர்க்கம் சோஷலிசத்தின் பக்கம் அணி திரளுகின்றது. சோஷலிசமானது மதத்தின் இருளுக்கு எதிரான போரில் விஞ்ஞானத்தைப் படைசேர்த்துக் கொள்கிறது. இப்பொழுதே இம்மையில், மண்ணுலகில்  நல்வாழ்வுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடச் செய்வதன்மூலம், அது அவர்களை மரணத்துக்குப் பிற்பாடான மறுமையில் நம்பிக்கை வைப்பதிலிருந்து விடுவிக்கிறது” 
-சோஷலிசமும் மதமும்

மார்க்சின் இந்த முன்னுரையின் விளக்கமாகத்தான், லெனின் சுருக்கமாகவும் தெளிவுபடவும் கூறியிருக்கிறார்.

மார்க்சின் முன்னுரைக்குச் செல்வோம்.

உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கு, மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை மறுதலிப்பது மக்களுக்கு அவசியமாகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை (புறநிலைமைகளை) விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம் பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்குப் பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

மதபிரமைகளை விலக்குவதற்காக எழுதப்பட்டதே இந்த முன்னுரை. மதபிரமையிலிருந்து விடுபட முடியாதவர்கள் இதனைப் புரிந்துகொள்ள முடியாமல் திணருகின்றனர்.

மதத்தின் மகிழ்ச்சி என்பது மாயையானதே என்பதை அறிந்து, கம்யூனிஸ்ட்டுகள் அதிலிருந்து விடுபட வேண்டும், மற்றவர்கள் விடுபடுவதற்குத் துணைபுரிய வேண்டும், இந்தப் புரிதலில் பின்தங்கியவர்கள் விடுபடுவதற்கான (புற) நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவது பற்றியும் தெளிவாக மார்க்ஸ் கூறுயிருக்கிறார். இதனை மறைத்துவிட்டுத் தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு, அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ, அதே போல மதமும் தற்காலிகமாக கேட்கும் உதயை அளிக்கிறது என்று கருத்துரைப்பது மார்க்ஸ் கணணோட்டத்திற்கு முரணானதாகும்.  மாயையான மகிழ்விலிருந்து விடுபட்டு உண்மையான மகிழ்வை அடைவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியதின் அவசியம்பற்றியே இந்த முன்னுரையில் மார்க்ஸ்  வலியுறுத்துகிறார்.

மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியன்தான் மதம் என்கிறார் மார்க்ஸ்.

இந்த மாயைச் சூரியனான மதத்தைவிட்டு வெளிவந்து, மனிதன் தனக்கான விடுதலையை தனது உலகத்தில் படைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு மனிதன் தன்னைத்தானே சுற்றிவர வேண்டும். மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியனான மதத்திடமிருந்து விலக வேண்டும்.

தற்போதைய வரலாற்றின் கடமை என்பது உண்மைக்கு மாறான உலகம் (பரலோகம்) மறைந்தவுன், உண்மையான உலகை இங்கு நிறுவுவதற்குப் பாடபட வேண்டியதுதான்.

மனிதனுக்கு அந்நியமான பரலோக அதிமானுடனின் திரை கிழிபடும்போது, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அந்நியப்படுத்தும் தன்மையான திரைகிழிந்து போகிறது. இதன்படி பரலோகம் பற்றிய விமர்சனம் இந்த பூவுலகம் பற்றிய விமர்சனமாக மாற்றம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மதத்தைப் பற்றிய விமர்சனம், உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது என்று மதத்தைப் பற்றிய விமர்சனத்தை அனைத்தும் பற்றிய விமர்சனமாக மார்க்ஸ் கொண்டு செல்கிறார்.

பொருளாயத பலத்தை, பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் கொள்கை என்பது மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, அது ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்கிறார் மார்க்ஸ்.  மார்க்சின் இந்தக் கருத்தும் அதிகமாகப் புரட்டப்படுகிறது.

இங்கு மார்க்ஸ் கொள்கை என்று சொல்வது,  பொதுவாக கொள்கை  என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவிதப் பொதுவான கொள்கை என்றாலும் அது அனைத்து மக்களைப் பற்றிக்கொண்டு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்று கூறவில்லை. அதாவது எந்த வர்க்கத் தன்மை என்றெல்லாம் குறிப்பிடவில்லை.

எந்த வர்க்கத்தின் கருத்தாயினும் அது பொது மக்கள் அனைவரையும் பற்றிக் கொண்டால், பொருளாத சக்தியாக மாறிவிடுகிறது என்று பொருள் கொள்வோமாயின் மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்துபவராவோம். ஏன் என்றால், சமூகம் வர்க்கமாகப் பிளவுற்று இருக்கும்போது கருத்து என்பது அனைவருக்குமானதாக இருக்க முடியாது என்பதை மார்க்சியம் விளக்கியிருக்கிறது. அதன்படி ஒரு வர்க்கக் கருத்து அவ்வர்க்கத்தினரிடையே மற்றும் அவ்வர்க்கச் சார்புடையவரிடத்திலே பற்றும்போது அது பொருளாயத சக்தியாகிறது என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்றால், ஒரு வர்க்கத்தின் சார்பான கருத்து, பரப்புரையின் மூலம் அனைத்து மக்களையும் பற்றச் செய்திட முடியும் என்ற தப்பான முடிவிற்கு வந்துவிடுவோம். மக்களைப் பற்றிக் கொண்டால் என்று இங்கு மார்க்ஸ் குறிப்பிடுவது கருத்தை அல்ல (Theory) கொள்கையைத்தான்  என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை என்பது வர்க்கச் சார்பானது. இதனைக்  கருத்து  என்று பொதுமைப்படுத்தி விளக்குவது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டத்திற்கே இட்டுச் செல்லும்.

லூக்காஸ், கிராம்சி ஆகியோர், ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் உருவானதின் சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளாமல், வெறும் கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாக கருதிக்கொண்ட பண்பாட்டு மார்க்சியவாதிகள், எந்த வர்க்கத்தின் கருத்தாயினும், அது மக்களைப் பற்றிக் கொண்டால் பொருளாயத சக்தியாகிவிடும் என்று விளக்கம் கொடுத்துவருகின்றனர். 

மார்க்சின் முன்னுரையின் இறுதிப்பகுதியில் கூறியதை இவர்கள் மீறிவிடுகின்றனர்.  “தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தை பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.”   இங்கு பாட்டாளி வர்க்கக் கருத்தின் தோற்றத்தையும் அது கொள்கை வடிவம் பெறுவதையும், அதனைப் பாட்டாளி வர்க்கம் பற்றிக் கொண்டு செயல்பட வேண்டியதையும் வலியுறுத்துகிறது. இதே போலத்தான் அனைத்துக் கருத்துப் பிரிவுகளும், அந்தந்த வர்க்கப் பிரிவுமக்களின் மனத்தைப் பற்றுகிறது என்று விளங்கிக்கொள்ளவேண்டும்.

பொதுவாக இந்த முன்னுரையை ஒருங்கிணைந்து விளங்கிக்கொள்ளாமல், தமக்கு ஏற்றபடி பிரித்து உடைத்து விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் மார்க்ஸ் செறிவோடு தமது கண்ணோட்டத்தை இம்முன்னுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொருள் மாற்றி விளக்கம் அளிப்பவர்கள், கொள்கை என்றவுடன், தாம் வகுத்தளித்த கருத்து அல்லது தாம் ஏற்றுக்கொண்ட கருத்து, பாட்டாளிகளின் மனங்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாக மாறிவிடும் என்று விளக்குகின்றனர். முன்னுரையில் மார்க்ஸ்,  யதார்த்த சித்தி பெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்  என்று தெளிவுபடக் கூறியுள்ளார். அதாவது சிந்தனை யதார்த்தத்திற்கு நெருங்கி இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கத்தின் யதார்த்த (புறநிலை) சூழலால் உருவாகும் சிந்தனை பாட்டாளி வர்க்கச் சிந்தனையாக இருக்கும். முதலாளித்துவ வாழ்நிலையில் உள்ள (புறநிலை) சூழ்நிலை முதலாளித்துவ சிந்தனையையே பிரதிபலிக்கும்.

சமூகத்தில் எவ்வளவோ வர்க்கங்கள் இருக்க சமூக விடுதலைக்குப் பாட்டாளி வர்க்கத்தை மார்க்ஸ் தேர்ந்தெடுத்தது ஏன்? சமூக விடுதலை என்பது அனைவருக்கும் ஒரே நேரத்தில் என்று சொல்லாமல் பாட்டாளி வர்க்கத்திற்கு என்று சொன்னதின் நோக்கம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களே இம்முன்னுரைக்குத் தம் மனம்போனபடி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர்.

இம்முன்னுரையின் இறுதியில் உள்ளவற்றை இணைத்துப் பார்ப்போம்:-
“.. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?
விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன்மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது. எனவே அந்தப்பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.
..வளந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..
தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:
ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம். இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.”


இதில் மார்க்ஸ் விடுதலைக்கான சாத்தியப்பாடு பாட்டாளிவர்க்கத்திடம் இருப்பதையும், பாட்டாளி வர்க்கம் தமது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடமும், தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடத்திலும் காண்பதை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமான பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் சார்புடையதாகும். இங்கே பாட்டாளி வர்க்கத்தின் தத்துவச் சார்பையே மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை புரிந்து கொள்ளாததால்தான், பலபேர் தமது கருத்திற்கு ஏற்ப மார்க்சின் இந்த முன்னுரைக்கு விளக்கம் கொடுக்க முனைகின்றனர்.