Thursday, 6 April 2017

இயக்கவியல் (Dialectics)

“இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு
தலைப்பட்மில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி
விளக்கி விவரிக்கும் போதனையாகும், நிரந்தரமாக வளர்ச்சியுற்ற
வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும்
மனித அறிவின் சார்வுநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.”
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

      இயற்கை, சமூகம் இரண்டிலும் ஏற்படும் வளர்ச்சி, மாற்றம் என்பது விதி (Law) முறையின்படி நிகழ்வதாக பொருள்முதல்வாத இயக்கவியல் (Dialectics) நிறுவுகிறது. இங்கு விதி என்பது, புலப்பாடுகளுக்கு இடையேயான உள்ளார்ந்த இணைப்பும் தொடர்பும் பரஸ்பரம் சார்ந்துள்ளதைக் குறிக்கிறது.

      புலப்பாடுகளில் காணப்படும் அனைத்து தொடர்புகளையும் விதி என்று கொள்வதில்லை. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நிகழக்கூடியதாக இருப்பதே விதி எனப்படும். இவற்றின் தொடர்பு  என்பது நிலைமைகளில் வளர்ச்சித் தன்மையை நிர்ணயிப்பதாக இருக்கும்.

      இயற்கை மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியை அறிந்து, அந்த வளர்ச்சியின் தொடர்ச்சியைப் புரிந்து மக்கள் உணர்வுபூர்வமாக செயற்பட முடியும் என்பதை இயக்கவியல் ஏற்கிறது.

      இன்றைய சமூகம் நீடித்து இருப்பதில் பலன்களை அனுபவித்து வருபவர்கள், இயற்கையும் சமூகமும் விதிகளின்படி செயற்படுவதை மறுதலிக்கின்றனர். இவர்கள் இயக்கவியலை ஏன் மறுகின்றனர் என்றால், இன்றைய சமூகத்தின் வடிவத்தில் ஏற்படும்  வளர்ச்சியும் மாற்றமும் அதன் இறுதிவிளைவான மறைந்து அடுத்த சமூகத்துக்கு மாறிப் போவதை இயக்கவியல் குறிப்பிடுகிறது. இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் தான் இயக்கவியலை மறுக்கின்றனர்.

      இவர்களின் இயக்கமறுப்பியல், வளர்ச்சி என்பதை அளவுநிலையில் ஏற்படுகின்ற குறைதல் அல்லது கூடுதல் என்பதாக எளிமைப்படுத்துகின்றது. இந்த இயக்கமறுப்பியலின் மாற்றம் என்பது பொருட்களின் தனிப்பட்டவையாகவும் அனைத்துடன் உள்ள தொடர்பிணைப்பை ஏற்றுக் கொள்ளாமையிலும் அடங்கியிருக்கிறது.

      பொருள்முதல்வாதத்தின் இயக்கவியல் அனைத்து பொருட்களின் இணைப்பை வலியுறுத்தி, தனது பொருளாயத ஒருமையை வெளிப்படுத்துகிறது.

      இயக்கவியல், உலகத்தையும் அதன் வளர்ச்சியின் விதிகளையும் அறிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் செயற்படுவதால், அந்த விதிகளின் வழியில் சென்று இயற்கையையும் சமூகத்தையும் புரட்சிகரமாக மாற்றுவதற்கு பயன்படுகிறது.
               
      பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் இயல்பிலேயே இயக்கவியலைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். ஆனால் அந்த இயக்கவியல் எளிமையானதாகவும் விஞ்ஞானத் தன்மையற்றதாகவும் இருந்தது.

      பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஹெகல் இயக்கவியலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். வளர்ச்சி என்பது எதிர்மறைச் சக்திகளின் போராட்டம் என்றும் பொருட்களின் உள் முரண்பாடுகள் அதன் இருப்புக்கும் இயக்கத்துக்கும் காரணம் என்றும் கூறினார். அவர் இயக்கவியலை மீண்டும் நடைமுறையில் கொண்டு வந்தது பெரும் சிறப்புக்குரிய செயலாகும். இதன் அடிப்படையில்தான் மார்க்ஸ் தன்னை ஹெகலின் மாணவன் என்று அறிவித்தார்.

      மார்க்ஸ் தனது இயக்கவியல் ஹெகலின் வழிமுறையில் இருந்து வேறுபட்டது மற்றும் நேர் எதிரானது என்பதை வலியுறுத்தியுள்ளார்.


      எதார்த்த உலகின் கர்த்தாவாக, கருத்தை ஹெகல் முன்னிறுத்துகிறார். எதார்த்த உலகம் கருத்தின் புறவடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை என்று அவர் கருதுகிறார். மார்க்சுக்கு கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை.

      ஹெகலின் இயக்கவியலில் காணப்பட்ட மாயாவாதத் தன்மையை மார்க்ஸ் விமர்சித்து, பொருள்முதல்வாத தன்மை பெற்றதாக அதனை செழுமைப்படுத்தினார். உலகம் எப்படி உள்ளதோ அதை எந்தவித வெளிச் சேர்க்கையும் இன்றி,  உள்ளதை உள்ளபடியில் ஆராய்ந்தார்

      பிற நிகழ்வுடன் பல்வகைத் தொடர்புகள் இன்றி எந்த நிகழ்வும் நடைபெறுவதில்லை. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருட்கள், நிகழ்வுகளின் பரஸ்பரத் தொடர்பு, புறநிலையான பொதுத்தன்மையைக் காட்டுகிறது. நிகழ்ச்சிகளின் வளர்ச்சி என்பது தம்முள் கொண்டுள்ள தொடர்புகளின் தாக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது.

      உலகத்தின் அனைத்து இடைத்தொடர்புகளை நிறுவுகின்ற பொது விதிகளை இயக்கவியல் விதிகள் என்றழைக்கப்படுகின்றன.

இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.

1.   அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

2.    எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

3.    நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)

1, அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.  (The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

      உலகத்தில் எண்ணற்ற பொருட்களையும், அவற்றின் நிகழ்வுகளையும்  நாம் காண்கிறோம். இவைகள் தொடர்ச்சியான இயக்கத்திலும் மாற்றத்திலும் இருக்கின்றன. இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் மற்ற பொருளோடு வேறுபட்ட தன்மையோடு காணப்படுகிறது. குறிப்பிட்ட பொருள் வேறொரு பொருளுடன் கொண்டுள்ள வேறுபட்ட பண்பைக்கொண்டு அதனை வேறுபடுத்திக் காண்கிறோம். அப் பண்பின் ஒப்பீட்டுத் தன்மையோடு அப்பொருள் நிலைபெற்றிருக்கிறது. அந்தச் ஒப்பீட்டுத் (Relative) தன்மையே அப்பொருளை ஒரு குறிப்பிட்ட பொருளாக திட்டவட்டமாக சுட்டுகிறது

      குறிப்பிட்ட பண்புகள் அப்பொருட்களில் காணப்படும் அளவுகளால் நிலைகொள்கிறது. பண்புகளைப் படைக்கின்ற பொருட்களின் அளவு மாற்றங்கள் அப்பொருளின் பண்பு மாற்றங்களாக வடிவ மாற்றம் பெறுகின்றன.

      இதனைப் புரிந்து கொள்வதற்கு அளவுநிலை, பண்புநிலை என்ற சொல் எதனை விளக்குகிறது என்பதை முதலில் அறிந்திட வேண்டும்.

      அளவு என்பது, ஒரு பொருள் அப்பொருளின்  பண்பு வடிவமாக இருப்பதற்கு உரிய உட்பொருள்களின் அளவைக் குறிக்கிறது. அளவுமாற்றம் என்பது, பழைய உட்பொருட்களில் ஏற்படுகின்ற குறைவு மற்றும் அதிகரிப்பு போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த அளவு மாற்றம் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன் பழைய பண்பு மறைந்து புதியப் பண்பை பெறுகிறது. இந்தப் புதிய பண்பைப் பெற்றதற்கான, பழைய உட்பொருளில் ஏற்படுத்திய அளவின் மாற்றத்தையே அளவுமாற்றம் என்கிறோம்.

      ஒரு பொருள் எத்தன்மையது என்று வெளிப்படுத்துகிறதோ அந்த வெளிப்பாட்டுத் தன்மையே பண்பு எனப்படும். பண்பு மாற்றம் என்பது பழைய பொருட்களின் உட்பொருளில் ஏற்படுகின்ற அளவு மாற்றம் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன், பழைய பண்பு மறைந்து புதிய பண்பைப் பெறுவதைக் குறிக்கிறது. இந்தப் புதிய பண்பை எட்டுகின்ற மாற்றமே பண்பு மாற்றமாகும்.

      ஒரு பொருள், தன்னை ஒரு பொருளாக திட்டவட்டமாய் காட்டிக் கொண்டிருக்கும்போதே தம்முள் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களின் அளவு சிறுகச்சிறுக நடைபெறும். அவ்வாறு சிறுகச்சிறுக ஏற்படும்போது நமது நேரடிப் பார்வைக்கு அவைத் தென்படுவதில்லை.

      சிறிதளவான மாற்றங்கள் அப்பொருளின் பண்பைப் பாதிப்பதிலை, ஆனால் அந்த அளவு மாற்றங்கள் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன் பழைய பண்பு நிலையிலிருந்து புதிய பண்புநிலைக்கு திடீரென்று பாய்ச்சலாக மாறிவிடுகிறது.

      அளவுநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இடையீடின்றி படிப்படியாக நடைபெறுகிறது. பண்புநிலை மாற்றம் என்பது குறிப்பிட்ட கட்டத்தில் பழைய பண்பின் முறிவும் புதிய பண்பின் தொடக்கமுமாய், பாய்ச்சலாக மாறுகிறது. இதனை வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், அளவுநிலையில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டவுடன், அந்த அளவு மாற்றம் பழைய பண்போடு முரண்படுகிறது. அந்த முரண்பாடு புதிய பண்புடைய புதிய பொருளை படைக்கும் போது தீர்க்கப்படுகிறது.

      அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாக வளர்ச்சியடைகின்ற தொடர் நிகழ்வு, பொருளாயத உலகின் புத்திளமை தோற்றத்துக்குக் காரணமாகிறது.

2.எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

      ஒரு பொருளின் இருப்பு என்பது இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. எதிர்நிலைகளின் ஒற்றுமை, அவற்றிடையேயான போராட்டம் என்ற இரண்டையும் பெற்றிருக்கின்றது.

ஒரு நிகழ்வில் எதிர்நிலைகள் பரஸ்பரம் முரண்பட்டிருப்பது அவற்றின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அந்த முரண்பாட்டின் எதிர்க்கின்ற போக்கு அதாவது நிராகரிப்பது அந்நிகழ்வில் காணப்படும் எதிர்நிலையாகும்.

எதிர்நிலைகளிடையே ஒற்றுமையாய் புலப்படும்போதே அவற்றிடையே நிராகரிக்கின்ற வகையில் போராட்டமும் இருக்கிறது. உள்நிகழ்வுகளில் ஒற்றுமை பெற்றிருக்கும் போதே அவற்றிடையே ஒன்றையொன்று எதிர்க்கின்ற  போராட்டமும் நடைபெறுகிறது.

போராட்டம் என்னும்போது அவற்றில் ஒன்று இல்லாமல் ஒன்று இருக்க முடியாது என்ற வகையில் இணைந்தே காணப்படுகிறது.  இந்த ஒற்றுமையின் ஊடே நிரந்திர எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது. எதிர்நிலைகளின் ஒற்றுமை ஒப்பீட்டுத் (Relative) தன்மையானது, அவற்றிடையே நடைபெறும் போராட்டம் அறுதியானது (absolute).
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எதிர்நிலைகளுக்கிடையே காணப்படும் இடை உறவு போராட்டத்தால் நிராகரிக்கப்பட்டு தகர்க்கப்படுகிறது.

ஒற்றுமை பொருளின் இருப்பையும், போராட்டம் வளர்ச்சியையும் காட்டுகிறது. எதிர்நிலைகளின் போராட்டமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.

3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of Negation)

நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்னும் விதி பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைபெறுவதற்கான இடைத்தொடர்பை வெளிப்படுத்துகிறது. கீழ்நிலையில் இருந்து மேல்நிலைக்கும், எளிமையானதில் இருந்து கூட்டுநிலைக்கும் ஆன மாற்றத்தைக் குறிக்கிறது.

நிலைமறுப்பு என்பது பழையவற்றுக்கு மாற்றாய் புதியதையும். ஒரு வளர்ச்சியடைந்த கட்டத்தைக் கடந்து புதிய வளர்ச்சியினை எட்டுவதையும் குறிக்கிறது.

பழையதை நீக்கி புதியதை நிலைநிறுத்தும் போது, புதியதுக்கான ஊற்று பழையதின் உள்ளேயே தோன்றுகிறது. அதனால் தான் பழையது முழுமையாக அழிந்து போகிறது என்று கூறாமல், எளிமையானதில் இருந்து கூட்டுநிலையை நோக்கி மேல்நிலை அடைகிறது என்று கூறப்படுகிறது.

பழையதில் உள்ள முரண்பாடு முதிர்ந்து அவற்றின் ஒற்றுமை குலைக்கப்படுவதே நிலைமறுப்பு என்றழைக்கப்படுகிறது.

வளர்ச்சி என்னும் நிகழ்வில் எந்தக் கட்டமும் நிலைத்த தன்மை உடையதல்ல, ஒவ்வொரு கட்டமும் முதிர்ந்து மறைந்து புதியவற்றுக்கு இடம் கொடுக்க வேண்டி வருகிறது.

புதியதை நிர்ணயிக்கின்ற போக்கு பழையதின் கருவிலேதான் இருக்கின்றது. இயக்கவியல் என்பது பழையதை அகற்றுவதையும் புதியதின் நிலைநிறுத்தலையும் இணைத்தே விவரிக்கிறது.

பழையதை நிலைமறுத்து  நிலைபெற்ற புதியது, அதன் வளாச்சிப் போக்கில் முதிர்ந்து பழையதாகிறது. பழையதுக்கு முன்பு ஏற்பட்ட நிலையே இதற்கும் ஏற்படுகிறது. அதாவது பழையதின் இடத்தை நீக்கி புதியதும், புதியதின் இடம் இதைவிட மேலான புதிய ஒன்றால்  நிலைமறுக்கப்படுகிறது, இவ்வாறு நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்ற விதி வளாச்சியின் விதியாக விளங்குகிறது.


இவ்விதி, வளர்ச்சியின் பொதுப் போக்கையும், புதியவற்றுக்குள் நுழைய வேண்டிய செல்வழியையும் காட்டுகிறது.

Friday, 10 March 2017

மார்க்சிய தத்துவம் பற்றி லெனின்

பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும், இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும், மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக் குப்பைக்கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும்போரின் களனாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்ருண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை 'மறுப்பதற்கும்', பலவீனப்படுத் துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாய் இருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுட்விக் ஃபாயர் பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத்தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கைப்புத்தகங்களாகும்.
18ம் நூற்ருண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை முன்னேறச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை-இதிலிருந்தே ஃபாயர்பாஹின் பொருள்முதல் வாதம் தோன்றியது-திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினர். இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல்தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்; நிரந்தரமாக வளர்ச்சியடையும் வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது-இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத்தக்கமுறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்துமுதல்வாதத்தைப் பற்றிய 'புதிய' மறு வியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை.

தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினர். மார்க்சின் வரலாற்றுத்துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவைபோய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னுமொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது -அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது-மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல்கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்திவரும் ஆதிக்கத்தைப் பலப்படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.

மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவ ஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள்முதல் வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

Sunday, 18 December 2016

மூவகை வேதாந்தத்தில் புறநிலை கருத்துமுதல்வாதம் - அகநிலை கருத்துமுதல்வாதம்

(துவைதம், விசிட்டாத்வைதம் = புறநிலை கருத்துமுதல்வாதம்
அத்வைதம்= அகநிலை கருத்துமுதல்வாதம்)

இந்து மதம் பல்வேறு தத்துவஞானப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் முதன்மையானவை என்று முதல் வரிசையில் வைத்து பேசப்படும்  தத்துவப் பிரிவுக்கு மூவகை வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. இது துவைதம்
, விசிட்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று வேதாந்த கண்ணோட்டத்தை குறிப்பதாகும்.

மூன்று வேதாந்தத்திற்கும் ஆதார நூல்கள் ஒன்றாய் இருக்க, இதன் தத்துவ போக்குகள் மட்டும் எப்படி வேறுபடுகிறது என்பதை பார்ப்போம். வேதம், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிவற்றின் காலகட்டங்கள் மிகவும் நீண்டநெடியதாகும். இதனுள் பல்வேறு கருத்துப்போக்கை பார்க்க முடிகிறது. ஆதார நூல்களில் காணப்படும் சில வாக்கியங்களை மகா வாக்கியங்களாகக் கொண்டு அதற்கு விளக்கம் அளிக்கும்போது, வேறுபட்டு வேதாந்த மதம் மூன்று வகையாகிறது.

உபநிடதங்களில் சில வாக்கியங்கள் சீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்று  பேதக (வேறுபட்ட) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் வேறாக இருந்தாலும், வேறானவற்றில் ஒன்றி அந்தர்யாமியாய் பரமாத்மா இருப்பதாக  பேத அபேதக (வேறுபட்டும் வேறுபடாத) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று  அபேதக (வேறுபாடற்ற) சுருதியாகவும் அமைந்துள்ளது. 

பேத சுருதியை வலியுறுத்தி துவைத வேதாந்தத்தை மத்துவரும், பேதஅபேத சுருதியை வலியுறுத்தி விசிட்டாத்வைத வேதாந்தத்தை ராமாநுசரும், அபேத சுருதியை வலியுறுத்தி அத்வைத வேதாந்தத்தை சங்கரரும் தத்தமது தத்துவஞானத்தையும் மதத்தையும் அமைத்தனர். இந்தக் கருத்துப் போக்குகள் இதற்கு முன்பு மத, தத்துவஞானத்தில் காணப்பட்டாலும் இதனை இம் மூவரும் மேம்படுத்தி விரிவாக்கி வளர்த்தனர்.

துவைதமும், விசிட்டாத்வைதமும் புறநிலைக் கருத்துமுதல்வாதமாகும். காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. துவைதம் புறநிலை கருத்துமுதல்வாதம் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

விசிட்டாத்வைதத்தை அகநிலை கருத்துமுதல்வாதமா? புறநிலை கருத்துமுதல்வாதமா? என்று வகைப்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அந்தர்யாமியாக பிரம்மம் எங்கும் உடனாய் இருப்பதாக அது கூறுவதால் இந்த சிக்கல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

விசிஷ்டாத்வைதம் என்பதை சிறப்புப் பொருந்திய அத்வைதம் என்று இவர்கள் பொருள்கொள்கின்றனர். ஆனால் இதனைச் சிறப்புப் பொருந்திய துவைதம் என்று அழைப்பதே பொருத்தமானதாகும். பரம்பொருளைத் தத்துவமசி என்று அகத்தில் வைத்துப் பார்ப்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருளைத் தமக்கு வேறான புறத்தில் வைத்து பார்ப்பது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருள் புறத்தில்தான் இருக்கிறது என்கிறார் ராமாநுசர், மேலும் அந்தர்யாமியாய் அனைத்திலும் உறைகிறார் என்றும் குறிப்பிடுகிறார். அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் சாட்சியாகத்தான  உள்ளார். எந்தச் செயற்பாட்டிற்கும் அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் பொறுப்பாக மாட்டார்.

புறநிலைக் கருத்துமுதல்வாதமான துவைதம் புறத்தில் உள்ள பரம்பொருளின் ஆற்றலை அறிந்திட முடியாது. அதன் லீலையைப் புரிந்து கொள்ள முடியாது. நமது சிந்தனை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. பரம்பொருளின் ஆற்றலை அளந்தறிய முடியாது என்கிறது. மேலும் சித்து, அசித்து, ஈஸ்வரன் என்ற மூன்று உண்மைப் பொருளை துவைதம் போன்றே விசிஷ்டாத்வைதமும் ஏற்கிறது.  சித்து உயிர்களின் தொகுதியையும். அசித்து என்பது உயிரற்ற பொருட்தொகுதியையும், ஈஸ்வரன் என்பது பரம்பொருளையும் குறிக்கிறது.

விசிஷ்டாத்வைதம் பரம்பொருள் வேறு, ஆத்மா வேறு முக்தி பெற்ற ஆத்மாவும் வைகுண்டத்தில் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்திடுவதே பணியாகும் என்று பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் வேறுபடுத்தியே பார்க்கிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறு என்பது மட்டுமல்லாது, பரமாத்மாவிடம் ஜீவாத்மா சரணடைவதே சிறந்ததாகக் குறிப்பிடுவதால், விசிஷ்டாத்வைதத்தைச் சிறப்புப் பொருந்திய துவைதம் என்றழைப்பதே பொருத்தமானதாகும்.


உலகம் இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன பொருள்? இந்த உலகம் இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதன் பொருள் என்ன?உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதுதான். என் மனம். உங்கள் மனம் என்று எல்லோருடைய மனங்களையும் சார்ந்து தான் உலகம் இருக்கிறது என்கிறது அத்வைதம். உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. அத்வைதமும் அவ்வாறே கருதுகிறது. அத்வைதம் அகநிலை கருத்துமுதல்வாதமாகும்.