Saturday, 31 March 2018

கருத்து முதல்வாதத்தின் எதிரிகளும், மோக்ஷமும்- தேவிபிரசாத் சட்டோபாத்யாய


அதிதீவிரமான கருத்து முதல்வாதம் விடுதலை பற்றி அறவே எதிர் மறையான கருத்தைத்தான் கூற முடியும்; மனு முதலியவர்கள் அதை உயர்த்திக் கூறுவதும் புரிகிறது; அது மக்களை மந்திரம் போல் கட்டிப்போட்டு மக்களை அடிமைத் தளையிலே வைக்க உதவுகிறது. ஆனால் இந்தியத் தத்துவத்தில் மற்றொரு விசித்திரத்தை அதாவது இதே கருத்து தத்துவங்களில் கூடத் தனியாட்சியும் செல்வாக்கும் பெறுவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்திய மரபில் கருத்துமுதல்வாதப் போக்கு ஒன்று தான் உண்டு என்பதில்லை; அதனைச் சிறப்புடையதாக்குவது அதற்கு நேர் எதிரான போக்கு அதை எதிர்ப்பதுதான். கருத்து முதல் வாதத்தோடு அவர்கள் தொடுக்கும் போரில் ஏற்று நிறுவும் பல தத்துவ நிலைப்பாடுகளுக்கும் தனித் தனிச் சிறப்பு உண்டு; அவை பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இன்று நடந்து வருகின்றன; அவர்கள் இயற்கை உலகும் பிறவும் நிஜமே என்பதை நிலை நாட்ட மிக அற்புதமாக முயன்றுள்ளனர்; உலகை அறிந்துணர்வதற்கான எளிய - ஸர்வ சாதாரணமான வழிகளையும் கண்டு கூறியுள்ளனர்; அவர்களில் சிலர் இயற்கையை ஊடுருவிக் காணும் பார்வையை வளர்த்திருப்பது, அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது பல சமயம் ஆச்சரியத்தைத் தருகிறது.

இதையெல்லாம் காணும்போது, கருத்து முதற்கோட்பாட்டை எதிர்ப்பவர்களிடமிருந்து விடுதலை பற்றிய வேறுபட்டதொரு கருத்தை, அடிப்படையில் சாதகமான ஒரு கருத்தை எதிர்பார்ப்பது தானே நியாயம்?

ஆனால் அடிப்படையில்லை என்பதுதான் உண்மை. மிகக் கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்க்கும் அத்தகைய சாதகமான கருத்தைக் கூற முன் வரவில்லை . அறிவு பற்றியும் வாழ்வு பற்றியும் மிகவும் உபயோகமான நிலைப்பாடுகளை வளர்த்துக் கொண்டனர். ஆனால் கருத்துமுதற் கோட்பாட்டுக்கு எதிராகக் கிளம்பிய வாதப் பிரதிவாதப் புயல் உண்மை நிலையான சமுதாயப் பிரச்னைகளைத் தொடவேயில்லை. என்ன செய்யவேண்டும் எந்தத் திசையில் செய்யவேண்டும் என்பது பற்றி எதுவுமே கூறவில்லை. அவர்கள் விடுதலை பற்றி அவர்களுக்கு அவ்வளவாக அக்கறை இல்லாமல் இருந்திருந்தால் இது இவ்வளவு விசித்திரமாக நமக்குத் தோன்றாது. அவர்களுக்கு அத்தகைய அக்கறை இல்லை என்றும் தெரிய வில்லை; அவர்களுக்கு கிடைத்திருந்த ஆராய்ச்சி சாதனங்கள் அவ்வளவாகப் பக்குவம் பெற்றிருக்கவில்லை. ஆகவே, அவர்களுக்கு அத்தகைய அக்கறை இல்லாமல் இருந்திருப்பதும் சாத்தியம் தான்.

ஓரளவு பிற்காலத்தில் கருத்து முதற்கோட்பாட்டின் எதிரிகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற சிலர் தங்களுடன் போட்டி போடும் கருத்து முதல்வாதிகளைப் போலவே மோக்ஷத்தைப் பற்றித் தீவிரமாகப் பேச முனைகின்றனர். அவர்களின் இந்தத் தீவிரமும் அவர்களை ஒரே ஒரு லஷ்யத்தை நோக்கியே செலுத்துவதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. அவர்கள் கூறும் மோக்ஷமும் அடிப் படையில் கருத்து முதல் வாதிகள் கூறுவதையே அடியொற்றிச் செல்கிறது. மோக்ஷம் - இறுதி ரக்ஷணை - பெருநலம் என்பது சாராம்சத்தில் தூய ஆத்மஞானத்தில்தான் அடங்கியுள்ளது என்றே அவர்களும் நினைக்கின்றனர் இந்த எண்ணமும் முடிவும் முழு முற்றானதும் வெட்கக்கேடானதுமான முரண்பாடுடையது. பார்வையின் அமைப்புக்கும் அதனுடன் ஒட்டுக் கொடுத்துச் சேர்த்ததும் இதற்கு நேர் எதிரானதுமான மோக்ஷம் பற்றிய கொள்கைக்கும் உள்ள முரண்பாடு இது. மோக்ஷம் பற்றி இவர்கள் கூறுவதை உண்மை யாகவே கொண்டால் இந்தத் தத்துவங்களின் கொள்கை பற்றிய ஒருமைப்பாடும் ஒற்றுமையும் தகர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இதில் மிகவும் விநோதமான புதுமையான ஒரு விஷயமும் இருக்கிறது; கருத்து முதற்கோட்பாட்டுக்கு எதிர்த் தரப்பினராகவே பிற்காலத்தில் வந்த, முதிர்ச்சியும் ஆடம்பரமும் நிறைந்த சிலர் இதை நன்கு அறிந்திருந்தும் இந்த அபாயத்தைப் பொருட்டுத்தாமலேயே போய் விடுகின்றனர். தங்கள் தத்துவத்தின் ஆதார அஸ்திவாரம் பலமாய் இருக்க வேண்டுமே என்ற கவலை இல்லாமலோ அல்லது அஜாக்கிரதையாகவோ அல்லது அசட்டுத் துணிச்சலிலோ, சிறிதும் வளைந்து கொடுக்காத்தும் எதிர் மறையானதுமான இந்த கருத்து முதல்வாதம் கூறும் மோக்ஷம் என்ற கொள்ளிவாய்ப் பிசாசையே பின்பற்றி விரும்பிச் சேர்த்துக் கொண்டு விடுகின்றார்கள். தங்களுக்குப் பொருந்தாத முரண்பாட்டுச் சகதியில் அழிந்தும் விடுகின்றனர்.

நான் மேலே சொன்னது ஏதோ அபூர்வமாய் நேர்ந்து விட்ட ஒரு செய்தியன்று; லோகாயதர்களைத் தவிர மற்ற தத்துவவாதிகள் அனைவரிடத்திலும் இந்தப் போக்கு ஓரே மாதிரியாய் ஒரே மாதிரியான விபத்தையும் ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் நிகழ்வதைக் காண்கிறோம். இதனால் இந்த விபத்து மிகவும் தீவிரமும் உறுதியும் பெற்றுவிடுகிறது.

இதை நாம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக, நியாய வைசேஷிகர், ஸாங்க்யர், மீமாம்ஸகர்கள் ஆகியோர் மோக்ஷம் பற்றிக் கூறுவதை ஆராய நினைக்கிறேன்.
(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
 அழிந்தனவும் - பக்கம் 643 - 645)

No comments:

Post a Comment