Thursday, 6 April 2017

இயக்கவியலின் வகையினங்கள்

(Categories of dialectics)

எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடிகிறது. அரசியல் பொருளாதாரம் என்கிற விஞ்ஞானத்தை படித்தறிவற்கு சரக்கின் இரட்டைத் தன்மை, உழைப்பின் இரட்டைத் தன்மை, உற்பத்திக் கருவிகள், உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள், மூலதனம், உபரி மதிப்பு, மறுவுற்பத்தி போன்ற வகையினங்களை அறிந்திருக்க வேண்டும். தத்துவம் என்ற விஞ்ஞானத்துக்கு  உணர்வுநிலை, பருப்பொருள், விசும்பு, காலம், அறிவுத் தோற்றவியல் போன்ற வகையினங்கள் இருக்கிறது.

இயக்கமறுப்பியல் கண்ணோட்டம், புறநிலையின் கூறுகளின் இணைப்பையும் தொடர்பையும் ஒப்புக் கொள்வதில்லை. அதனால் காரணம், விளைவு, உள்ளடக்கம், வடிவம் என்பது போன்ற வகையினங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

வகையினங்கள், புறநிலையான உண்மைகளை அறிதலின் நிகழ்வுப்போக்கால் உருவாகின்றன. இந்த வகையினங்களின் மூலம் சுற்றியுள்ள உலகின் புறநிலைக் கூறுகளின் பிரதிபலிப்பைக்கொண்டு அனைத்தின் தொடர்பு, இணைப்பு ஆகியவைகளை அறிந்துகொள்ளப்படுகிறது.


இந்த வகையினங்களை அறிந்து கொள்ளும்போது அவற்றின் சொல்விளக்கத்தோடு நின்றுவிடக்கூடாது. அச்சொல் உணர்த்தும்  விளக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதன் ஆழ்ந்த பொருளை அறிய வேண்டும்.

1.தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)

உலகில் காணப்படும் ஒவ்வொரு பொருளும், நிகழ்வும் அவற்றுக்கே உரிய தனியான தன்மையும், அவைகளுக்கு உரிய பொதுத் தன்மையும் பெற்றதாக இருக்கிறது. முற்றிலும் ஒரே மாதிரியான இரண்டை பார்க்க முடியாது. ஓரே மரத்தில் காணப்படும் இலைகள் ஒவ்வொன்றும் சிறுமாற்றங்களையேனும் தம்முள் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அவ்விலைகளுக்கிடையே உள்ள பொதுத் தன்மையாக அவைகள் ஒருகுறிப்பிட்டவகை மரத்தின் இலைகள் என்று அறிந்துகொள்ள முடிகிறது.

சமூகத்தில் காணப்படும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டே இருக்கின்றனர், அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் ஒத்ததன்மை பெற்றவர்களாவர்.

ஓரேவிதமாக, திரும்பத்திரும்ப  நிகழும் தன்மையே சர்வப்பொதுவானது என்றழைக்கப்படுகிறது. ஒரேவிதப் பொருட்களில் அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் காணமுடிகிறது. அவற்றிடையே காணப்படும் வேறுபடுத்தும் தன்மையை தனியானது என்று அழைக்கிறோம்.

 ஒப்பிட்டுப் பார்க்கையில் அவற்றுக்கிடையே காணப்படும் வேறுபாடுகள், குறிப்பான தன்மை மற்றும் பொதுவானது ஆகிய  மூன்றையும் பிரித்தறிவதற்கு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

மாம்பழம் என்பது தனியானது. மாமரம் என்பது குறிப்பானது.  மரம் என்ற வகையில் சர்வப்பொதுவானது.

அதே போல் சமூக மாற்றம் என்பது சர்வப்பொதுவானது. அதில் தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி போன்றவை குறிப்பானது. குறிப்பிட்ட நாட்டில் நடைபெறுவதை தனியானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

தனியானது, குறிப்பானது, சர்வபொதுவனது ஆகியவை பிரிக்க முடியாத ஒற்றுமையைக் கொண்டதாகும்.

2. காரணமும் விளைவும் (Cause and Effect)

ஒரு நிகழ்வு நடைபெற்றது என்றால், அது நடைபெறுவதற்கான காரணங்களின்றி தோன்றுவதில்லை. நிகழ்வு குறிப்பிட்ட காரணங்களின் விளைவாகும். காரணம் இன்றி ஒரு நிகழ்வும் நடைபெறுவதில்லை. குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துகின்ற காரணியே அந்நிகழ்வு தோன்றுவதற்கான காரணமாகும். ஒரு நிகழ்வு மற்றொரு நிகழ்வை உருவாக்குகிறது என்றால் முந்தையது காரணம் என்றும்  பிந்தையது விளைவு என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது காரணமான நிகழ்வு எப்போதும்  விளைவுக்கு முன்பானது.  விளைவு காரணத்துக்கு பிந்தியதாகும்.

காரணத்தால் ஏற்படுகிற விளைவு என்பது காலவரிசைத் தொடரை வெளிப்படுத்துகிறது. இத் தொடர்ச்சி காரணமும் விளைவும் இடங்களை மாற்றிக் கொள்வதையும் உணர்த்துகிறது. இப்போது விளைவாய் காணப்படும் நிகழ்வு மற்றொன்றுக்கு காரணமாகும்போது முந்தைய விளைவு புதியதுக்குக் காரணமாகிறது. இவ்வாறே இதன் தொடர்ச்சி நடைபெறுகிறது.

குறிப்பிட்ட காரணங்கள் நிலவும் போது குறிப்பிட்ட விளைவைக் கட்டாயம் ஏற்படுத்துகிறது என்பதில் அவற்றின் அவசியத் தன்மை அடங்கியிருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டின் காரணத்தால்தான் பொருளாதார நெருக்கடி என்ற விளைவு ஏற்படுகிறது. சந்தையின் தேவையை அறிந்திட முடியாமல் முதலாளித்துவ உற்பத்தி நடைபெறுகிறது. திட்டமிடாத வகையில் தனித்தனி முதலாளிகளின் லாபநோக்கில், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து உற்பத்தியில் ஈடுபடுத்துவதால் உண்டாகும் மிகை உற்பத்தியின் காரணமாகவே பொருளாதார நெருக்கடி என்ற விளைவு ஏற்படுகிறது

3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)

அவசியம் என்பது காரணத்தின் விளைவாய் நடைபெறுகிறது. அதாவது சில தொடர்புகளினுடைய இயல்புகளினால் ஏற்படுகின்ற சூழ்நிலைமைகளால் உருவாவதே அவசியம்.  தற்செயல் என்பது நடைபெறலாம், அல்லது நடைபெறாமல் போகலாம் என்பதை உணர்த்துகிறது.

புறநிலைமைகளினுடைய வளர்ச்சியின் தவிர்க்க முடியாததின் விளைவாய் அவசியம் தோன்றுகிறது. அதே போன்று தற்செயலும் முழுதும் காரணங்களற்ற  நிலைமைகளில் தோன்றுவதில்லை.  தற்செயல் நிகழ்ச்சிகள் தோன்றுதற்கான காரணங்களும் இருக்கவே செய்கிறது. தற்செயல் என்பதை காரணமற்ற விளைவாய் பார்க்க முடியாது.

ஏன் என்றால் அவசியம் போன்றே, தற்செயலும் புறநிலைத் தன்மையானது. அதனால் தற்செயலை அவசியத்தின் வெளிப்பாடாக, அவசியத்துக்கு துணைபுரிவதாக இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தற்செயல் ஒப்பீட்டு நிலையானது தான், அவசியத்தின் தொடர்புகளற்ற தற்செயல் என்பது கிடையாது. குறிப்பிட்ட நோக்கில் அது தற்செயலானது, அதுவே வேறொரு நோக்கில் அவசியத்தின் தொடர்பு பெற்றிருப்பதை காணலாம்.

தற்செயல் என்பது நடைபெறலாம் அல்லது நடைபெறாது போகலாம், ஆனால் சாத்தியமானதே. அதாவது தற்செயல் எந்த சாத்தியமற்ற நிகழ்வையும் நடத்திக் காட்டுவதில்லை. தற்செயல் என்பது இடைத்தொடர்பின் ஒரு முனையேயாகும், அதன் மற்றொரு முனை அவசியமாக இருக்கிறது.

இயக்கவியல் பற்றிய அறியாமை பலபேரை அவசியத்தையும் தற்செயலையும் எதிர் எதிர்நிலைக்குக் கொண்டு செல்கின்றது. ஒருசிலர் அவசியத்தின் அடிப்படையில் மட்டும் நிகழ்வுகள் உலகில் நடைபெறுகிறது என்று நினைக்கின்றனர். இவர்கள் அவசிய நிலையை அறுதியான ஒன்றாக பரம்பொருளாக காண்கின்றனர்.

மற்றும் சிலர் அவசியம் என்பதை மறுக்கின்றனர். தற்செயலால் மட்டுமே அனைத்தும்  நிகழ்கிறது என்கின்றனர். ஆனால் இயக்கவியல், அவசியத்தின் அடிப்படையில் மட்டும் அல்லது தற்செயலாகத்தான் நிகழ்வுகள் மட்டும் நடைபெறுகின்றன என்பதை மறுத்து, இவ்விரண்டுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவை ஏற்றுக் கொள்கிறது.

தற்செயல் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சிப் போக்கில் அவசியமாகிறது.

அவசியம் என்பதை தூய நிலையில் புரிந்து கொள்ளக் கூடாது. பல்வேறு தற்செயல் நிகழ்வின் தொடர்ச்சியில் அவசியம் ஆகிறது. ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் எதிர்வினை புரிகிறது.

இதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாய் விளக்கலாம். நிறைமாதக் கர்ப்பிணி இரயிலில் பயணம் மேற்கொள்கிறார். இடையில் பிரசவ வலி ஏற்பட்டு விடுகிறது. பிரசவிப்பதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதே இரயிலில் ஒரு மருத்துவர் பயணம் செய்கிறார். அந்த மருத்துவரின் உதவியுடன் இரயில் பெட்டியிலேயே பிரசவம் சுகமாக நடைபெறுகிறது. மருத்துவரின் பயணம் ஒரு தற்செயல் நடவடிக்கையே. ஆனாலும் இந்த தற்செயல் நிகழ்ச்சி பிரசவத்தின் தேவையை நிறைவேற்றி விடுகிறது. 

சமூக மாற்றம் என்பது, வரலாற்று வளர்ச்சியின் விதியின்படி ஏற்படுகிறது. இது வரலாற்றின் அவசியத்தைக் குறிக்கிறது. இந்த சமூக மாற்றம் பல்வேறு தற்செயல் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. புரட்சியை நிகழ்த்தும் போது அந்தக் கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நபர் தற்செயலான செயற்பாடே, ஆனால் இந்த தற்செயல் அவசியத்தின் செயல்முறைகளின் மூலமாகவே நடைபெறுகிறது

4. உள்ளடக்கமும் வடிவமும்  (Content and Form)

உள்ளடக்கம் என்பது குறிப்பிட்ட நிகழ்வின் இருப்புக்கும், அதன் வடிவங்கள் தோன்றுவதற்கான நிர்ணயிப்பாகவும் இருக்கிறது. வடிவம் என்பது உள்ளடக்கத்தின் கட்டமைப்பாகவும், அது நிலவுவதற்கான சாதனமாகவும் இருக்கிறது.

உள்ளடக்கமும் வடிவமும் ஒன்றை  ஒன்று பிரிக்க முடியாத நெருக்கம் கொண்டவையாகும். ஒரு நிகழ்வு என்பது உள்ளடகத்தையும் வடிவத்தையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ளடக்கம் நிர்ணயகரமான தன்மையைப் பெற்றிருக்கிறது.

உள்ளடகத்துக்கு பொருத்தமான வடிவம் என்பது அந்நிகழ்வின் வளர்ச்சிக்கு முக்கிய  நிபந்தனையாக இருக்கிறது. இந்த பொருத்தம் என்பது முழுமையானதாக, மாறாததாக, நிலையானதாக கருத முடியாது.

வடிவம் உள்ளடக்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், வடிவம் ஒப்பீட்டு வகையில் சுதந்திரம் பெற்றிருக்கிறது. தன்னளவில் உள்ளடக்கத்தோடு எதிர்வினை புரிகிறது. இந்த எதிர்வினை இரண்டு வகைகளில்  நிகழ்கிறது. ஒன்று உள்ளடக்கத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றது அப்போது உள்ளடக்கத்தின் வளர்ச்சி சீரானதாக இருக்கிறது. மற்றொன்று உள்ளடக்கத்தின் ஏற்றவகைக்கு பொருந்தாமல் இருக்கின்றது, அப்போது வளாச்சியைத் தாமதப் படுத்துகிறது அல்லது பின்னோக்கித் தள்ளுகிறது.

உள்ளடக்கம் வடிவம் இவற்றில் உள்ளடக்கம் முதலில் மாற்றம் பெறுகிறது அதற்கு ஏற்ப வடிவத்தில் மாற்றம்  நிகழ்கிறது. புதிய உள்ளடக்கத்துக்கும் பழைய வடித்துக்கும் இடையே முரண்பாடு முற்றி மோதல் வலுப்பெறுகிறது. மோதலின்  விளைவாய் பழைய வடிவம் தூக்கி எறியப்பட்டு புதிய உள்ளடக்கத்துக்குப் பொருத்தான புதிய வடிவம் தோற்றுவிக்கப்படுகிறது.

உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் உள்ள இடைத் தொடர்பை சரியான வகையில் புரிந்து கொள்ளுதல் நடைமுறை வேலைக்கு முக்கியமானதாகும்.

தண்ணீர் திரவமாக இருப்பதால் அதனை  ஒரு பாத்திரத்தில் வைக்கிறோம். அப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை 100 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்க வைக்கும் போது தண்ணீர் நீராவியாக மாறுகிறது. உரு மாறிய நீராவியை தற்போது அதே பாத்திரத்தில் நிறுத்திவைக்க இயலாது. மாறாக அதை அடைத்து வைப்பதற்கு  சிலிண்டர் தேவைப்படுகிறது. எனவே உள்ளடக்குத் தக்கபடி அதனைத்தாங்கும் வடிவம் மாறி விடுகிறது.

நிலப்பிரபுத்துவம் நிலவியபோது முடியாட்சி அதன் அரசியல் வடிவமாக இருக்கிறது. வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றியபோது பழைய அரசியல் வடிவமான முடியாட்சி ஒவ்வாததாகி விடுகிறது. முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற வடிவமாக நாடாளுமன்றம் தோன்றுகிறது. ஆனால் அந்த நாடாளுமன்றம் பிரதம மந்திரியின் தலைமையைக் கொண்டதாக இருக்கலாம் அல்லது ஜனாதிபதியின் தலைமையைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் இவையிரண்டும் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானதாகவே இருக்கும்.

5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)

புதியதான ஒன்று தோன்றுவதற்கான நிலைமைகள் நிலவுவது சாத்தியம் என்றழைக்கப்படுகிறது. அதாவது எதிர்காலத்தில் தோன்றக்கூடிய தன்மைகளையும், நிகழ்வுகளையும் எதார்த்த வளர்ச்சியின் புறநிலையான தன்மையாக  சாத்தியம் பிரதிபலிக்கிறது.

எதார்த்தம் என்பது விரிவான பொருளிலும் குறுகிய பொருளிலும் அறியப்படுகிறது.  விரிந்த பொருளில் எதார்த்தம் என்பது புறநிலையில் நிலவுகின்ற அனைத்தையும் குறிக்கிறது. குறுகிய பொருளில் எதார்த்தம் என்பது செயற்படுத்தப்பட்டதை அதாவது நிறைவேற்றப்பட்டதை குறிக்கிறது.


சாத்தியமும் எதார்த்தமும் தம்முள் பின்னிப்பிணைந்திருக்கின்றன. எதார்த்தத்தின் வளர்ச்சியில் சாத்தியம் தோன்றுகிறது. சாத்தியமானதின் தயாரிப்பினால் யதார்த்தம் ஆகிறது.

சமூக வாழ்வில், உணர்வும் சித்தமும் கொண்ட மக்கள் செயற்படுகின்றனர். சமூக வாழ்வில் மாற்றம் என்பது இயற்கையில் நிகழ்வதுபோல் மக்களைச் சாராமல் நிகழ்வதில்லை. சமூகத்தில், மாற்றத்தை நிகழ்த்துவதற்கு புறநிலைமைகளோடு, மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காகப் பாடுபடுகின்ற உறுதியான வர்க்கம், அதற்கு துணைபுரிய அனைத்து மக்கள், இவற்றைத் தலைமை தாங்கி நடத்தக் கட்சி போன்ற அகநிலைமைகளும் அவசியமாகின்றன.

இயற்கை மாற்றம் தன்னியல்பாகவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாக செயற்படுகிறது. சமூக மாற்றத்துக்கான நடைமுறைக் கோட்பாட்டை வகுத்துக் கொள்வதற்கும், பாட்டாளி வாக்கம் தம்மை உறுதிபடுத்துவதற்கும்  இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை குறிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை கட்சி உறுதியாகக் கையாள வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் உள்முரண்பாட்டின் முதிர்ச்சியின் வெளிப்பாடாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எல்லாப் பொருளாதார நெருக்கடியும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. இந்தத் தொடர் நிகழ்வு முரண்பாட்டின் முதிர்ச்சியை, புரட்சியை ஏற்படுத்தும்  சாத்தியப்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. கட்சி, அதற்கு ஏற்றத் தலைமை, அன்றைய வர்க்கங்களின் கூட்டணி ஆகியவை இந்த சாத்தியப்பாட்டைத் தேர்ந்தெடுத்து, எதார்த்தமாக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் சாத்தியமானவை எதார்த்தமாகும்.

6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

ஒவ்வொரு பொருளும் இரண்டு தன்மை பெற்றுள்ளது. ஒன்று சாராம்சம் மற்றொன்று புலப்பாடு (Phenomenon). பார்க்கின்ற பொருளின் புறவடிவமே புலப்பாடு. புலப்படுகின்ற வடிவத்தைத் தீர்மானிக்கின்ற அல்லது புறவடிவத்தில் வெளிப்படுகின்ற உள்ளடக்கம் சாராம்சம் (Essence).

சாராம்சம் என்பது பொருளின் அடிப்படைகளின் இணைப்புகளையும் உள்விதிகளையும் இணைத்த முழுமையைக் குறிக்கிறது. இவையே அப்பொருளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இந்தப் பொருட்களின் மாற்றம், வளர்ச்சி என்பது உடனடியாக மேற்பரப்பில் அதாவது புறவடிவத்தில் வெளிப்படுவதில்லை. அந்த மாற்றங்கள் புறவடிவத்தின் உள்ளே சூக்குமமாக மறைந்து இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்கள் புலனுறுப்புகளால் நேரடியாக  அறியப்படுவதில்லை. புலனுறுப்புகளின் ஒட்டுமொத்த விளைவின் ஊடே, சூக்கும சிந்தனையின் வாயிலாக அறியப்படுகிறது.

புலப்பாடு என்பது நிகழ்வின் தோற்றாப்பாடேயாகும். ஒரு பொருளின் இயக்கத்தை அதாவது நிகழ்வை மனிதன் நேரடியாக புலன்களின் மூலம் அறிவதை இது காட்டுகிறது. அதாவது பொருளினுடைய நிகழ்வின் மேற்பரப்பை முதலில் மனிதன் கவனிக்கிறான். பொருளினுடைய நிகழ்முறையின் வெளிப்பாடான புறத்தோற்றத்தையே புலப்பாடு என்கிறோம்.

சாராம்சமும் புலப்பாடும் இரண்டும் ஒன்றிணைந்த பகுதியாகும். இதில் சாராம்சம் இல்லாமல் புலப்பாடு இல்லை. சாராம்சத்தில் தோன்றியது புலப்பாட்டு வடிவமாக வெளிப்படுகிறது. சாராம்சத்தின் உள்ளடக்கத்தை புலப்பாட்டு வடிவத்தில் வெளிப்படுத்துகிறது.

மின்சாரம் என்பது சாராம்சமாகும், அந்த மின்சாரத்தின் ஆற்றல் மின்விசிறியாக, மின்சார ரயிலாக, மின்மோட்டாராக நமக்குப் புலப்படுகிறது. எந்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடும், அந்த உட்சாரத்தின் ஆற்றலையே பிரதிபலிக்கின்றன.


சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளிவர்க்கத்திற்கும் முதலாளித்துவவர்க்கத்திற்கும் இடையிலான பகைமை, வர்க்கப் போராட்டமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது

இயக்கவியல் (Dialectics)

“இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு
தலைப்பட்மில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி
விளக்கி விவரிக்கும் போதனையாகும், நிரந்தரமாக வளர்ச்சியுற்ற
வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும்
மனித அறிவின் சார்வுநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.”
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

      இயற்கை, சமூகம் இரண்டிலும் ஏற்படும் வளர்ச்சி, மாற்றம் என்பது விதி (Law) முறையின்படி நிகழ்வதாக பொருள்முதல்வாத இயக்கவியல் (Dialectics) நிறுவுகிறது. இங்கு விதி என்பது, புலப்பாடுகளுக்கு இடையேயான உள்ளார்ந்த இணைப்பும் தொடர்பும் பரஸ்பரம் சார்ந்துள்ளதைக் குறிக்கிறது.

      புலப்பாடுகளில் காணப்படும் அனைத்து தொடர்புகளையும் விதி என்று கொள்வதில்லை. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நிகழக்கூடியதாக இருப்பதே விதி எனப்படும். இவற்றின் தொடர்பு  என்பது நிலைமைகளில் வளர்ச்சித் தன்மையை நிர்ணயிப்பதாக இருக்கும்.

      இயற்கை மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியை அறிந்து, அந்த வளர்ச்சியின் தொடர்ச்சியைப் புரிந்து மக்கள் உணர்வுபூர்வமாக செயற்பட முடியும் என்பதை இயக்கவியல் ஏற்கிறது.

      இன்றைய சமூகம் நீடித்து இருப்பதில் பலன்களை அனுபவித்து வருபவர்கள், இயற்கையும் சமூகமும் விதிகளின்படி செயற்படுவதை மறுதலிக்கின்றனர். இவர்கள் இயக்கவியலை ஏன் மறுகின்றனர் என்றால், இன்றைய சமூகத்தின் வடிவத்தில் ஏற்படும்  வளர்ச்சியும் மாற்றமும் அதன் இறுதிவிளைவான மறைந்து அடுத்த சமூகத்துக்கு மாறிப் போவதை இயக்கவியல் குறிப்பிடுகிறது. இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் தான் இயக்கவியலை மறுக்கின்றனர்.

      இவர்களின் இயக்கமறுப்பியல், வளர்ச்சி என்பதை அளவுநிலையில் ஏற்படுகின்ற குறைதல் அல்லது கூடுதல் என்பதாக எளிமைப்படுத்துகின்றது. இந்த இயக்கமறுப்பியலின் மாற்றம் என்பது பொருட்களின் தனிப்பட்டவையாகவும் அனைத்துடன் உள்ள தொடர்பிணைப்பை ஏற்றுக் கொள்ளாமையிலும் அடங்கியிருக்கிறது.

      பொருள்முதல்வாதத்தின் இயக்கவியல் அனைத்து பொருட்களின் இணைப்பை வலியுறுத்தி, தனது பொருளாயத ஒருமையை வெளிப்படுத்துகிறது.

      இயக்கவியல், உலகத்தையும் அதன் வளர்ச்சியின் விதிகளையும் அறிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் செயற்படுவதால், அந்த விதிகளின் வழியில் சென்று இயற்கையையும் சமூகத்தையும் புரட்சிகரமாக மாற்றுவதற்கு பயன்படுகிறது.
               
      பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் இயல்பிலேயே இயக்கவியலைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். ஆனால் அந்த இயக்கவியல் எளிமையானதாகவும் விஞ்ஞானத் தன்மையற்றதாகவும் இருந்தது.

      பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஹெகல் இயக்கவியலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். வளர்ச்சி என்பது எதிர்மறைச் சக்திகளின் போராட்டம் என்றும் பொருட்களின் உள் முரண்பாடுகள் அதன் இருப்புக்கும் இயக்கத்துக்கும் காரணம் என்றும் கூறினார். அவர் இயக்கவியலை மீண்டும் நடைமுறையில் கொண்டு வந்தது பெரும் சிறப்புக்குரிய செயலாகும். இதன் அடிப்படையில்தான் மார்க்ஸ் தன்னை ஹெகலின் மாணவன் என்று அறிவித்தார்.

      மார்க்ஸ் தனது இயக்கவியல் ஹெகலின் வழிமுறையில் இருந்து வேறுபட்டது மற்றும் நேர் எதிரானது என்பதை வலியுறுத்தியுள்ளார்.


      எதார்த்த உலகின் கர்த்தாவாக, கருத்தை ஹெகல் முன்னிறுத்துகிறார். எதார்த்த உலகம் கருத்தின் புறவடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை என்று அவர் கருதுகிறார். மார்க்சுக்கு கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை.

      ஹெகலின் இயக்கவியலில் காணப்பட்ட மாயாவாதத் தன்மையை மார்க்ஸ் விமர்சித்து, பொருள்முதல்வாத தன்மை பெற்றதாக அதனை செழுமைப்படுத்தினார். உலகம் எப்படி உள்ளதோ அதை எந்தவித வெளிச் சேர்க்கையும் இன்றி,  உள்ளதை உள்ளபடியில் ஆராய்ந்தார்

      பிற நிகழ்வுடன் பல்வகைத் தொடர்புகள் இன்றி எந்த நிகழ்வும் நடைபெறுவதில்லை. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருட்கள், நிகழ்வுகளின் பரஸ்பரத் தொடர்பு, புறநிலையான பொதுத்தன்மையைக் காட்டுகிறது. நிகழ்ச்சிகளின் வளர்ச்சி என்பது தம்முள் கொண்டுள்ள தொடர்புகளின் தாக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது.

      உலகத்தின் அனைத்து இடைத்தொடர்புகளை நிறுவுகின்ற பொது விதிகளை இயக்கவியல் விதிகள் என்றழைக்கப்படுகின்றன.

இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.

1.   அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.
(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

2.    எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

3.    நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)

1, அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.  (The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

      உலகத்தில் எண்ணற்ற பொருட்களையும், அவற்றின் நிகழ்வுகளையும்  நாம் காண்கிறோம். இவைகள் தொடர்ச்சியான இயக்கத்திலும் மாற்றத்திலும் இருக்கின்றன. இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் மற்ற பொருளோடு வேறுபட்ட தன்மையோடு காணப்படுகிறது. குறிப்பிட்ட பொருள் வேறொரு பொருளுடன் கொண்டுள்ள வேறுபட்ட பண்பைக்கொண்டு அதனை வேறுபடுத்திக் காண்கிறோம். அப் பண்பின் ஒப்பீட்டுத் தன்மையோடு அப்பொருள் நிலைபெற்றிருக்கிறது. அந்தச் ஒப்பீட்டுத் (Relative) தன்மையே அப்பொருளை ஒரு குறிப்பிட்ட பொருளாக திட்டவட்டமாக சுட்டுகிறது

      குறிப்பிட்ட பண்புகள் அப்பொருட்களில் காணப்படும் அளவுகளால் நிலைகொள்கிறது. பண்புகளைப் படைக்கின்ற பொருட்களின் அளவு மாற்றங்கள் அப்பொருளின் பண்பு மாற்றங்களாக வடிவ மாற்றம் பெறுகின்றன.

      இதனைப் புரிந்து கொள்வதற்கு அளவுநிலை, பண்புநிலை என்ற சொல் எதனை விளக்குகிறது என்பதை முதலில் அறிந்திட வேண்டும்.

      அளவு என்பது, ஒரு பொருள் அப்பொருளின்  பண்பு வடிவமாக இருப்பதற்கு உரிய உட்பொருள்களின் அளவைக் குறிக்கிறது. அளவுமாற்றம் என்பது, பழைய உட்பொருட்களில் ஏற்படுகின்ற குறைவு மற்றும் அதிகரிப்பு போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த அளவு மாற்றம் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன் பழைய பண்பு மறைந்து புதியப் பண்பை பெறுகிறது. இந்தப் புதிய பண்பைப் பெற்றதற்கான, பழைய உட்பொருளில் ஏற்படுத்திய அளவின் மாற்றத்தையே அளவுமாற்றம் என்கிறோம்.

      ஒரு பொருள் எத்தன்மையது என்று வெளிப்படுத்துகிறதோ அந்த வெளிப்பாட்டுத் தன்மையே பண்பு எனப்படும். பண்பு மாற்றம் என்பது பழைய பொருட்களின் உட்பொருளில் ஏற்படுகின்ற அளவு மாற்றம் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன், பழைய பண்பு மறைந்து புதிய பண்பைப் பெறுவதைக் குறிக்கிறது. இந்தப் புதிய பண்பை எட்டுகின்ற மாற்றமே பண்பு மாற்றமாகும்.

      ஒரு பொருள், தன்னை ஒரு பொருளாக திட்டவட்டமாய் காட்டிக் கொண்டிருக்கும்போதே தம்முள் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களின் அளவு சிறுகச்சிறுக நடைபெறும். அவ்வாறு சிறுகச்சிறுக ஏற்படும்போது நமது நேரடிப் பார்வைக்கு அவைத் தென்படுவதில்லை.

      சிறிதளவான மாற்றங்கள் அப்பொருளின் பண்பைப் பாதிப்பதிலை, ஆனால் அந்த அளவு மாற்றங்கள் குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவுடன் பழைய பண்பு நிலையிலிருந்து புதிய பண்புநிலைக்கு திடீரென்று பாய்ச்சலாக மாறிவிடுகிறது.

      அளவுநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இடையீடின்றி படிப்படியாக நடைபெறுகிறது. பண்புநிலை மாற்றம் என்பது குறிப்பிட்ட கட்டத்தில் பழைய பண்பின் முறிவும் புதிய பண்பின் தொடக்கமுமாய், பாய்ச்சலாக மாறுகிறது. இதனை வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், அளவுநிலையில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டவுடன், அந்த அளவு மாற்றம் பழைய பண்போடு முரண்படுகிறது. அந்த முரண்பாடு புதிய பண்புடைய புதிய பொருளை படைக்கும் போது தீர்க்கப்படுகிறது.

      அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாக வளர்ச்சியடைகின்ற தொடர் நிகழ்வு, பொருளாயத உலகின் புத்திளமை தோற்றத்துக்குக் காரணமாகிறது.

2.எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
(The Law of the Unity and Struggle of Opposites)

      ஒரு பொருளின் இருப்பு என்பது இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. எதிர்நிலைகளின் ஒற்றுமை, அவற்றிடையேயான போராட்டம் என்ற இரண்டையும் பெற்றிருக்கின்றது.

ஒரு நிகழ்வில் எதிர்நிலைகள் பரஸ்பரம் முரண்பட்டிருப்பது அவற்றின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அந்த முரண்பாட்டின் எதிர்க்கின்ற போக்கு அதாவது நிராகரிப்பது அந்நிகழ்வில் காணப்படும் எதிர்நிலையாகும்.

எதிர்நிலைகளிடையே ஒற்றுமையாய் புலப்படும்போதே அவற்றிடையே நிராகரிக்கின்ற வகையில் போராட்டமும் இருக்கிறது. உள்நிகழ்வுகளில் ஒற்றுமை பெற்றிருக்கும் போதே அவற்றிடையே ஒன்றையொன்று எதிர்க்கின்ற  போராட்டமும் நடைபெறுகிறது.

போராட்டம் என்னும்போது அவற்றில் ஒன்று இல்லாமல் ஒன்று இருக்க முடியாது என்ற வகையில் இணைந்தே காணப்படுகிறது.  இந்த ஒற்றுமையின் ஊடே நிரந்திர எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது. எதிர்நிலைகளின் ஒற்றுமை ஒப்பீட்டுத் (Relative) தன்மையானது, அவற்றிடையே நடைபெறும் போராட்டம் அறுதியானது (absolute).
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எதிர்நிலைகளுக்கிடையே காணப்படும் இடை உறவு போராட்டத்தால் நிராகரிக்கப்பட்டு தகர்க்கப்படுகிறது.

ஒற்றுமை பொருளின் இருப்பையும், போராட்டம் வளர்ச்சியையும் காட்டுகிறது. எதிர்நிலைகளின் போராட்டமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.

3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி
(The Law of the Negation of Negation)

நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்னும் விதி பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைபெறுவதற்கான இடைத்தொடர்பை வெளிப்படுத்துகிறது. கீழ்நிலையில் இருந்து மேல்நிலைக்கும், எளிமையானதில் இருந்து கூட்டுநிலைக்கும் ஆன மாற்றத்தைக் குறிக்கிறது.

நிலைமறுப்பு என்பது பழையவற்றுக்கு மாற்றாய் புதியதையும். ஒரு வளர்ச்சியடைந்த கட்டத்தைக் கடந்து புதிய வளர்ச்சியினை எட்டுவதையும் குறிக்கிறது.

பழையதை நீக்கி புதியதை நிலைநிறுத்தும் போது, புதியதுக்கான ஊற்று பழையதின் உள்ளேயே தோன்றுகிறது. அதனால் தான் பழையது முழுமையாக அழிந்து போகிறது என்று கூறாமல், எளிமையானதில் இருந்து கூட்டுநிலையை நோக்கி மேல்நிலை அடைகிறது என்று கூறப்படுகிறது.

பழையதில் உள்ள முரண்பாடு முதிர்ந்து அவற்றின் ஒற்றுமை குலைக்கப்படுவதே நிலைமறுப்பு என்றழைக்கப்படுகிறது.

வளர்ச்சி என்னும் நிகழ்வில் எந்தக் கட்டமும் நிலைத்த தன்மை உடையதல்ல, ஒவ்வொரு கட்டமும் முதிர்ந்து மறைந்து புதியவற்றுக்கு இடம் கொடுக்க வேண்டி வருகிறது.

புதியதை நிர்ணயிக்கின்ற போக்கு பழையதின் கருவிலேதான் இருக்கின்றது. இயக்கவியல் என்பது பழையதை அகற்றுவதையும் புதியதின் நிலைநிறுத்தலையும் இணைத்தே விவரிக்கிறது.

பழையதை நிலைமறுத்து  நிலைபெற்ற புதியது, அதன் வளாச்சிப் போக்கில் முதிர்ந்து பழையதாகிறது. பழையதுக்கு முன்பு ஏற்பட்ட நிலையே இதற்கும் ஏற்படுகிறது. அதாவது பழையதின் இடத்தை நீக்கி புதியதும், புதியதின் இடம் இதைவிட மேலான புதிய ஒன்றால்  நிலைமறுக்கப்படுகிறது, இவ்வாறு நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்ற விதி வளாச்சியின் விதியாக விளங்குகிறது.


இவ்விதி, வளர்ச்சியின் பொதுப் போக்கையும், புதியவற்றுக்குள் நுழைய வேண்டிய செல்வழியையும் காட்டுகிறது.

Friday, 10 March 2017

மார்க்சிய தத்துவம் பற்றி லெனின்

பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும், இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும், மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக் குப்பைக்கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும்போரின் களனாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்ருண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை 'மறுப்பதற்கும்', பலவீனப்படுத் துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாய் இருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுட்விக் ஃபாயர் பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத்தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கைப்புத்தகங்களாகும்.
18ம் நூற்ருண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை முன்னேறச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை-இதிலிருந்தே ஃபாயர்பாஹின் பொருள்முதல் வாதம் தோன்றியது-திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினர். இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல்தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்; நிரந்தரமாக வளர்ச்சியடையும் வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது-இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத்தக்கமுறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்துமுதல்வாதத்தைப் பற்றிய 'புதிய' மறு வியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை.

தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினர். மார்க்சின் வரலாற்றுத்துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவைபோய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னுமொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது -அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது-மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல்கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்திவரும் ஆதிக்கத்தைப் பலப்படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.

மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவ ஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள்முதல் வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)