Sunday, 11 May 2014

அத்வைத ஒருமைக்கும் மார்க்சிய ஒருமைக்கும் உள்ள வேறுபாடு

விவேகானந்தர்:-
“அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவுக்கு இடமில்லை. தனி ஆன்மாவைப் படைத்தது மாயை என்பது அவர்களின் வாதம். உண்மையில் தனி ஆன்மாக்கள் இருக்க முடியாது. இருப்பது உண்மையில் ஒன்றே என்றால் நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்க முடியும்? நாம் அனைவரும் ஒன்றே. பன்மையைக் காண்பது தான் தீமைக்கான காரணம். நான் வேறு,  பிரபஞ்சம் வேறு என்று உணர ஆரம்பித்த உடனே முதலில் பயம் தோன்றுகிறது, தொடர்ந்து துன்பம் உண்டாகிறது.”- ஞான தீபம் 4, பக்கம் 10

பன்மையில்தான் தீமைக்கான காரணம் இருக்கிறது. அதனால் பன்மையை மறுத்து ஒருமையை வலியுறுத்துகிறார் சுவாமி விவேகானந்தர். புறத்தில் காணும் பன்மைகள் தோற்றங்களே. உண்மையில் நாமெல்லாம் ஆத்ம நிலையில் ஒருமை பெற்றவர்களேயாவோம். நாமே பிரம்மம். தத்துவமசி - அதுநாமே என்கிறது அத்வைதம். இதன் அடிப்படையில் தான் அத்வைத நன்னெறி அமைந்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். அத்வைத ஒருமை ஆத்மாவில் (பிரம்மத்தில்) நிலவுகிறது, மார்க்சிய ஒருமை பொருளாயதத்தில் அடங்கியிருக்கிறது.

தொடக்க காலத்திலிருந்து உலகத்தின் ஒருமையை அறிவதுபற்றி தத்துவம் முயற்சித்து வருகிறது. உலகத்தின் மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பின்னணியில் உள்ளவற்றை ப்பற்றி ஒரு கோட்பாட்டை அமைத்துக்கொள்ள முயன்றனர். அதாவது உலகத்தில் காணப்படும் பல்வேறுபட்ட பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது எது என்று தேடினர்.

கருத்துமுதல்வாதமும், மதமும் உலகத்தின் ஒருமையை ஆன்மீகத்தில் கண்டது. அத்வைதம் அதனை உலக ஆத்மாவில் அதாவது பிரம்மத்தில் கண்டது.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், உலக ஒருமையின் உண்மையை அதன் பொருளாயதத் தன்மையில் கண்டது. அதாவது மனிதனது உணர்வைச் சாராமல் புறநிலையின் இருப்பில் அந்த ஒருமையை அறிந்துகொண்டது.

அத்வைத ஒருமை

இயற்கைக்கு அப்பாற்பட்ட பரமகருத்து அதாவது பிரம்மம்தான் உலகத்திற்குக் காரணம் என்று அத்வைதம் கருதுகிறது. கணக்கில்லா தோற்றங்களாகக் காட்சியளிக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய் இருப்பது இந்த ஒன்றே.  நாம் காணும் அனைத்தும், நாம் உணரும் அனைத்தும் இந்த ஒன்றே. இதனை  ஏகம் சத்  அதாவது அனைத்தும் இந்த ஒன்றே என்று நிறுவுகிறது அத்வைதம்.

நான்  என்னும் உணர்வில் உறைந்துள்ளது ஆத்மா,  நீ  என்று சொல்லும்போது அங்கே உறைந்துள்ளதும் அந்த ஆத்மாவே. அந்த நீ யாராக இருந்தாலும், இருப்பதென்பது இந்த ஒரே ஆத்மாவான பிரம்மமே. நீ என்பவற்றில் ஞானியோ, கொலைகாரனோ, ஆடோ, மாடோ, செடியோ, மரமோ கூட இருக்கலாம். அனைத்தும் ஒன்றேயான ஆத்மாவே. அதாவது பன்மையாகக் காணும் இவையனைத்தும் பிரம்மத்தின் மாயையான வெளிப்பாடே என்கிறது அத்வைதம்.

“எல்லா தீமைகளும் தோன்றக் காரணம் எல்லையற்ற ஒன்றிற்கு நாம் எல்லையை ஏற்படுத்தியதே என்கிறான் வேதாந்தி.”- ஞான தீபம் 4, பக்கம் 295

அத்வைதம் பிரம்மத்தின், அவித்தையினால் (அறியாமையினால்) உண்டான  தோற்ற வெளிப்பாடே, பன்மையாகத் தெரியும் உலகம். இந்த உலகம் பிரம்மத்தைப் பற்றிய அறியாமையின் வெளிப்பாடாக இருப்பதால், இந்த பிரபஞ்சமும் பிரம்மமும் ஒருமை பெற்றதாக அறிவிக்கிறது.

மார்க்சிய ஒருமை

அளவற்ற பொருட்கள் மற்றும் புலப்பாடுகளினால் மனிதன் சூழப்பட்டுள்ளான். இவையனைத்தும் குறிப்பிட்ட உறவுநிலையில் காணப்படுகிறது. ஒரு பொருள் மற்றொன்று அத்துடன் வேறொன்று என பொருட்களிடையே இணைப்பைப் பெற்றுள்ளது. இப்பொருட்கள் அனைத்தும் விசும்பிலும் காலத்திலும் இருக்கின்றன.

நிகழ்வுகளின் தொடர்வரிசை, அதாவது மற்றவற்றுடன் ஏற்படும் தொடர்ச்சி, நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை கால அளவைக் குறிக்கின்றன. உலகில் இயக்கம் என்பது விசும்பு காலம் ஆகியவற்றின் ஊடே இணைந்தும் பிணைந்தும் ஒருமையாய் நடைபெறுகிறது. விசும்பும், காலமும், பருப்பொருளில் இருந்து பிரித்தறிய முடியாத புறநிலையானதாகும். இவற்றின் இயக்கம் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்குகிறது.

ஒருமை வாதத்தின் உயர்ந்த முரணற்ற ஒரே வடிவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கை, சமூகம் இத்துடன் மனித உணர்வின் பலவிதமான நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சிடைந்து வருகின்ற பருப்பொருளின் உற்பத்திகளே என்கிறது.

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகத்தின் பொருளாயத ஒருமையை வலியுறுத்துகின்றன. உலகத்தின் பொருளாயத ஒருமை என்பது பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் இடைத் தொடர்புகளையும் இடைச் சார்புநிலையையும் உள்ளடங்கிய வகையில் இருக்கிறது. பூமிக்கும் வானத்துக்கும் ஈர்ப்புச் சக்தியின் விசை, சக்தியின் வேறுபட்ட வடிவங்களின் பரிமாற்றம், வேதியல் மூலகங்கள் உருமாற்றம் அடைதல், தாவர உலகத்துக்கும் விலங்கின உலகத்துக்கும் உள்ள ஒற்றுமை, இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவு, ஆகியவற்றை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டுள்ளது எனவே, இயற்கை மற்றும் சமூக சக்திகளை அனுசரித்து அவற்றை மனித சமூகத்திற்குச் சேவை செய்ய வைப்பதைச் சாத்தியமாக்குகிறது.


அத்வைத ஒருமை பிரம்ம நிலையோடு ஒடுங்கி, இயற்கை மற்றும் சமூகத்தின் புறநிலையான உண்மையினை மறுத்து, சமூக மாற்றம் என்பதைச் சாத்தியமற்றது என்கிறது.

Tuesday, 4 February 2014

மக்களது அபினியே மதம்

ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்து விட்டது என்றும், மதத்தைப் பற்றிய விமர்சனம், அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது என்றும் மார்க்ஸ் “மார்க்ஸ்  ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு” என்ற நூலினுடைய முன்னுரையில் முதலிலேயே கூறியுள்ளார்.

பரலோகத்தில் தம்மை விடுவிக்கும் அதிமானுடனைக் காண விரும்பிய மனிதன் அங்குத் தமது சொந்தப் பிரதிபிம்பத்தையே கண்டான். அந்த அதிமானுடத்தில், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது, அதனால்  மனிதன் தனது உண்மையான யதார்த்தத்தைக் கண்டறிந்தாக வேண்டும்.

இதனை அடுத்து மத எதிர்ப்பின் அடிப்படையை விவரிக்கிறார். இதுவே இந்த முன்னுரையின் சாரம்சம் என்று சொல்லலாம்.

மதத்தை மனிதன்தான் படைத்தான், மதம் மனிதனை படைக்கவில்லை. இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளது. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, மதம் ஆன்மீக மணத்தோடு குறிப்பிடும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

தம்மை விடுவிக்கும் சக்தி என்று கருதிவந்த பரலோக அதிமானுடன் என்பவன் இகலோக மனிதனின் பிரதிபிம்பம்தான் என்பதை அறிந்து, அதனிடம் நம்பியிருத்தல் பயனற்றது என்பதைத் தெரிந்து, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பதை, ஆன்மீக மணம் கமழும் மறுஉலகத்தை மறுதலிக்கும் போராட்டமாக மாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்.

இதனை மேலும் விரிவாக்கி, மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக விளங்கும் மதம், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்கிறார் மார்க்ஸ். இது மக்களின் அபினியாக உள்ளது

இதனை சில மார்க்சிய அறிஞர்கள்!! இதயம் இழந்தவர்களுக்கு இதயமாகவும், ஆன்மாவை இழந்தவர்களுக்கு ஆன்மாவாகவும் மதம் உதவுகிறது என்று மாற்றி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர். இங்கு மார்க்ஸ் கூறிய  “இது மக்களின் அபினியாக உள்ளது”  என்பதற்கும், பொருள்மாற்றி விளக்குகின்றனர்.

“ஒடுக்கப்பட்ட வர்க்க சமூகத்தி்ல், புகலற்ற மனிதன் மதத்திடம் கற்பிதமான உதவியை நாடுகிறான். தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது. அந்தத் துன்பத்திற்கு உண்மையான, நிரந்தரமான நிவாரணத்திற்குத் தற்காலிக நிவாரணம் மாற்றாக முடியாது. அதேபோல், மதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றது”

மார்க்சின் கருத்திற்கு மாறாக கூறப்படும் விளக்கம் இந்த வழியிலேயே செல்கிறது. 

பல காலத்திற்கு முன்பே லெனின் இதற்கான விளக்கத்தை தெளிவோடு எழுதியிருக்கிறார்.  “மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேணும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்”  (சோஷலிசமும் மதமும்) இங்கே லெனின், மார்க்சினுடைய கருத்தான மக்களின் அபினியே மதம் என்பதற்கு மிகத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து கூறுகிறார்:-
“வர்க்க உணர்வு படைத்த நவீன காலத் தொழிலாளி, பெருவீத ஆலைத் தொழிலால் வளர்த்து ஆளாக்கப்பட்டு  நகர வாழ்வினால் ஒளியூட்டப் பெற்ற இந்தத் தொழிலாளி, மதத்தின் தப்பெண்ணங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, விண்ணுலக வாழ்வைக் குருமார்களிடத்தும் முதலாளித்துவப் பித்தர்களிடத்தும் விட்டுவிட்டு, தனக்கு இங்கே மண்ணுலகில் நல்வாழ்வைப் போராடிப் பெற முயலுகின்றான். இன்றையப் பாட்டாளி வர்க்கம் சோஷலிசத்தின் பக்கம் அணி திரளுகின்றது. சோஷலிசமானது மதத்தின் இருளுக்கு எதிரான போரில் விஞ்ஞானத்தைப் படைசேர்த்துக் கொள்கிறது. இப்பொழுதே இம்மையில், மண்ணுலகில்  நல்வாழ்வுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடச் செய்வதன்மூலம், அது அவர்களை மரணத்துக்குப் பிற்பாடான மறுமையில் நம்பிக்கை வைப்பதிலிருந்து விடுவிக்கிறது” 
-சோஷலிசமும் மதமும்

மார்க்சின் இந்த முன்னுரையின் விளக்கமாகத்தான், லெனின் சுருக்கமாகவும் தெளிவுபடவும் கூறியிருக்கிறார்.

மார்க்சின் முன்னுரைக்குச் செல்வோம்.

உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கு, மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை மறுதலிப்பது மக்களுக்கு அவசியமாகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை (புறநிலைமைகளை) விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம் பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்குப் பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

மதபிரமைகளை விலக்குவதற்காக எழுதப்பட்டதே இந்த முன்னுரை. மதபிரமையிலிருந்து விடுபட முடியாதவர்கள் இதனைப் புரிந்துகொள்ள முடியாமல் திணருகின்றனர்.

மதத்தின் மகிழ்ச்சி என்பது மாயையானதே என்பதை அறிந்து, கம்யூனிஸ்ட்டுகள் அதிலிருந்து விடுபட வேண்டும், மற்றவர்கள் விடுபடுவதற்குத் துணைபுரிய வேண்டும், இந்தப் புரிதலில் பின்தங்கியவர்கள் விடுபடுவதற்கான (புற) நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவது பற்றியும் தெளிவாக மார்க்ஸ் கூறுயிருக்கிறார். இதனை மறைத்துவிட்டுத் தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு, அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ, அதே போல மதமும் தற்காலிகமாக கேட்கும் உதயை அளிக்கிறது என்று கருத்துரைப்பது மார்க்ஸ் கணணோட்டத்திற்கு முரணானதாகும்.  மாயையான மகிழ்விலிருந்து விடுபட்டு உண்மையான மகிழ்வை அடைவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியதின் அவசியம்பற்றியே இந்த முன்னுரையில் மார்க்ஸ்  வலியுறுத்துகிறார்.

மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியன்தான் மதம் என்கிறார் மார்க்ஸ்.

இந்த மாயைச் சூரியனான மதத்தைவிட்டு வெளிவந்து, மனிதன் தனக்கான விடுதலையை தனது உலகத்தில் படைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு மனிதன் தன்னைத்தானே சுற்றிவர வேண்டும். மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியனான மதத்திடமிருந்து விலக வேண்டும்.

தற்போதைய வரலாற்றின் கடமை என்பது உண்மைக்கு மாறான உலகம் (பரலோகம்) மறைந்தவுன், உண்மையான உலகை இங்கு நிறுவுவதற்குப் பாடபட வேண்டியதுதான்.

மனிதனுக்கு அந்நியமான பரலோக அதிமானுடனின் திரை கிழிபடும்போது, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அந்நியப்படுத்தும் தன்மையான திரைகிழிந்து போகிறது. இதன்படி பரலோகம் பற்றிய விமர்சனம் இந்த பூவுலகம் பற்றிய விமர்சனமாக மாற்றம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மதத்தைப் பற்றிய விமர்சனம், உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது என்று மதத்தைப் பற்றிய விமர்சனத்தை அனைத்தும் பற்றிய விமர்சனமாக மார்க்ஸ் கொண்டு செல்கிறார்.

பொருளாயத பலத்தை, பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் கொள்கை என்பது மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, அது ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்கிறார் மார்க்ஸ்.  மார்க்சின் இந்தக் கருத்தும் அதிகமாகப் புரட்டப்படுகிறது.

இங்கு மார்க்ஸ் கொள்கை என்று சொல்வது,  பொதுவாக கொள்கை  என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவிதப் பொதுவான கொள்கை என்றாலும் அது அனைத்து மக்களைப் பற்றிக்கொண்டு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்று கூறவில்லை. அதாவது எந்த வர்க்கத் தன்மை என்றெல்லாம் குறிப்பிடவில்லை.

எந்த வர்க்கத்தின் கருத்தாயினும் அது பொது மக்கள் அனைவரையும் பற்றிக் கொண்டால், பொருளாத சக்தியாக மாறிவிடுகிறது என்று பொருள் கொள்வோமாயின் மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்துபவராவோம். ஏன் என்றால், சமூகம் வர்க்கமாகப் பிளவுற்று இருக்கும்போது கருத்து என்பது அனைவருக்குமானதாக இருக்க முடியாது என்பதை மார்க்சியம் விளக்கியிருக்கிறது. அதன்படி ஒரு வர்க்கக் கருத்து அவ்வர்க்கத்தினரிடையே மற்றும் அவ்வர்க்கச் சார்புடையவரிடத்திலே பற்றும்போது அது பொருளாயத சக்தியாகிறது என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்றால், ஒரு வர்க்கத்தின் சார்பான கருத்து, பரப்புரையின் மூலம் அனைத்து மக்களையும் பற்றச் செய்திட முடியும் என்ற தப்பான முடிவிற்கு வந்துவிடுவோம். மக்களைப் பற்றிக் கொண்டால் என்று இங்கு மார்க்ஸ் குறிப்பிடுவது கருத்தை அல்ல (Theory) கொள்கையைத்தான்  என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை என்பது வர்க்கச் சார்பானது. இதனைக்  கருத்து  என்று பொதுமைப்படுத்தி விளக்குவது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டத்திற்கே இட்டுச் செல்லும்.

லூக்காஸ், கிராம்சி ஆகியோர், ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் உருவானதின் சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளாமல், வெறும் கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாக கருதிக்கொண்ட பண்பாட்டு மார்க்சியவாதிகள், எந்த வர்க்கத்தின் கருத்தாயினும், அது மக்களைப் பற்றிக் கொண்டால் பொருளாயத சக்தியாகிவிடும் என்று விளக்கம் கொடுத்துவருகின்றனர். 

மார்க்சின் முன்னுரையின் இறுதிப்பகுதியில் கூறியதை இவர்கள் மீறிவிடுகின்றனர்.  “தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தை பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.”   இங்கு பாட்டாளி வர்க்கக் கருத்தின் தோற்றத்தையும் அது கொள்கை வடிவம் பெறுவதையும், அதனைப் பாட்டாளி வர்க்கம் பற்றிக் கொண்டு செயல்பட வேண்டியதையும் வலியுறுத்துகிறது. இதே போலத்தான் அனைத்துக் கருத்துப் பிரிவுகளும், அந்தந்த வர்க்கப் பிரிவுமக்களின் மனத்தைப் பற்றுகிறது என்று விளங்கிக்கொள்ளவேண்டும்.

பொதுவாக இந்த முன்னுரையை ஒருங்கிணைந்து விளங்கிக்கொள்ளாமல், தமக்கு ஏற்றபடி பிரித்து உடைத்து விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் மார்க்ஸ் செறிவோடு தமது கண்ணோட்டத்தை இம்முன்னுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொருள் மாற்றி விளக்கம் அளிப்பவர்கள், கொள்கை என்றவுடன், தாம் வகுத்தளித்த கருத்து அல்லது தாம் ஏற்றுக்கொண்ட கருத்து, பாட்டாளிகளின் மனங்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாக மாறிவிடும் என்று விளக்குகின்றனர். முன்னுரையில் மார்க்ஸ்,  யதார்த்த சித்தி பெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்  என்று தெளிவுபடக் கூறியுள்ளார். அதாவது சிந்தனை யதார்த்தத்திற்கு நெருங்கி இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கத்தின் யதார்த்த (புறநிலை) சூழலால் உருவாகும் சிந்தனை பாட்டாளி வர்க்கச் சிந்தனையாக இருக்கும். முதலாளித்துவ வாழ்நிலையில் உள்ள (புறநிலை) சூழ்நிலை முதலாளித்துவ சிந்தனையையே பிரதிபலிக்கும்.

சமூகத்தில் எவ்வளவோ வர்க்கங்கள் இருக்க சமூக விடுதலைக்குப் பாட்டாளி வர்க்கத்தை மார்க்ஸ் தேர்ந்தெடுத்தது ஏன்? சமூக விடுதலை என்பது அனைவருக்கும் ஒரே நேரத்தில் என்று சொல்லாமல் பாட்டாளி வர்க்கத்திற்கு என்று சொன்னதின் நோக்கம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களே இம்முன்னுரைக்குத் தம் மனம்போனபடி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர்.

இம்முன்னுரையின் இறுதியில் உள்ளவற்றை இணைத்துப் பார்ப்போம்:-
“.. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?
விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன்மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது. எனவே அந்தப்பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.
..வளந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..
தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:
ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம். இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.”


இதில் மார்க்ஸ் விடுதலைக்கான சாத்தியப்பாடு பாட்டாளிவர்க்கத்திடம் இருப்பதையும், பாட்டாளி வர்க்கம் தமது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடமும், தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடத்திலும் காண்பதை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமான பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் சார்புடையதாகும். இங்கே பாட்டாளி வர்க்கத்தின் தத்துவச் சார்பையே மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை புரிந்து கொள்ளாததால்தான், பலபேர் தமது கருத்திற்கு ஏற்ப மார்க்சின் இந்த முன்னுரைக்கு விளக்கம் கொடுக்க முனைகின்றனர். 

Monday, 5 August 2013

1, ஈசா உபநிடதம்

பத்து உபநிடதங்கள் என்று வரிசைப்படுத்தும் பட்டியலில் முதலில் இடம்பெறுவது ஈசா உபநிடதம். ஈசாவாசிய உபநிடதம் என்றும் அழைக்கப்படும்.

உபநிடதங்களின் அடிப்படைக் கருத்தை தொகுத்து கொடுத்தது போல் இந்த உபநிடதம் அமைந்துள்ளது. இவ்வகையில் இதனை உபநிடதங்களின் கருத்துரை அல்லது முடிவுரை என்று அழைக்கலாம். இந்திய ஆய்வாளர்களில் சிலர் இந்த உபநிடதத்தை பழைமையானவைகாக கருதுகிறார்கள், ஆனால் மேற்கத்திய ஆய்வாளர்களும், அரவிந்தர், ராதாகிருஷ்ணன் போன்ற இந்திய ஆய்வாளர்கள் ஈசா உபநிடதத்தை பிற்காலத்தவையாக தெரிவிக்கின்றனர். இக் கருத்தே ஏற்புடையதாக இருக்கிறது. பொதுவாக உரைநடையில் அமைந்த உபநிடதங்கள் காலத்தால் பழைமையானவையாக கொள்ளப்படுகிறது. செய்யுள் வடிவில் இந்த உபநிடதம் அமைந்துள்ளதால் இதனை பிற் காலத்தவையாக கருதலாம். பிற உபநிடதங்கள் அமைந்தது போல் ஆரண்யகத்தை தொடர்ந்து வராமல், யசூர் சம்கிதையின் இறுதியில் இவ்வுபநிடதம் காணப்படுகிறது.

இயற்கையின் சீற்றத்தை அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த ஆதிகால மக்கள், இவற்றிற்குப் பின்னால் ஏதோ சக்தி இருந்து இயக்குவதாக கருதினர். இவையே மத சிந்தனையின் தொடக்கமாக இருந்தது. சமூக வளர்ச்சியால் உருவான, ஏற்றதாழ்வுகளால் உண்டான முரண்பாடுகள் தத்துவ சிந்தனையினை தொடங்கிட செய்தது. இவ்வகையில் ஈசா உபநிடதம் தன் பணியினை நேரடியாக தொடங்கிவிடுகிறது. பிற உபநிடதங்களைப் போல் உலகப் படைப்பைப்பற்றி கூறுவதோடுமட்டும் நில்லாது, உலகத்தை படைத்தது ஈசன் என்பதால் சமூகத்தில் காணும் முரண்பாடுகளை எவ்வாறு புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் நேரடியாக கருத்துரைக்கிறது. துன்ப, துயர நீக்கத்திற்கான வழியைத் தேடியே மக்கள் மதம், தத்துவம் போன்றவற்றை நாடி செல்கிறார்கள், ஆனால் இவைகள் துன்பத்திற்கான காரணத்தை சொல்கிறதே தவிர துன்பதைப் போக்குவதற்கான வழியை காட்ட முடியவில்லை. ஓரிடத்தில் செல்வம் குவிவதும், மறு இடத்தில் இல்லாமையும், ஓரிடத்தில் செழிப்பும் மறு இடத்தில் வறுமையும் உருவானதிற்கான காரணத்தை கூறாமலும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் காட்டாமலும் இருந்து விட்டு இவ்வகையான முரண்பாடுகளோடு முரண்படாமல் வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொடுக்கிறது.

மந்திரம் 1 “ஓம், பூமியில் காணும் உலகம் அனைத்தும் இறைவனால் சூழப்பட்டுள்ளது. தியாகத்தால் உன்னை காப்பாற்றிக்கொள். பிறருடைய செல்வத்திற்கு ஆசைப்படாதே.”

இந்த மந்திரம் ஏதோ நன்நெறியைப் பற்றி கூறுவது போல் மேற் பார்வைக்குத் தெரிகிறது. ஆனால் உள்ளர்த்தம் உலகில் காணும் ஏற்றத்தாழ்வால் உருவாகும் கோபத்தையும், போராட்ட உணர்வையும், சமூகத்தில் ஏற்படாமல் பாதுகாக்கவே உருவான தத்துவக் கருத்துக்கள் என்பதை உணர்த்துகிறது.

இந்த மந்திரத்தின் விளக்கங்களாகவே அனைத்து உபநிடதங்களும் அமைந்துள்ளது. அதனால் இந்த மந்திரத்தின் பொருளை தெளிவுபடுத்தினால் அனைத்து உபநிடதங்களும் உருவானதற்கான நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும்.

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள அண்ணா அவர்களின் இந்த மந்திரத்திற்கான உரையைப் பார்ப்போம்
“ஓம், (தோன்றி மறையும்) இவ்வுலகில் தோன்றி மறைவதாயுள்ளது எது உண்டோ அது அனைத்தும் ஈசனால் வியாபிக்கப்பட்டதாக (காண) வேண்டும். (ஈசுவர பாவனையால் ஏற்பட்ட) அந்த தியாகத்தால் உன்னை ரட்சித்துக்கொள்- (உயிரை ரட்சிப்பதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்ததென ஏற்றுக் கொண்டு வாழ்வாயாக). எவருடைய பொருளுக்கும் பேராசைப் படாதே.”

துன்ப, துயரங்களோடு வாழ்வோர்களுக்கு, "உயிரை ரட்சிப்பதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்ததென ஏற்றுக் கொண்டு வாழ்வாயாக" என்று அறிவுறுதப்படுகிறது. ஆனால் சமூகத்தில் சமமாக வாழமுடியாமல் போனதற்கு, செல்வம் ஒரிடத்தில் சேர்ந்ததே காரணமாகும். செல்வத்தைச் சேர்த்தவர்களிடம் உள்ள பொருளாசையை தடுக்காமல், கடுமையாக உழைத்தும் துயர்படுபவர்களிடம் இத்தகைய தியாகத்தையே எதிர்ப்பார்க்கிறது இம் மந்திரம். செல்வம் சேர்த்தவர்களைக் காப்பதற்காகவே, இல்லாமையில் அவதிப்படுவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காகவே தத்துங்கள் தோன்றுகிறது என்பதை இந்த மந்திரம் முழுமையாக தெரிவித்துவிட்டது. பாடுபட்டு உழைத்தும் அவதிப்படும் மக்களுக்கான தத்துவம் இது அல்ல என்பதையும் இம் மந்திரம் உணர்த்திவிடுகிறது. இதன் மூலம் தத்துவத்தின் சார்புத் தன்மையையும் இம் மந்திரம் வெளிப்படுத்திவிட்டது.

மந்திரம் 2 “இவ்வுலகில் விதித்த கர்மங்களைச் செய்த வண்ணம் நூறாண்டு வாழ விரும்பவேண்டும். இப்படி விரும்புகின்ற மனிதனாகிய உனக்கு கர்மம் செய்வதைத் தவிர வேறுவழி கிடையாது. இவ்வகையில் கர்மம் செய்து வாழ்ந்தால் பந்தம் உருவாக்காது.”

இவ்வுலகில் வாழ விரும்புபவன் முற்பிறவியால் உண்டான இந்த கர்மத்தை நீக்கும் பொருட்டு, இன்றைய வாழ்நிலையை தியாக உணர்வோடு ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், அடுத்த பிறவியில் முக்தி கிடைத்து, அனைத்துத் துயரங்களிலிருந்தும் விடுதலை அடையலாம், என்று வழிகாட்டுகிறது.

இதன் அடிப்படையில் வர்ண தர்மங்களும், தர்ம சாஸ்திரங்களும் உண்டாக்கப்படுள்ளது.

மந்திரம் 3 “அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளது. ஆத்மாவை அழிக்க நினைப்பவர்கள் இறப்பிற்குப் பின் அசுரர்களின் அந்த உலகங்களை அடைகிறார்கள்.”

வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தப்பட்ட பின், இந்த மந்திரத்தில் ஆத்ம போதம் அளிக்கப்படுகிறது. இன்பதுனபமான இவ்வுலகில் வாழ விருப்பம் கொண்டு புற வளர்ச்சியில் ஈடுபவோர் பிறவி துன்பங்களுக்கு ஆளாகிறார்கள், ஆத்மாவை அறிந்து அதனோடு ஒன்றி அக வளர்ச்சியில் நாட்டம் கொள்வோர் இறைநிலையோடு இறவா பெரு நிலை அடைகிறார்கள் என்று இம் மந்திரம் ஆத்ம ஞானத்தினை வலியுறுத்துகிறது.

அது மட்டுமன்றி, உடலை முன்னிருத்தி வாழவிரும்புவோர் ஆத்மாவை அழிப்பவர்கள் என்றும் அசுரர்களின் இருள்சூழ்ந்த உலகத்தை அடைவார்கள் என்றும் அச்சுருத்தப்படுகிறார்கள்.

மந்திரம் 4    “ஆத்மா அசைவற்றது, ஒன்றாயிருப்பது, மனதைவிட வேகமானது, புலன்கள் அதனை அடைய முடியாது. அது நிலையாக நின்றுக் கொண்டே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது, ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது. அது நிலையாக இருந்து பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.”

இயங்கும் உயிரை இயக்குவதற்கு நிலையாக இருக்கும் ஆத்மா உதவுவதாக இம் மந்திரம் கூறுகிறது.

அசையாத ஆத்மா உயிரை எவ்வாறு அசைக்கிறது என்பதை அடுத்த விவரிக்கிறது.
மந்திரம் 5 “அது அசைகிறது, அது அசைவதில்லை. அது தொலைவில் உள்ளது, மிக அண்மையில் உள்ளது. அது அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் வெளியிலும் உள்ளது.”

மந்திரம் 6 “எல்லா உயிரினங்களையும் யார் தன்னுடைய ஆத்மாவில் காண்கிறானோ, மற்ற உயிரினங்களில் தன்னுடைய ஆத்மாவை காண்கிறானோ, அவன் யாரையும் வெறுப்பதில்லை.”

மந்திரம் 7 “எல்லா உயிரினங்ளிலும் தன் அத்மாவே என்ற ஒருமையுணர்வைப் பெற்றவனுக்கு என்ன கவலை, என்ன மனமயக்கம்.”

மந்திரம் 8 “அந்த ஆத்மா எங்கும் பரவியவன், ஒளிர்பவன், உடலற்றவன், முழுமையானவன், தசைகளற்றவன், தூய்மையானவன், பாவமற்றவன், அனைத்தையும் அறிந்தவன், மனதை ஆள்பவன், எல்லாமாக இருப்பவன், தானே தோன்றியவன், அவர்வர்கள் செய்த கர்ம, உபாசனைகளுக்குத் தக்கபடி ஆற்ற வேண்டிய கடமைகளை வகுத்துக்கொடுக்கும் சக்தியை அதிககாலம் இருக்கின்ற பிராஜாபதிக்கு ஈஸ்வரன் கொடுத்தார்.”

மந்திரம் 9 “யார் கர்மங்களில் மட்டும் ஈடுபடுகிறார்களோ அவர்கள் இருளை அடைகின்றனர். யார் தேவர்களின் வழிபாட்டில் மட்டும் ஆசை கொள்கிறார்களோ அவர்கள் அதைவிட கொடிய காரிருளை அடைகின்றனர்.”

மந்திரம் 10 “‘வழிபாட்டால் ஒருவித பலனும், கர்மத்தினால் வேறுவித பலனும் கிடைக்கின்றது’ என்று எங்களுக்கு விளக்கமளித்த ஞானிகள் கூறினார்கள்.”

மந்திரம் 11 “வழிபாடு, கர்மம் ஆகிய இரண்டையும் பின்பற்றுபவர் யாரோ, அவர் கர்மத்தால் இறப்பைக்கடந்தும், வழிபாட்டால் இறவாபெருநிலையை அடைகிறார்கள்.”

மந்திரம் 12 “யார் உருவமற்றதை வழிபடுகிறார்களோ அவர்கள் இருளை அடைகின்றனர். யார் உருவத்தை வணங்குகிறர்ர்களோ அவர்கள் காரிருளை அடைகின்றனர்.”

மந்திரம் 13 “"உருவ வணக்கத்தால் ஒருவித பலனும், உருவமற்ற வழிபாட்டால் வேரொரு பாலனும் கிடைக்கும்" என்று எங்களுக்கு விளக்கமளித்த ஞானிகள் கூறினார்கள்.

மந்திரம் 14 “உருவம் மற்றும் உருவமற்ற வழிபாடுகள் இரண்டையும் அறிபவர், உருவ வழிபாட்டால் இறப்பைக் கடந்து, உருவமற்ற வழிபாட்டால் இறவாபெருநிலையை அடைகிறார்.”

மந்திரம் 15 “உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப்பட்டுள்ளது. சூரிய தேவரே, அதனை, உண்மையின் தர்மத்தை கடைபிடிக்கும் என்னுடைய பார்வைக்காக திறந்துவிடுங்கள்.”

மந்திரம் 16 “உலகை காப்பரே, தனியாக செல்பவரே, அனைத்தையும் ஆள்பவரே, சூரிய தேவா! பிரஜாபதியின் மகனே, உனது கதிர்களை விலக்கிக் கொள், பேரொளியை ஓடுக்கிக் கொள், உனது கல்யாண வடித்தை உனதருளால் நான் பார்க்க வேண்டும். அந்த சூரியனில் இருப்பது நானே.”

மந்திரம் 17 “உடலிலுள்ள பிராணன் வெளியேறி, எங்கும் நிறைந்த அழிவற்ற பிராணனுடன் கலக்கட்டும். இந்த உடம்பு சாம்பலாகட்டும். ஓம்!, மனமே நினைப்பாயாக, செய்யப்பட்டதை நினைப்பாயாக!”

மந்திரம் 18 “அக்கினியே! எங்களைக் கர்மபலனின் போகத்திற்காக நல்ல பாதையில் அழைத்துச் செல்வீராக, தேவனே, நாங்கள் செய்த அனைத்துக் கர்மங்களையும், வழிபாட்டையும் அறிந்துள்ள நீங்கள் எங்களது கொடிய தவறுளிலிருந்து விலக்குவீராக. உங்களுக்கு பற்பல வணக்கங்களைத் தெரிவிக்கிறோம்.”

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள அண்ணா அவர்களின் இந்த மந்திரத்திற்கான உரையைப் பார்ப்போம்
“அக்னியே! (எங்கள் செயலால் உண்டான) செல்வத்தை யனுபவிப்பதற்கு நல்ல மார்க்கத்தில் எங்களை அழைத்துச் செல்வீர். தேவனே! எல்லா எண்ணங்களையும் நீர் அறிவீர். மறைந்திருந்து கெடுக்கும் பாவத்தை நாசம் செய்வீர். நமஸ்கார வசனங்களை வெகுவாய்ச் சமர்ப்பித்து உம்மை பூஜிக்கிறோம்.”

இந்த மொழியாக்கம் மறைந்திருந்து கெடுக்கும் சுரண்டுவோரின் குணத்தை வெளிப்படுத்தி, அந்த தவறுகளிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டப்படுவது வெட்டவெளிச்சமாகக் காட்டிவிடுகிறது.

பிறர் செல்வத்திற்கு விருப்பங்கொள்ளாதே என்று முதல் மந்திரம் வலியுறுத்தியது. தியாக உணர்வோடு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யச் சொன்னது இரண்டாம் மந்திரம். இவ்வுலக இன்பதுன்பங்களை விரும்பாது ஒதுக்கி. ஆத்ம நாட்டத்தில் ஈடுபட வழிகாட்டியது முன்றாம் மந்திரம். அசையாத ஆத்மா அசைகின்ற உயிரை இயக்கிய விதத்தை நான்காம் மந்திரம் விவரிக்கிறது. புலன்களால் அறிய முடியாத ஆத்மா ஆராய்சிக்கு அப்பாற்பட்டது என்கிறது ஐந்தாம் மந்திரம்.

ஆறாம் மந்திரம் ஆத்மாவால் ஒருமைப்படுத்தப்பட்டு, சமூகத்தில் ஏற்றம் பெற்றவர்களையும், தாழ்மைப் படுத்தப்பட்வர்களையும் சமநிலைப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் யாரையும் வெறுக்காமல் காக்கப்படுகிறது.

ஏழாம் மந்திரத்தில் ஆத்ம ஒருமையால் கவலையில்லா, மனமயக்க மற்ற மயக்க நிலையை உணர்த்திவிடுகிறது.


அதாவது அனைவரையும் ஆத்மாவில் ஒன்றவைத்து, சமூகத்தில் காணும் அனைத்து ஏற்றத் தாழ்வையும், முரண்பாடுகளையும் நீங்கிய மயக்க நிலைக்கு வழிகாட்டுகிறது. இந்த ஆத்ம நிலையை அடையவைத்து, இறைவனால் சூழப்பட்ட இவ்வுலகில், துயர்பட்ட மக்கள் தியாக உணர்வோடு செயல்படவைத்து, சமூக முரண்பாடுகளை களைய முயல்கிறது இந்த உபநிடதம்.

உபநிடதங்கள்

வேதத் தொகுப்பு எனப்படுவதில் உபநிடதம் இறுதியில் வைத்து எண்ணப்படுவதால் உபநிடதத்திற்கு வேதம் + அந்தம் = வேதாந்தம் எனப்படுகிறது. இதனை மேலும் விரித்து வேத்தின் சாரம் என்றும் மரபுசார்ந்தவர்கள் அழைக்கின்றனர்.

குருவிற்கு மிக அருகில் ஈடுபாட்டோடு அமர்தல் என்பதே உபநிடதம் என்ற சொல்லிற்கு பொருளாகும். தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேள்விகளாக்கி, அதனை குருவிடம் சென்று, சீடன் பதில் பெறுவது போலவே, பெரும்பாலான உபநிடதங்கள் அமையப் பெற்றுள்ளது. இதில் இடம் பெறும் முனிவர்கள் பல்லோரானதாலும், இந்த முனிவர்கள் பல காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பதாலும், உபநிடதங்களின் கருத்துக்கள், தொடர்ச்சியற்றதாகவே காணப்படுகிறது. அதனால் உபநிடதங்களின் கருத்தை தொகுத்துப்பார்த்தல் என்பது மிகவும் கடினமான செயலாகயிருக்கிறது. குவிப்பிட்ட வினாக்களுக்கு மட்டுமே விடையளிப்பதாக இதன் உரையாடல்கள் அமைந்திருப்பதால், பேசப்படும் பொருளைப் பற்றிய விவரங்கள் அந்தத்த உபநிடதத்தில் முழுமையாக கிடைப்பதில்லை. முதன்மையான உபநிடதங்களின் கருததுக்களை தொகுத்து, இணைத்துப பார்க்கும் போதும் பலசிக்கல்கள் எழுகின்றன, ஒரே கருத்தை ஒரு முனிவர் ஒருவிதமாகவும், மற்ற முனிவர் வேறுவிதமாகவும் கூறியிருப்பாதால், உபநிடதங்களின் கருத்தை திரட்டிப்பார்த்தல் என்பது எளிதாக இருக்கவில்லை.

உபநிடதங்கள் தோன்றிய காலத்தையும், வரிசையையும் கூறுதல் என்பதில் பல்வேறு அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. பொதுவாக ஏற்றுக் கொண்டவைகள் மட்டும் இங்கே குறிப்பிடுவோம். புத்தருக்கு முன். பின்னாக முதன்மையான உபநிடதங்கள் தோன்றின. தொன்மையான உபநிடதங்கள் கி.மு 700 முதல் கி.மு. 100 வரையிலான காலகட்டத்தில் உருவானவையாகும். தொன்மையான உரைநடையில் அமைந்துள்ள உபநிடதங்கள் மிகப் பழங்காலாத்தையாகும். பொதுவாக செய்யுள் வடிவத்தில் அமைந்த உபநிடதங்கள் பிற்காலத்தவை எனக் கூறலாம். பிற்கால நடையைச் சேர்ந்த உபநிடதங்கள் மிகவும் பிற்காலக்கட்டத்தை சேர்ந்தவையாகும்.

உபநிடதங்களின் எண்ணிக்கையும் ஒத்த கருத்தைக் பெற்றவையாக இருக்கவில்லை. ஆயிரத்தி எட்டு. நூற்றெட்டு, பதினெட்டு, பன்னிரெண்டு, பத்து என்று பல கண்க்கீடுகள் உண்டு. ஒவ்வொரு வேத சாகைகளின் இறுதியிலும் உபநிடதம் உண்டு எனக்கொண்டால், உபநிடதங்களின் எண்ணிக்கை ஆயிரத்து நூற்று எண்பது காணப்படவேண்டும். ஆனால் இன்று அச்சில் ஏற்றப்பட்ட உபநிடதங்கள் நூற்றெட்டு மட்டுமே, இருநூற்றுக்கு மேலான உபநிடதங்கள் காணக்கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
கிடைக்கும் உபநிடதங்களில் பதினெட்டு குறிப்பிடத் தக்கவையாக இருக்கிறது. அதில் பன்னிரெண்டு சிறப்பானவையாகவும், அதில் பத்து மிகச் சிறப்பானதாக கொள்ளப்படுகிறது.

ஒரு பழைய சமஸ்கிருத பாடல் அந்தப் பத்து உபநிடதங்களை பட்டியலிடுகிறது, அவை ஈசா, கேன, கடம், பிரசனம், முண்டகம், மாண்டூக்கியம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிருகதாரண்யகம் ஆகியவையாகும். இந்தப் பத்து உபநிடதங்களுக்கே சங்கரர், மத்துவர் போன்ற ஆச்சாரியர்கள் விளக்கவுரை எழுதியுள்ளனர். ராமாநுசர் தமது பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய பேருரைகளிலும், தாம் எழுதிய மற்ற நூல்களிலும் இந்த உபநிடதங்களைப் பயன்படுத்தியுள்ளார்.