Sunday, 25 March 2018

வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது – வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்


தோழர் அண்ணா.நாகரத்தினம் தனது வலைபூவில் “அடித்தளம்,மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல்” (http://philosophicaldebate.blogspot.in/2011/09/6.htmlஎன்ற தொடரை எழுதியுள்ளார். அதில் காணும் 6ஆம் பகுதி நான் எழுதியதாக வாட்ஆப்பில் பரவிவருகிறது. அதில் உள்ளவை எனக்கு உடன்பாடாத கருத்தாகும், மேலும் அத்தகைய கருத்துக்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்துகளுக்கு முரணானவை என்பதை தொடர்ந்து பலகாலமாக எழுதிவருகிறேன். இங்கேயும் அதனையே நிலைநிறுத்தப் போகிறேன்.

வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை” – இதுவே வரலாறு பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகும்.

வாழ்நிலை சிந்தனையைப்த் தீர்மானிக்கிறது - இது பொருள்முதல்வாதம்

சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது - இது கருத்துமுதல்வாதம்

இதனை விளக்குவதற்கு மார்க்ஸ் அமைத்துக் கொடுத்தது தான் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் மார்க்ஸ் தமது இறுதிகாலவரையிலான அனைத்து படைப்புகளையும் எழுதியுள்ளார். இந்த கோட்பாட்டில் குறைகாண்பவர்கள் மார்க்சின் முடிவுகளிலும் குறைகாண்பவர்களாவர்.

அடித்தளம் மேற்கட்டமைபப்பு பற்றி மார்க்ஸ்:-
இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே, இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும். 
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை)

      பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது." அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறதை இயக்கவியல் அற்றதாகவும் எந்திரத்தனமானதாகவும் தோழர் நாகரத்தினம் கருதுகிறார்.

“மேற்கட்டுமானம் அடித்தளத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது. இதுதான் பொருள்முதல்வாதத்திற்கான‌ அடிப்படை. இங்கு அடித்தளம் முதன்மையாகவும் மேற்கட்டுமானம் இரண்டாம்பட்சமாகவும் இருக்கிறது. இதில் பொருள்முதல்வாதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் இயங்கியல் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டுக்குமான உறவு எப்படி பட்டது என்பதைக் காணவேண்டும். இயங்கியல் என்பது இரண்டு எதிர்வுகளின் முரண்பாடும் ஆகும். இந்த‌ எதிர்நிலைகளில் ஐக்கியமும் போராட்டமும் உள்ளடக்கியிருக்கும். இந்த இரண்டு எதிர்நிலைகளில் ஒன்று மற்றொன்று கட்டுபட்டதாகவோ நிபந்தனைக்குட் பட்டதாகவோ இருக்கவியலாது. இரண்டும் சமமான தகுதியையும், சமமான‌ அழுத்தத்தையும் பெற்றிருக்கும். அவ்வாறில்லாமல் ஒரு எதிர்வானது மற்றொரு எதிர்வை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது இயங்கியலுக்கு எதிரானதாகும். ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை சார்ந்து இயங்குகிறது என்றால், ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை பலப்படுத்துகிறது என்றால், ஒரு எதிர்வின் போக்கை மற்றொரு எதிர்வு தீர்மானிக்கிறது என்றால், அவை இயங்கியல் ஆகாது. அது வெறும் எந்திரத்தனமான முரணாக மட்டுமே இருக்க வியலும்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

அடித்தளம் நிர்ணயிக்கும் என்கிற பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இயக்கவியல் அடிப்படையில் தான் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தோழர் நாகரத்தினம் இயக்கவியல் அற்றதாக கருதுகிறார். இதற்குக் காரணம் அடித்தளதம் தீர்மானிக்கும் என்கிற பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது கண்ணோட்டம் அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றிடையேயான இடைசெயல் பரஸ்பரவினைபுரிதலாகும். இது மார்க்சிய அடிப்படைக்கு முரணான புரிதலாகும்.

கருத்துக்களின் தோற்றமும் அதன் மாற்றமும் பற்றி மார்க்ஸ் இயக்கவியல் அடிப்படையில் தான் விவரிக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தோழர் நாகரத்தினம் இல்லை என்பது தான் உண்மை.

மார்க்ஸ்:-
சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
 (தத்துவவியலின் வறுமை)

கருத்துக்களின் தோற்றமும் அதன் மாற்றமும் இங்கே இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் தான் விளக்கப்பட்டுள்ளது.

மார்க்ஸ் கூறியதை, சில இளைஞர்கள் புதியதாகப் படிக்கும் போது நிர்ணயவாதமாக புரிந்து கொண்டனர் அதனை மறுத்துதான் எங்கெல்ஸ் இறுதிகாலத்தில் எழுதிய கடிதங்களில் பதிலளித்துள்ளார். அப்படிப்பட்ட பதிலை தோழர் நாகரத்தினம் “..பின்னர் எங்கல்சும நூல்களின் மூலமாக‌வும் கடிதங்களின் வாயிலாகவும் அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான உறவை இயங்கியல் ரீதியில் வளர்த்தெடுத்துள்ளனர்.” என்று திரித்து விளக்கம் கொடுக்கிறார்.

அடித்தளத்த்தின் தீர்மானகர பாத்திரத்தை எந்தவகையிலும் மாற்றி எங்கெல்ஸ் எழுதவில்லை, அக்கடிதங்களில், உள்ளடக்கத்துக்கு கொடுத்த அழுத்தம் மேற்கட்டமைப்புக்குக் கொடுக்கவில்லை என்று தான் கூறியுள்ளார். மேலும் பிலோக்குக்கு எழுதிய கடிதத்தில் (செப்டெம்பர் 21 (22) 1890) வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய “லுயீ போனபார்ட்” “மூலதனம்” ஆகிய மூலத்தோற்றுவாய்களில் இருந்து கற்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுகிறார். இத்துடன் தாம் எழுதிய “டூரிங்கு மறுப்பு” “லூத்விக் ஃபாயர்பாக்” நூல்களைக் குறிப்பிடுகிறார். “டூரிங்கு மறுப்பு” என்ற நூல் மார்க்ஸ் பார்வையிடப்பட்டே வெளியிடப்பட்டது. “லூத்விக் ஃபாயர்பாக்” என்ற நூல் மார்க்ஸ் மறைந்தபின்பு எழுதியது.

அந்நூலில்” இப்போது நாம் அதோடு சேர்த்து, மதத்தைப் பற்றிச் சுருக்கமாக மட்டுமே கவனிப்போம். காரணம், மதம் பொருளாயத வாழ்க்கையிலிருந்து மேலும் விலகி நிற்கிறது, அதற்கு மிகவும் அந்நியமானதாகவும் தோன்றுகிறது. மிகப் புராதன காலத்தில், மனிதர்கள் தங்களுடைய சொந்த இயல்பு பற்றியும், அவர்களைச் சுற்றியிருந்த புறநிலை இயற்கை பற்றியும் கொண்டிருந்த தவறான, பழைய கருத்துருக்களிலிருந்து மதம் தோன்றியது. என்றபோதிலும், ஒவ்வொரு சித்தாந்தமும் தோன்றிய பிறகு அப்போது நிலவும் கருத்தோட்டங்களை ஒட்டி வளர்கிறது. அந்தக் கருத்தோட்டங்களை மேலும் வளர்க்கிறது, அப்படிச் செய்யாவிடில் அது ஒரு சித்தாந்தமாக இருக்க முடியாது. அதாவது, சுதந்திரமாய் வளர்ச்சியடைகின்ற, தமக்கே உரிய விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்ட, சுதந்திரமான சிந்தனைகளுடன் எந்தத் தொடர்பும் கொண்டதாக இருக்காது. எந்த மனிதர்களின் மூளைகளுக்குள்ளே இந்தச் சிந்தனை நிகழ்வுப்போக்கு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த மனிதர்களின் பொருளாதய வாழ்க்கை நிலைமைகளே அந்நிகழ்வுப் போக்கின் ஓட்டத்தை இறுதியில் தீர்மானிக்கின்றன என்பது, தவிர்க்க இயலாதவாறு இந்த மனிதர்களுக்குத் தெரியாமலே இருந்து விடுகிறது.”
(லூத்விக் ஃபாயர்பாக்)

இங்கே எங்கெல்ஸ் இறுதியில் தீர்மானிக்கும் என்று கூறியதை, மார்க்ஸ் கொடுத்த விளக்கக்குறையை போக்குவதற்கு கூறப்பட்டதாக தோழர் நாகரத்தினம் கருதுகிறார்.

“பின்னர் எங்கல்ஸ் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த சமூக எதிர்வுக்குள்ள உறவு குறித்து தனது கருத்துரையை வழங்குவார். 'இறுதியாக தீர்மானிக்கும்' என்று பொருளாதார அடித்தளத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்குவார்.

'இறுதி நிர்ணயம்' என்ற எங்கல்சின் கோட்பாடு பொருளாதார‌ அடித்தளத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. அதே சமயம், அடித்தளத்தின் மீது செலுத்தும் மேல்கட்டுமான நிர்ணயத்தினை எங்கல்சு புறந்தள்ளவில்லை.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

ஆக, தோழர் நாகரத்தினம் அவர்களின் கருத்து அடித்தளத்தின் தீர்மானரகமான பாத்திரத்தை மறுத்து அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்கிற திருத்தல்வாதிகளின் கண்ணோட்டத்தையே அடைகிறது.

மேற்கட்டமைப்பின் தீர்மானிக்கும் தன்மையை அங்கரிக்கவில்லை என்றால் அது இயக்கவியலுக்கு முரணானது என்கிறார்.

“மேற்கட்டுமானம் அடித்தளத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது. இதுதான் பொருள்முதல்வாதத்திற்கான‌ அடிப்படை. இங்கு அடித்தளம் முதன்மையாகவும் மேற்கட்டுமானம் இரண்டாம்பட்சமாகவும் இருக்கிறது. இதில் பொருள்முதல்வாதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் இயங்கியல் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டுக்குமான உறவு எப்படி பட்டது என்பதைக் காணவேண்டும். இயங்கியல் என்பது இரண்டு எதிர்வுகளின் முரண்பாடும் ஆகும். இந்த‌ எதிர்நிலைகளில் ஐக்கியமும் போராட்டமும் உள்ளடக்கியிருக்கும். இந்த இரண்டு எதிர்நிலைகளில் ஒன்று மற்றொன்று கட்டுபட்டதாகவோ நிபந்தனைக்குட் பட்டதாகவோ இருக்கவியலாது. இரண்டும் சமமான தகுதியையும், சமமான‌ அழுத்தத்தையும் பெற்றிருக்கும்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

மேலும் கூறுகிறார்.

சர்வ வியாபகப் பரஸ்பரச் செயல்

எங்கும் நிறைந்திருக்கும் முரண்களின் அனைத்தையும் தழுவிய பரஸ்பரச் செய‌ல்பாடுகள்தான் இயக்கவியலுக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது. "நவீன இயற்கை விஞ்ஞானத்தின் கருத்துநிலையிலிருந்து இயக்கத்திலுள்ள பருப்பொருள் முழுவதையும் ஆலோசித்துப் பார்த்தோமெனில் நம்மை எதிரிடுகின்ற முதல் விசயம் பரஸ்பரச் செயல் என்பதே யாகும்... "இந்தச் சர்வ வியாபகப் பரஸ்பரச் செயலிலிருந்தே நாம் உண்மையான காரண காரிய உறவு நிலையை வந்து அடைகின்றோம். தனிப்பட்ட நிகழ்வுகளைப் புரிய வேண்டுமெனில் அவைகளின் பொதுவான பரஸ்பரத் தொடர்பிலிருந்து அவற்றைப் பிய்த்தெடுத்து தனிமைப்படுத்தி ஆராய வேண்டும். அப்பொழுது மாறுகிற இயக்கங்கள் ஒன்று காரணமாகவும் மற்றொன்று விளைவாகவும் வெளிப்படுகின்றன" என் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற நூலில் எங்கல்ஸ் கூறுவார்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

இங்கே எங்கெல்ஸ் எதனை முன்னிருத்துகிறார் என்பதை தோழர் நாகரத்தினம் கவனம் கொள்ளவேயில்லை. பரஸ்பர என்கிற மொழியாக்கத்தை மட்டுமே கவனம்கொண்டு முக்கியமானதை விட்டுவிடுகிறார். பொதுவான பரஸ்பரத் தொடர்பிலிருந்து அவற்றைப் பிய்த்தெடுத்து தனிமைப்படுத்தி ஆராய வேண்டும். அப்பொழுது மாறுகிற இயக்கங்கள் ஒன்று காரணமாகவும் மற்றொன்று விளைவாகவும் வெளிப்படுகின்றன, என்று எங்கெல்ஸ் கூறியதை பொருட்படுத்தவயில்லை. ஒன்று காரணமாகவும் மற்றொன்றுவிளைவாகவும் இருக்கும் என்று தான் எங்கெல்ஸ் கூறியுள்ளார், இரண்டையும் பரஸ்பரமான ஒத்ததாக கூறவில்லை.

எங்கெல்ஸ் இறுதிகாலத்தில் மறுத்தது நிர்ணயவாதமாகும். இது மார்க்சின் கோட்பாட்டை கொச்சையாகப் புரித்தின் விளைவே தவிர, மார்க்சின் குறைபாடு கிடையாது.

சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை. மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்  ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்
(எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894)

"இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன" என்பதே மார்க்ஸ் எங்கெல்சின் கருத்தாகும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதில் அடித்தளம் மேற்கட்டடைப்பைத் தீர்மானகரமாளிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதே மார்க்சியமாகும். அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிதல் என்பது கருத்துமுதல்வாதமும் இல்லாது பொருள்முதல்வாதமும் இல்லாது கதம்பமான கண்ணோட்டமாகும். இந்தக் கதம்பக் கண்ணோட்டம் இறுதியில் கருத்துமுதல்வாதத்தில் சரணடையும்.

மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சக்தியாக காட்டுவதே தோழர் நாகரத்தினம் நோக்கமாகும்.

“அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர்தான் மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கமுடியாது. அடித்தளத்தின் வழியில் மட்டுமே மேல்கோப்பில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்றும் கூறமுடியாது. அல்லாத வழிகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுதான் இயங்கியல் அணுகுமுறையாகும்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

No comments:

Post a Comment