Saturday 31 March 2018

இந்தியத் தத்துவத்தில் முக்தி - தேவிபிரசாத் சட்டோபாத்யாய


"நமது தத்துவம் வெறும் அறிவின் அவசியமான ஆர்வத்தைவிடச் சிறப்பான வேறொன்று என்று வழக்கமாகவே ஒரு மட்டமானதும் அசட்டுத்தனமானதுமான பேச்சு வழங்குகிறது. ஞானம் அல்லது அறிவு என்பதே நம் நாட்டில் வாழ்நெறியைப் பற்றிய ஒரு மார்க்கம் என்றே கருதபடுகிறது. இதற்கென்ன பொருள்? கருத்திலும் கொள்கையிலும் இருக்க வேண்டிய ஒழுங்கு முறை தகுதியும் பொருத்தமும் பெறவேண்டுமானால் அதை உணர்வுபூர்வமாகப் பண்படுத்த பழக வேண்டும். அதுதான், 'நிச்ரேயஸம்' என்ற மனிதன் மிக உயர்ந்த புருஷார்த்தத்தை - இறுதி உறுதிப் பயனைப் பெறுவதற்கான நல்ல வழி என்றும் கொள்ளப்படுகிறது

'நிச்ரேயஸம்' என்றால், அனைத்தையும் விட மேலாக விருப்பப்படக்கூடிய பெரிய நலம், இதுதான் மனித வாழ்வின் லஷ்யம்; குறிக்கோளும் பயனும் இதுவே. இதுதான் முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறப்படும் வீடு பேறு. அபவர்க்கம், நிர்வாணம், கைவல்யம், நிரோதம் என்ற சொற்களும் இதே பொருளில் வழங்கப்படுகின்றன. தத்துவவாதிகளில் ஒரு சிலரைத் தவிர அனைவருமே தங்கள் தத்துவ ஆராய்ச்சிகள் இந்த மோட்சத்திற்கான வழியை நாடித் தேடுவதற்கே என்று கூறிக் கொள்கிறார்கள். இந்தியத் தத்துவமே மோக்ஷமென்று கள் மயக்கத்திலேயே மூழ்கிக்கிடப்பது போல் தோன்றுகிறது. அதன் ஒவ்வொரு இழையும் - பந்தத்திற்கு - கட்டிற்கு - விடுதலைக்கு எதிரான விலங்கிற்கு எதிராகவே ஓடுகிறது.

இவற்றில் சாரமே இல்லையென்றும் கூறமுடியவில்லை, ஆரம்பகாலத்து மீமாம்சகர்களும் லோகாயதர்களும் தவிர, நமது தத்துவவாதிகள் எல்லாருமே அநேகமாக மோக்ஷம் பற்றிய வினாவை எழுப்பி உரிய விடை தரும் விஷயத்தை மிகவும் விசித்திரமாகவே மிக அவசியமானதாகக் கொள்கின்றனர். தங்களுடைய கொள்கைக்குத் தான் அடிப்படையிலேயே மோக்ஷமடைவதற்கான சாரமும் பொருத்தமும் இருக்கிறதென்றும் அவர்கள் காட்டிக் கொள்கின்றனர். ஒவ்வொரு தத்துவ நூலும் தான் கூறும் விஷயம் மோக்ஷம் என்ற பெரு நலத்தை அளிக்கும் என்ற அறிவிப்புடன்தான் தொடங்குவது வழக்கம்.

அவர்களுக்கெல்லாம் மோட்சத்தை நாடுவதிலேயேதான் நோக்கம் ன்பதிலும் ஐயமில்லை, அவர்கள் நாடுவது என்ன என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். திட்டமான வகையில் போதுமான அளவில் விடுதலையின் இயல்பு பற்றிய தெளிவான கருத்தைக் கண்டு கூறும் வகையில் வெறும் ஏட்டுப்படிப்பைவிட அதிகமாக ஒன்று வேண்டும். அவர்கள் கூறுவதில் கருணையும் சற்றுக் கலந்திருக்கலாம். இருந்தும் ஏதோ ஒன்று இல்லை. அந்தக் குறையாது என்றும் வரலாற்று முறையில் அவர்களுக்கு ஏன் அது வாய்க்கவில்லை என்றும் காண்போம்."
(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
 அழிந்தனவும் - பக்கம் 635 - 636)



No comments:

Post a Comment