Saturday 31 March 2018

முக்தி பற்றிய சில தொடக்கக் குறிப்புகள்- தேவிபிரசாத் சட்டோபாத்யாய


நமக்கு தற்போது தேவையான தத்துவப் பார்வைக்கேற்ப, இந்தியத் தத்துவத்தைப் பற்றிய சர்ச்சையின் முழுமையான, அதன் முக்கியமான மற்றொரு அம்சம் பற்றியும் ஓரளவு காண்பது அவசியமாகிறது. அந்த அம்சம், நமது தத்துவவாதிகளின் வெற்றிக்கு அடையாளமாகத் தெரியவில்லை. அவர்களுடைய தோல்வியையே அவை எடுத்துக்காட்டுகின்றன. விடுதலை என்பதை - உடன்பாட்டு வகையிலும் திட்டவட்டமாகவும் சாத்தியமான திறத்திலும் அவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்பதே அந்தத் தோல்வி. இவ்வாறு அவர்கள் தோற்றத்தையே பெரிதாக்கிவிட்டனர். அவர்கள் கற்பனை யாகவும் வெறும் சிந்தனையளவிலும் அடைந்த வெற்றியையே அடிக்கடியும் தாராளமாகவும் போற்றிப் புகழ்ந்தும் உலகம் முழுதும் விஸ்தாரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதன் விளைவு, கொள்கைக் குழப்பத்தை விடவும் மிக மோசமாயிற்று. அது ஒரு பொய்யான மயக்கத்தைத் தருகிறது. அந்த மயக்கம் மக்களின் மனதை மந்திர சக்தி போலப் பரவசமாக்கி விடுகிறது. இந்தப் பரவசத்தை உடைக்க வேண்டும். ஆனால் வெறும் அசிரத்தை காட்டுவதாலோ அதை வெறுப்பதாலோ உடைத்து விட முடியாது. இந்த ஆரோக்யமில்லாத மனநிலையை அதை இகழ்ந்து வெறுப்பதால் மட்டுமே அகற்றவும் முடியாது.

நமது தத்துவவாதிகளின் இந்தத் தோல்வியையும் தவறையும் நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைச் செய்வது எப்படி? அவர்களுடைய மனத்தின் அடிவானத்திற்குச் சில எல்லைகளைக் கண்டு நிச்சயித்தால்தான் அது சாத்தியமாகும். அப்படிச் செய்வதன் மூலமே நாம் அவர்களுடைய தோல்வியைப் புறம் கண்டு தற்போது நமக்குத் தேவையான அளவு விடுதலை பற்றிய திட்டவட்டமான கருத்துக்களைச் சென்றடைய முடியும்.
(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - பக்கம் 634 - 635)

No comments:

Post a Comment