Tuesday, 23 July 2013

துவைதம்



மதத்தின் தோற்றம் அனைத்தும் துவைதமே. அதுமட்டுமல்ல உலகில் நடைமுறையிலுள்ள மதம் அனைத்தும் துவைத போக்கைக் கொண்டவையே.

இவ்வுலகைப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் இயற்கையிலிருந்தும் மனிதனிடத்திலிருந்தும் வேறுபட்டவர். இவற்றில் இயற்கையும், மனிதனும் மாற்றத்திற்குட் பட்டவையாகும். கடவுள் மாற்றமேதும் அடையாமல், என்றும் நிலைத்திருப்பவர். இதுவே துவைதத்தின் அடிப்படைக் கருத்தாகும். இந்த இரட்டையை வலியுறுத்துவதனால் இம்மதச் சித்தாந்தத்துக்கு துவைதம் (இரண்டு-ரெட்டை) என்று அழைக்கப்படுகிறது.

கடவுள் சகுணமானவர், அதாவது குணங்களைப் பெற்றவர். அருள்மயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர். கடவுளிடம் அன்பு செலுத்தலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால் அவரது சக்தியை முழுமையாக அறிந்திட முடியாது. அவரே உலகை படைத்தவர். அவர் ஏன் படைத்தார் என்றால், அது அவரது லீலை, அதாவது விளையாட்டு. விளையாட்டு என்றால் மனிதன் விளையாடும் விளையாட்டைப் போன்றதல்ல. அவர் விளையாடுவது  விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதல்ல. அவர் லீலை புரிவது, மனிதன் விளையாட்டில் இன்பம் அடைவதுபோல் தேவையின் பொருட்டல்ல.  அவரது லீலையை மனித அறிவால் அறியமுடியாது. கட்டுண்டு கிடக்கும் மனிதன், கட்டற்ற ஆளுமை பெற்ற கடவுளின் சக்தியை முழுமையாக அறிந்திட முடியாது. மனிதன் சீவாத்மா, கடவுள் பரமாத்மா. மனிதனின் அறிவு சிற்றறிவு, கடவுள் பேரறிவாளர்.

ஆத்மாவைப் பெற்ற மனிதன் (உயிர்), இயற்கையை உள்ளடக்கிய இப்பிரபஞ்சம், அனைத்தையும் ஆளும் கடவுள் ஆகிய முப்பொருள் உண்மையை ஏற்கிறது துவைதம்.

இதனைத் துவைதம்  ஸ்வரூபத்தைப்போல் காலம், ஆகாயம் நித்யமானவை. அகியவற்றைப் பரமாத்மாவால் அழிக்க முடியாதோ எனில், அவை நித்திய வஸ்துகளாக இருப்பதே பரமாத்மாவின் இச்சைப்படியே ஆகும். எனவே ஸ்வரூபம் நித்யமாயினும், அது பரமாத்மாவின் இச்சைக்கு உட்பட்டது. பரமாத்மாவின் சக்தியை யாராலும் ஏதும் செய்ய முடியாது.  (துவைத சித்தாந்த வைஜயந்தி.. பக்கம் 220) என்கிறது. உயிரும், பிரபஞ்சமும் உள்பொருளே, ஆனால் பரமாத்மாவின் இச்சைக்கு உள்ளங்கியவையாக இருக்கிறது. அவற்றின் சுதந்திரம் பரமாத்மாவின் இச்சைக்கு உட்பட்டது.

“விஷ்ணுவின் எல்லா குணங்களும் ஸத்யமானவை. ஜீவனுக்கும் ஈஸனுக்கும் உள்ள பேதம் (வேற்றுமை) ஸத்யமானவை. ஜீவஜீவர்களுக்குள் உள்ள பரஸ்பர பேதமும் ஸத்யமானவை, இந்த ஜகத்தும் ஸத்யமானவை” 
-ஷ்ரீமன் மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம் , அத்தியாயம்I -68, (பக்கம் 81)
துவைதம் மனித உடலில் ஆத்மா உறைவதாகக் கூறுகிறது.

மனித உடல் கரைந்த பின்பு, மனிதனின் உயிர்ச்்சக்திகள் மனத்திற்குச் செல்கிறது, மனம் பிராணனில் ஒடுங்குகிறது, பிராணன் ஆத்மாவில் ஒடுங்குகிறது என்பது ஆத்மாவைப் பற்றிய கருத்தாகும்.

கர்ம பூமியான, இங்கே மனிதன் கர்மங்களைச் செய்திட வேண்டும். அவ்வாறு கர்மங்கள் செய்திடும்போது புண்ணியத்தையும், பாவத்தையும் சேர்க்கின்றனர்.  புண்ணிய கர்மத்தால் சொர்க்கம் சென்று சொர்க்க போகத்தை அனுபவிக்கின்றனர். புண்ணியத்தின் பலன்களான போகத்தை சொர்கத்தில் கழிந்த பின்பு, முன்பு செய்த பாவங்களின் பலனால் மறுபடியும் பூமியில் பிறந்து கர்மங்களில் ஈடுபடுகின்றனர். பூமியில் செய்திடும் பாவங்களால் நரகம் சென்று பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கின்றனர்.

கடந்த கால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதேபோல் நிகழ்காலத்தால் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. பிறப்பிற்குப்பின் இறப்பு, இறப்பிற்குப் பின் பிறப்பு என்ற தொடர்ச்சியில் பாவ புண்ணியங்கள் சேர்ப்பதும், தீர்ப்பதும் தொடர்கிறது.

இந்த வினைக் கோட்பாட்டால், மக்கள் பாவ, புண்ணியத்திற்குப் பயந்து அல்லது கட்டுப்பட்டு நடப்பதின்மூலம் சமூகத்தின் ஒழுங்கு நிலைநிறுத்தப்படுவதாக மதக் கண்ணோட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இன்று சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் கிளர்ந்து எழாமல், நடைமுறையில் உள்ள சமூகத்துக்கு கட்டுப்பட்டு இருப்பதற்கே, மதம் இவ்வகையான கருத்துக்களை நிலைநிறுத்துகிறது.

தீயவர்கள் மகிழ்வோடு வாழ்வதை சமூகத்தில் பார்க்க முடிகிறது. நல்லவர்கள் அல்லது தீயசெயலில் ஈடுபடாதவர் துன்பத்திலேயே மூழ்கி இருப்பதையும் சமூகத்தில் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் என்ன? இதனை மாற்றுவது எப்படி? என்று கேட்கப்படும் கேள்விக்கு துவைதம் பொதுவாக இந்திய மதங்கள் அனைத்தும்,  அவரவர் முற்பிறவியில் செய்த வினைப் பயனே என்று காரணம் காட்டுகிறது. இன்று தீய செயல் செய்பவர்கள் தண்டிக்கப்படாமல், சுதந்திரமாக நடமாட முடிகிறதே? என்ற கேள்விக்கு, அடுத்த பிறவியில் கண்டிப்பாக இதற்குத் தண்டனை கிடைக்கும் என்று பதில் அளிக்கப்படுகிறது. நடைமுறையில் உள்ள சமூகத்தில் செய்த செயற்பாட்டிற்கு அடுத்த பிறவியில் பதில் கிடைக்கும் என்பது இன்றை சமூகத்தை கட்டிக் காக்கும் முயற்சியேயாகும்.  இந்தப் போக்கு, இன்றைய சுரண்டல் சமூகத்தில் சுரண்டுபவருக்கு சாதகமாகவும், சுரண்டப்படுபவருக்கு பாதகமாகவும் இருக்கிறது.

இன்று வாழும் வாழ்க்கை அவரவர் செய்த வினைக்கு ஏற்ப கிடைத்தவை, அதனால் கிடைத்ததைக் கொண்டு, பொறுமையுடன் வாழ்ந்து சுயதர்மத்தை அதாவது பிறப்பால் உண்டான கடமையினை மனம் கோணாமல் செய்து   -வினையைக் கழித்து- அடுத்த பிறவியில் நல்வாழ்வு கிட்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கோட்பாட்டின் நோக்கமாகும்.

இன்று நல்லவர்கள் அல்லது உழைப்பவர்கள் பாடுபட்டும் வேதனைக்கு ஆளாவது முற்பிறவியின் பயன் என்றும், தீயவர்கள் அல்லது பாடுபடாதவர்கள் சிறப்பான வாழ்வு கிடைத்திருக்கிறது என்றால் அடுத்த பிறவியில் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்கின்றனர்.

இன்றைய வாழ்வின் சிக்கலுக்கு முற்பிறவியை காரணம் காட்டுவதும், இதற்கான தீர்வை அடுத்தபிறவிக்கு கொண்டு செல்வதும், இன்றைய சமூகத்தை தக்கவைப்பதற்கேயாகும்.

“சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, உனக்கு என்று விதிக்கப்பட்டுள்ள (சுயதர்ம) கடமைகளைச் செய், அவற்றின் பலன்களை எதிர்பார்த்து மாய்ந்து போகாதே. பகவானே அதற்கான பலன் அளிப்பான். அதை அனுபவி. தர்மங்களை புரியும்போதும், அதற்கான பலன்களை அனுபவிக்கும்போதும் பகவானுடைய நினைவோடு செய்.”
-ஷ்ரீ மத்வ தர்சனம்  (சத்யா ஷ்ரீனிவாசன்) பக்கம் 140

மதம் என்ற பெயரால் பல்வேறு சடங்குகளைச் செய்வதென்பது, தம் வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்கேயாகும். இச் சடங்குகளில் பிரார்த்தனை என்பது முதன்மை பெற்றதாகும். வாழ்வில் துன்பங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள் பிரார்த்தனையின் மூலம், அதாவது தங்களின் வினையால் உருவான, இந்தத் துன்பகரமான வாழ்வில் இருந்து வேண்டுதலின் மூலம் விடுதலை கிட்டும் என்று நம்புகின்றனர்.

மக்கள் வாழ்வில் சந்தித்த இன்பங்கள், கடவுள் தந்த வரம் அல்லது கடவுள் தந்த வாழ்வு என்கிறது மதம். ஆனால் துன்பத்தை மட்டும் அவரவர் பெற்றது என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.

இதுவரை மக்களுக்கு கிடைத்தவை பிரார்த்தனையின் மூலம் அல்ல என்று, துவைத மத வேண்டுதலை, அத்வைத மதவாதியான சுவாமி விவேகானந்தர் அவரது கண்ணோட்டத்தில் மறுக்கிறார்.

“உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது, கற்பனைத் தெய்வங்களை நோக்கிப் பிரார்த்திப்பது என்று உங்கள் குறுகிய எண்ணங்களுள் பலவும் மூடநம்பிக்கைகளே என்பது உங்கள் உள்ளத்திற்கே தெரியும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறியது என்று ஒரு சம்பவத்தை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள் பெறும் விடைகள் அனைத்தும் உங்கள் இதயங்களிலிருந்தே பிறந்தவை.”
-ஞானதீபம் 4 - பக்கம் 233-234

“ .. இந்தக் கர்ம வலையை நாமே நம்மைச் சுற்றிப் பின்னியிருக்கிறோம். அறியாமை காரணமாக பந்தப்பட்டவர்களைப்போல் நம்மைக் கருதிக்கொண்டு உதவிக்காகக் கதறி அழுகிறோம். ஆனால் உதவி வெளியிலிருந்து வருவதில்லை. நமக்கு உள்ளிருந்தே வருகிறது. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா கடவுள்களிடமும் கதறி அழுங்கள். நான் வருடக்கணக்காகக் கதறி அழுதேன். கடைசியில் உதவி வந்தது. ஆனால் அது எனக்கு உள்ளிருந்துதான் வந்தது. நான் செய்த தவற்றை விலக்க வேண்டியதாயிற்று. இதுதான் ஒரே வழி.”
-ஞானதீபம் 4 - பக்கம் 295-296

அத்வைதத்துக்கு எதிராக மத்துவரின் துவைதம்

மத்துவர் சிறப்பாகத்  தமது துவைத மதச் சித்தாந்தத்தை நிலைநிறுத்தியுள்ளார். பொதுவாக இந்திய சித்தாந்தத்தை விளக்கும் அனைத்து அறிஞர்களுமே துவைதத்தை விரிவாக விளக்குவதில்லை. துவைத சித்தாந்தம்  மிகவும் எளிமையானது. புரிந்து கொள்வதற்கு சிரமம் ஏதுமில்லை, விரிவான விளக்கம் தேவையில்லை என்று கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் மத்துவர் தமது சித்தாந்தத்தை நிலைநிறுத்த, அத்வைதம் கூறும் உலகம் மாயை என்பதை மிகச் சிறப்பாக மறுத்து நிறுவியுள்ளார்.

                பிற்கால பவுத்தர்கள் (மாத்யமிகர்கள்) என்று கூறப்படுகின்ற சூனியவாதிகளின் கருத்தும், ஆதிசங்கரரின் அத்வைதக் கருத்தும் நெருங்கிய ஒன்றாக துவைதிகள் பார்க்கின்றனர்.

                மாத்யமிகர்கள் வேதங்களையும், ஆகமங்களையும் மறுக்கும் புத்தமதப் பிரிவினர் ஆவர்.

                சூன்யம் என்ற ஒரே தத்துவம்தான் உண்டு என்பது இவர்களது கொள்கை. இதனை இவர்கள் வெளிப்படையாக உரைப்பர். ஆனால் வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைத்து வைத்திருப்பவர்கள் மாயாவாதிகள் (அத்வைதிகள்) என்கின்றனர் துவைதிகள்.

                பவுத்தர்களுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையே சிறிதளவு கூட வேறுபாடு இல்லை. எதைப் பவுத்தர்கள் சூன்யம் என்று கூறுகிறார்களோ, அதையே மாயாவாதிகள் (அத்வைதிகள்) குணமில்லாத (நிர்குண) பிரம்மம் என்று கூறுகிறார்கள். பவுத்தர்கள், சூனியத்திற்கு உருவம் இல்லை என்றும் மாறுதல் அடையாது என்றும் கூறுவர். இதனையே மாயாவாதிகள் குணங்களற்ற பிரம்மம் என்று கூறுகிறார்கள்.

                மாயாவாதிகளுக்கும், சூன்யவாதிகளுக்கும் இடையே எந்த விதமான வேறுபாடும் கிடையாது, ஆதலால் மாயாவாதிகளை (அத்வைதிகள்) மாறுவேடம் பூண்ட பவுத்தர்கள் (பிரசன்ன பவுத்தர்கள்) என்று துவைதிகள் அழைக்கின்றனர்.

                மேலும் பவுத்தர்கள் பானை செய்வதற்கு குயவன் இருப்பது போல், உலகத்திற்கு இந்த சூன்யம் காரணம் ஆகாது. யாரோ ஒருவருடைய அறியாமையால் உலகம் உண்டாக்கப்பட்டது. அதுதான் காரணம்.

சூன்யம் என்பது வார்த்தைகளால் விளக்கப்பட முடியாத ஒன்று. மாயத் தோற்றத்தால் போர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது இல்லாத ஒரு பொருளை இருப்பதாக கருதுவது இந்த மாயத் தோற்றம். சூன்யம் அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது.

                உதாரணமாக, சூரிய ஒளியின் காரணமாக சிப்பி வெள்ளிபோலத் தோன்றுவது மாதிரி, இருள் காரணமாக, கயிறு பாம்புபோல தோன்றுவது மாதிரி, அறியாமை காரணமாகப் பிரம்மம் (சூன்யம்) உலகம்போல் தோன்றுகிறது.

                இதற்கு மறுப்பாக துவைதம் தமது வாதத்தை வைக்கிறது. கயிறு, பாம்புபோலக் காணப்பட்டால், பாம்பு என்ற ஒரு பொருள் உண்மையாகவே இருக்கவேண்டும். குழந்தை பாம்பைப் பார்த்திராததால், பயமின்றி கயிறைத் தொடுகிறது. ஆனால் பாம்பை பார்த்த பெரியவர்கள், கயிறைத் தொடுவதற்குப் பயப்படுகின்றனர்.

                சூன்யவாதத்திற்கும் மாயாவாதத்திற்கும் இடையே எந்த விதமான வேறுபாடும் இல்லை. சூன்யவாதம் முதலில் தோன்றியது. எனவே சூன்யவாதத்திற்கான கண்டனமே, மாயாவாதத்திற்கும் உரியதாகிறது என்கின்றனர் துவைதிகள்.

                தனிப்பட்ட முறையில் மாயாவாதத்தை கண்டிக்கும் முகமாக துவைதிகள் கூறுவதைப் பார்ப்போம். பிரம்மத்திற்கு இருத்தல் உண்டு என்பதை ஒப்புக்கொண்டால் பிரம்மத்துக்கு குணங்கள் இல்லை (நிர்குண) என்ற மாயாவாதிகளின் வாதம் பொய்யாகிறது. மாயாவாதிகளின் வாதம் தோற்றுப்போகிறது. பிரம்மம்  அசத்க (இல்லாமல் இருப்பது) என்பதை ஒப்புக்கொண்டால், அங்கும் மாயாவாதிகள் மண்ணைக் கவ்வுகின்றனர்.  அசத்க என்றால் சூன்யம். ஒரு பொருள் இருக்க வேண்டும் அல்லது இல்லாமல் இருக்கவேண்டும். இதை விடுத்து வேறு வழியில்லை.  சத்க என்றால் பிரம்மனின் நிர்விசேஷத்வம் அடிப்பட்டு போகிறது.  அசத்க என்றால் பிரம்மம் இல்லை என்றாகிறது. இரண்டு வழிகளிலும் மாயாவாதிகளுடைய வாதம் தோற்றுப்போகிறது.

                மேலும் மத்துவர் கூறுகிறார், ஆகாயத்தில் மரம் இல்லை. செடி, கொடிகள் இல்லை. அப்படியிருக்கும்போது, ஆகாயத்தில் ஒரு அழகிய புஷ்பம் இருக்கின்றது என்று ஒருவன் சொன்னால், அதே நிலைதான் மாயாவாதிகளுக்கும். ஏனென்றால் அந்த புஷ்பம் எப்படியிருக்கும் என்று கேட்டால் விடை கிடைக்காது. அதே மாதிரி மாயாவாதிகளின் பிரம்மம் என்பது அசத் இவற்றுக்கு எந்தவிதமான குணங்களும் இல்லை. அப்படிப்பட்ட பிரம்மம் அவர்களின் யூகத்திற்கு ஏற்றவாறே அமையும் என்பதே துவைதிகளின் கருத்தாகும்.

                இதுவரை பார்வையிட்ட பகுதிகள்  ஷ்ரீஸூமத்வ விஜய மஹா காவ்யம்  என்ற நூலின் பதினைந்தாம் சர்க்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

இந்து மதமும் அதன் தத்துவமும்



இந்து மதம் என்று அழைக்கப்படுகிற மதத்திற்குத் தொடக்க காலத்திலிருந்து இப்பெயர் பெற்று வழங்கிவரவில்லை. இடையில் பிற நாட்டவர்களால் வழங்கப்பட்டதாகும். பாரசீகர்களால் சிந்து நதிக்கு அப்புறம் வாழ் மக்களை இந்துக்கள் என்று வழங்கினர்,  பாரசீகர்கள்  சிக என்ற எழுத்தை  இக என்று உச்சரிப்பர். அதன்படி இந்துக்கள் என்றனர். பிறகு சிந்துக்கு அப்புறம் உள்ள இடங்களை இந்துஸ்தான் என்று வழங்கி வரலாயினர்.

எது இந்து மதம், யார் இந்து என்ற கேள்விக்குத் தெளிவான ஒரேமாதிரியான அதாவது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை அளிப்பது என்பது எளிதான செயல் அல்ல. இதற்குக் காரணம் இந்து மதம் முழுமையான நிறுவனப்படுத்தப்படவில்லை, ஆனால் இதனை நிறுவனப்படுத்தப்பட்ட மதமாகக் கருத முடியாது என்று பொருள்கொள்ள முடியாது. முழுமையாக நிறுவனப்படுத்தவில்லை என்றுதான் கூறமுடியும்.

குறிப்பாக சைவம், வைணவம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதே நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் பெரும் பிரிவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதில் நாட்டுப்புற கடவுளும் அவர்களுக்கான வழிபாட்டு முறைகளும் இந்து மதமாக இணைத்துக் கூறப்பட்டாலும், நாட்டுப்புற மதக் கருத்துக்களையோ, கடவுள்களையோ இந்து மதம் அங்கீகரித்ததாகச் சொல்ல முடியாது.

இந்து மதத்திற்கு என்று குறிப்பிட்ட நூல்களை மக்கள் பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்து மதத்திற்குக் குறிப்பிடும்படியான மதநூல்கள் பல்லாயிரம் இருக்கின்றன. அவற்றில் நாட்டுப்புற வழிப்பாட்டு முறைகள், கடவுள்கள் பற்றிய விவரிப்பு ஏதும் கிடையாது, சிறுதெய்வ வழிபாடு என்று அவற்றின் வழிமுறைகளை ஏளனப்படுத்தும்படியான கருத்துகளையே நிறுவனப்படுத்திய இந்து மதங்களின் கண்ணோட்டமாகப் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் இன்று வணங்கப்படும் நாட்டுப்புற வழிபாடுகளிலும், வேத காலத்திற்கு முந்திய குறிப்பாக சிந்துவெளி மக்களால் பின்பற்றப்பட்ட தாய்தெய்வ வழிபாடுகளிலும் இந்து மதத் தொடக்கக் கூறுகளை காண முடிகிறது. இன்றைய இந்து மத சிலை வழிபாட்டுடன், ஆரியர்களின் வருகைக்கு முன்பாக இங்கிருந்த வட்டார மக்களின் வழிபாட்டு முறைகளில் காணப்பட்ட தாய்த்தெய்வ வழிபாட்டுடன் இணைத்துப் பார்க்க முடியும். வேத கால மக்கள் தங்களது வேண்டுதல்களை அக்கினி வளர்த்து வெளிப்படுத்தினர். அதனால்தான் அக்கினியைத் தேவர்களின் புரோகிதர் என்று வேத கவிகள் புகழ்ந்தனர். வேதமுறைக்கு மாறான வட்டார மக்கள் சிலை வழிபாட்டை கடைப்பிடித்தனர்.

வேதங்களிலேயே மிகவும் பழைமைப் பகுதியான ரிக் வேத சங்கிதையில் முழுமை பெற்ற கடவுள்களைப் பார்க்க முடியாது. இயற்கையை உருவகப்படுத்திப் பார்த்தனர் அவ்வளவே, ஆனால் அந்தக் காலகட்டத்தில் வட்டார மக்கள் தாய்த் தெய்வ வழிபாடும், சிலை வழிபாட்டுமுறையையும் கடைப்பிடித்து வந்தனர். இந்தச் சிலைவழிபாட்டு முறைகளையே பின்னைய இந்து மதம் ஏற்றுக்கொண்டது.

இதனை முதலில் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இன்றைய இந்து மதம் என்பது வேதத்தின் தொடர்ச்சி அல்ல. வேதத்தோடு, வட்டார மக்களின் சிலை வழிபாடும் இணைந்ததின் விளைவே என்பதை ஏற்றுக் கொண்டால் தான் இன்றைய வடிவிலான இந்து மதத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா  மதமும் சமூகமும்  என்ற நூலில் எழுதுகிறார்:-
“பிற்காலத்தில் இந்துமதம் என அழைக்கப்பட்டதில் இருந்து வந்த பல முக்கிய காரணிகள்   தாய்த்தெய்வங்கள், சிவ வழிபாடு. சில சமயங்களில் பசுபதி (விலங்குகளின் கடவுள்) யாகவும், வேறு சில சமயங்களில் சாதாரண லிங்கக் குறியீடாகவும் இருப்பது, கடவுளை மிருகங்களாகப் பல வடிவங்களில் காண்பது போன்ற பல குறிப்பிடத்தக்க அளவுக்கு இடம் பெற்றிருந்ததாலும். இவை இந்து மதத்திற்கான முக்கிய அடிப்படைகளாக இருப்பினும் வேத நூல்களில் இவற்றுக்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஹரப்பாப் பகுதிகளை அகழ்வாய்வு செய்த பின்னரே, இவற்றுக்கு ஹரப்பா நாகரிகத்துடன் உண்மையான வேர்கள் இருந்ததையும், அது பிற்கால இந்தியர்களின் மத நம்பிக்கைகளிலும், மரபுகளிலும் ஓரளவுக்கு உயிர்வாழ்ந்து வந்ததையும் நம்மால் உணரமுடிகிறது.”
பக்கம் 49

“இறுதியில், வேதத்தின் மீது பெரும் மரியாதை இருந்தபோதிலும் இந்தியாவின் மத வரலாற்றில் வேதக் கடவுள்களுக்கு உண்மையில் ஏன் எவ்வித எதிர்காலமும் இல்லை என்ற மிகவும் சிக்கலான அம்சம் குறித்தும் விவாதிக்க முயல்வோம்.

.. நமது உணர்வில் உள்ள எத்தகைய மத உணர்வையும் அல்லது ஆன்மிக மதிப்பையும் அசல் ரிக் வேதத்தின் பழைமை வாய்ந்த பக்கங்களில் எந்த அளவுக்குக் காணமுடியும் என்பது உண்மையில் கேள்விக்குரியதாக உள்ளது.”
பக்கம் 95

கிராமங்களில் காலனியாக ஒதுக்கப்பட்டவர்கள் தமக்கென சில கடவுள்களை வழிபட்டனர், அவர்கள் மிகவும் பழைய வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்தனர். எப்படி ஊருக்குள் அவர்களை அனுமதிக்கவில்லையோ, அதே போல், மாற்றம் பெற்றுவரும் மதத்தை அவர்களுக்கு அளிக்காமல் அல்லது அவர்கள் பின்பற்ற விடாமல், பழைய முறையையே கடைப்பிடிக்க வைத்தனர். நகரத்தில் உள்ள பெரிய கோயில்களில் கிராமங்களில் உள்ள ஆதிக்கசாதி மக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற கிராம மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. கோயில் நுழைவுப் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

இன்று கிராமங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின்  காரணமாக பழைய மத வழிபாட்டு முறைகள் மாற்றம் பெற்று, நிறுவனமான சைவ, வைணவ மதத்தை நோக்கி வருவதைப் பார்க்க முடிகிறது. சைவ வைணவ மதத்தவர்கள் இதனை புரிந்து கொண்டு, இந்தப் போக்குகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்து மதத்தவர்கள் என்று அழைக்கப்படுபவர் அனைவரும் அனைத்து இந்துக் கோயில்களுக்குள் செல்லவும், இந்து வழிபாட்டு முறையும் பின்பற்றவும் அனுமதிக்கப்பட வேண்டும். இந்து மதத்தவர்கள் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படுவது இந்து மதத்திற்கு இன்றைய தேவையாகிவிட்டது.

மூவகை வேதாந்தம்

மேலை நாடுகளில் தத்துவஞானிகளும், மத அறிஞர்களும் தனித்தனியாக செயல்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது, இந்தியாவைப் பொருத்தளவில் இரண்டும் இணைந்து, பின்னிப்பிணைந்து உள்ளன. வேத சம்கிதையில் சடங்குகள் (கர்ம காண்டம்) மட்டுமே காணமுடிகிறது. பின்னால் தோன்றிய உபநிடதங்களின் (ஞான காண்டம்) சில பகுதியில் தத்துவஞானம் தனிப்போக்கில் செல்ல முயற்சித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்து தத்துவஞான உலகில் அதன் போக்குத் தொடரவில்லை. பின்னால் வந்த தத்துவஞானிகளான சங்கரர், ராமாநுசர், மத்துவர் ஆகியோர் தத்துவஞானத்தையும், மதத்தையும் இணைத்தே கொண்டு சென்றனர்.

இந்து மதம் பல்வேறு தத்துவஞானப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் முதன்மையானவை என்று முதல் வரிசையில் வைத்து பேசப்படும்  தத்துவப் பிரிவுக்கு மூவகை வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. இது துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று வேதாந்த கண்ணோட்டத்தை குறிப்பதாகும்.

மூன்று வேதாந்தத்திற்கும் ஆதார நூல்கள் ஒன்றாய் இருக்க, இதன் தத்துவ போக்குகள் மட்டும் எப்படி வேறுபடுகிறது என்பதை பார்ப்போம். வேதம், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிவற்றின் காலகட்டங்கள் மிகவும் நீண்டநெடியதாகும். இதனுள் பல்வேறு கருத்துப்போக்கை பார்க்க முடிகிறது. ஆதார நூல்களில் காணப்படும் சில வாக்கியங்களை மகா வாக்கியங்களாகக் கொண்டு அதற்கு விளக்கம் அளிக்கும்போது, வேறுபட்டு வேதாந்த மதம் மூன்று வகையாகிறது.

உபநிடதங்களில் சில வாக்கியங்கள் சீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்று  பேதக (வேறுபட்ட) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் வேறாக இருந்தாலும், வேறானவற்றில் ஒன்றி அந்தர்யாமியாய் பரமாத்மா இருப்பதாக  பேத அபேதக (வேறுபட்டும் வேறுபடாத) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று  அபேதக (வேறுபாடற்ற) சுருதியாகவும் அமைந்துள்ளது. 

பேத சுருதியை வலியுறுத்தி துவைத வேதாந்தத்தை மத்துவரும், பேதஅபேத சுருதியை வலியுறுத்தி விசிட்டாத்வைத வேதாந்தத்தை ராமாநுசரும், அபேத சுருதியை வலியுறுத்தி அத்வைத வேதாந்தத்தை சங்கரரும் தத்தமது தத்துவஞானத்தையும் மதத்தையும் அமைத்தனர். இந்தக் கருத்துப் போக்குகள் இதற்கு முன்பு மத, தத்துவஞானத்தில் காணப்பட்டாலும் இதனை இம் மூவரும் மேம்படுத்தி விரிவாக்கி வளர்த்தனர்.