Friday, 30 March 2018

அத்வைத வேதாந்தம்: நம்பிக்கையை நியாயப்படுத்தல் - தேவிபிரசாத் சட்டோபாத்யாய


“தனது சாத்திரத்திற்கும், சமுதாய முறைக்கும் பகுத்தறிவும் தர்க்கமும் கொண்டு சிந்திப்பது உறுதி தரும் அம்சமில்லை என்பது சங்கரருக்குத் தெளிவாகவே தெரியும். அவர் அப்படிச் சொல்லிக் கொள்வதுமில்லை. அவருடைய சாத்திரத்திற்கு ஆதாரம் வேதம். சமுதாய முறைக்கு ஆதாரம், தர்மசாத்திரம் என்றுதான் கூறுகிறார், ஆகவே, அவை இரண்டையும் முற்றிலும் அப்படியே அதிகார பூர்வமான ஆதாரச் சான்றுகள் என்று ஒப்புக் கொண்டு நம்புவதுதான் அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றக் கொள்வதற்கான முதல் நிபந்தனை. இது மிகக் குறைந்தபட்சமான நிபந்தனையுமாகும், இந்த நம்பிக்கையை காப்பதற்காகவே பகுத்தறிவு தனக்கு உள்ளதாக சொல்லிக் கொள்ளும் சாமர்த்தியத்தை இல்லையென்று காட்டி அதை வாய் மூட வைக்க வேண்டியது மிகவும் அவசியம் என நினைக்கிறார் சங்கரர். ஆக, அவருக்கும் அவருடைய கருத்துக்களுக்கும் உள்ளூரச் சொந்தமாகவே ஏற்பட்ட அவசியங்களை முன்னிட்டு அவர் பகுத்தறிவுக்கு எதிராக நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியதாகிறது. இதில் அவர் ஒரு தத்துவவாதி என்ற முறையில் தர்மசாத்திரம் செய்தவர்களுக்கு மிகவும் அநுகூலமான பணியையும் செய்கிறார்.

சங்கரர் மனுவைத் தலைமேல் வைத்துக் கொண்டு புகழ்வது மனுவுக்கு மகிழ்ச்சியூட்டலாம். ஆனால், தத்துவவாதியிடம் அவர் இதை மட்டும் எதிர்பார்க்கவில்லை. சமுதாயத்தில் அசைக்க முடியாத உரிமைகளை பெற்றுள்ள யாராவது நிறையவே செய்வார்கள். மனுவுக்கு வேண்டியது வேறொரு விஷயம். அதை ஒரு தத்துவவாதிதான் செய்யமுடியும். பகுத்தறிவையே பொதுவாகக் கண்டித்து மறுக்கும் கோட்பாடு ஒன்று வேண்டும். இதைச் சங்கரர் செய்கிறார். மக்கள் கூட்டத்தை அடக்கி ஆள்வதற்கு மூடநம்பிக்கைகள் மிகவும் அவசியம் என்பதால் தர்மசாத்திரகாரர்கள் பகுத்தறிவை மிகவும் பலமாகக் கண்டிக்கின்றனர். ஆனால், அது அரசியல் முறை மறுப்புத்தானே. பகுத்தறிவின் நிஜமான ஆற்றலும், விளைவும் ஒருவகையில் தத்துவத்துறையில் கூறப்படுவன. அதை தத்துவ முறையில் பதில் சொல்லித்தான் மறுக்க வேண்டும். மேலும் தர்மசாத்திரகாரர்களுக்கு மற்றொரு தொல்லையும் இருந்தது. இந்தியத் தத்துவ அறிஞர்களில் பலர் பகுத்தறிவைச் சார்ந்து நின்று அதைக் காத்ததே அத்தொல்லை. ஆகவே, அவர்களுடைய வாதங்களை, கோட்பாடுகளைக் கொண்டே மறுத்தும், விடை சொல்லியும் தள்ள வேண்டும். இந்தக் காரியம் தர்ம சாத்திரங்களின் எல்லையில் இல்லை. அதைத் தத்துவ அறிஞர்களே செய்யவேண்டும். தங்கள் தத்துவத்திற்குப் பொருந்துமாறு, பகுத்தறிவுக்கு எதிராக நம்பிக்கையை வலியுறுத்துகிறவர்களே இதைச் செய்யவேண்டும். அத்தகையவர்கள் நமது கருத்துமுதல்வாதிகள் மட்டுமே. அவர்கள் தங்கள் சாத்திரத்திற்கு அடிப்படைத் தேவையாகப் பகுத்தறிவையும், பிரத்யட்ச அநுபவத்தையும் மறுத்துக் கண்டிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் விளைவு தான் சத்யத்தை நாடும் சாதனமாகப் பகுத்தறிவுக்கு ஒவ்வாததையே பகுத்தறிவாகச் செய்வதாயிற்று. தர்மசாத்திரகார்களுக்கு இது மிகப் பெரிய தொண்டு. தான் கூறுவதைக் கருத்துமுதல்வாதிகள் போற்றுவது மட்டும் மனுவுக்குப் பெரிதில்லை. சங்கரர் அதைச் செய்வதும் நல்லதற்குத்தான். மற்றவர்கள் இதைச் சொய்யாமல் விடுவதும் பெரிதில்லை . ஆனால் தத்துவம் பேசும் அனைவரும் பகுத்தறிவைக் கண்டித்து நம்பிக்கையை வற்புறுத்துவதே போதும். இந்த வகையில் சங்கரர் செய்வது பெரிய சேவைதான். நம்பிக்கையை ஏற்காமல் பகுத்தறிவை நம்புவது தத்துவத்தை ஆராயும் போது முட்டாள்தனம் தான் என்று வாதம் செய்கிறார் அவர். ''மனிதனுடைய சிந்தனைகளுக்கு எந்த விதமான தடையும் கட்டுப்பாடுமே கிடையாது. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மனம் சிந்திக்கும். அதை நம்புவதில் பயனில்லை; புனிதமான வேதம் போன்ற நூல்களை அலட்சியம் செய்யும் பகுத்தறிவு ஒரு தனி மனிதனுடைய அபிப்பிராயத்தை மட்டுமே பற்றி நிற்கிறது. தகுதியான நல்ல அடித்தளம் அதற்கில்லை . மிகவும் புத்திசாலிகளான சிலர் பிரயாசைப்பட்டுக் கண்டுபிடித்துக் கூறும் வாதங்களை அவர்களை விடத் திறமை கொண்டவர்கள் தவறென்று நிரூபிக்கிறார்கள், இவர்களுடைய வாதங்களை அடுத்த வேறு சிலர் மறுத்துரைக்கிறார்கள், ஆகவே, மனிதர்களுடைய அபிப்பிராயங்களில் பல விதமான வேறுபாடுகள் இருக்க இடமுண்டு. ஆகையால், ஒருவன் காரண வாதமாய்ப் பகுத்தறிவை எடுத்துக் கூறுவதற்கு நிச்சயமான அடிப்படை உண்டு என்று கொள்வது சாத்திமில்லை. கபிலர் (சாங்கிய தத்தவம் கண்டுரைத்தவர்) மிக உயர்ந்த அறிவும் சிந்தனையும் மன உணர்வும் கொண்டவர்தான். அவர் கூறும் காரணவாதமான பகுத்தறிவு வகைச் சிந்தனையை ஏற்போமெனில், அதானாலும் இந்தக் கஷ்டம் தீர்ந்துவிடாது. ஏனென்றால் கபிலரைப் போலவே மிகத் திறமையான மன உயர்வும் ஆற்றலும் பெற்ற கணாதர், (வேறுசில தத்துவங்களைக் கூறும் அறிஞர் எல்லோருமே ஒருவரை மற்றவர் மறுத்துக் கூறுவதைக் காணலாம்.

ஆகவே, பகுத்தறிவு அதன் இயல்பிலேயே நம்பிக்கை பற்றி நிற்கக் கூடியதென்றில்லை. ஆதலின் அது நிஜமான அறிவுக்கு ஆதாரமாக ஆகாதென்று கொள்ளப்படுகிறது. ஏனென்றால் பகுத்தறிவைப் பற்றி நிற்கும் தத்துவ அறிஞர்கள் தமக்குள்ளேயே அபிப்பிராய பேதம் கொள்கிறார்கள். ஒருவர் காரணவாதத்தைக் கொண்டு பகுத்தறிவின் பலத்தில் நிரூபிப்பதை மற்றொருவர் அதே பலத்தில் மறுக்கிறார். ஆதாலால் புனிதமான நூல்களில் நம்பிக்கை கொள்வதற்காக பகுத்தறிவுவாதத்தைக் கைவிடுவதே நல்லது. அப்படியானால், ஒரு வாள் வீரன் மற்றொரு வாள் வீரனைவிடத் தான் மேலானவன் என்று காட்டிவிட்டால், வாளைக் கொண்டு சண்டை போடும் முறையையே பயனற்றது என்று கொள்ள வேண்டும். ஒரு வாளைக் கீழே போட்டுவிட்ட - ஆயுதம் எதும் இன்றியே சண்டை போடவேண்டும் என்று வாதம் செய்யலாமோ?


இங்கே சங்கரர் மேற்கண்டவாறு வாதம் செய்வதில் உள்ள உண்மையான தகுதிளைக் காண்பதைவிட அவருடைய முக்கியமான நோக்கத்தைக் காண்பதே அவசியம். அதாவது கெளதமரும் வாத்ஸ்யாயனரும் (வைசேஷிகர்) மிக அற்புதமாய் அமைத்துத்தரும் தத்துவ ஆய்வு முறைக்கு மிகவும் எதிரான ஒன்றை அமைப்பதுதான் அது. அவர்கள் கருத்துப்படி தத்துவ சிந்தனைக்குரிய உயிரைத் தருவது, கருத்துக்கள் ஒன்றுக்கொன்று எதிராக மோதுவதுதான். அனால் சங்கரருக்கோ அத்தகைய சிந்தனைக்கு எதிராக அத்தகைய மோதல்களை - அவையே உண்மையான தத்துவ சிந்தனை முறை என்று கொள்ளாமல் எதிர்ப்பதே நோக்கமாகிறது. கெளதமருக்கும் வாத்ஸ்யாயனருக்கும் ஒன்றைப் பற்றிய சந்தேகம் இருந்தாலொழிய தத்துவ சர்ச்சைக்கே இடமில்லை. ஆனால் சங்கரருக்கோ முழு முற்றான நம்பிக்கை இருந்தால்தான் தத்துவ சர்ச்சையே உண்டாகிறது. சந்தேகத்திற்கு முற்றிலும் எதிர்மறையானது இது.


இந்தியத் தத்துவ சர்ச்சையில் இந்த இரண்டு மனப்பாங்குகளே அடிப்படையாக இருப்பன. இந்த இரண்டுக்குமிடையில்தான் கருத்து முதற்கோட்பாட்டுக்கும் அதற்கு எதிரான கோட்பாட்டுக்கும் உள்ள வித்தியாசம் எல்லாம் இருக்கிறது.

சங்கரர், மேலே காட்டிய அவருடைய வாதத்தால் மட்டுமே பகுத்தறிவைக் குற்றஞ்சாட்டுவதில் வெற்றி பெற முடியும் என்று நம்பும் அளவுக்கு அவர் ஒரு குழந்தையல்ல. தன்னுடைய வாதத்தை நிலையாகச் சார்ந்து நிற்பதில், பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விடும் தொல்லைகள் பல உண்டு என்பதை அவர் நன்கு அறிவார். தன் வாதத்திற்கு எதிராக எழக்கூடிய மறுப்புக்களை அவரே எழுப்பிக் கொள்கிறார். பூர்வாட்சி கூறுவது: “எத்தகைய பகுத்தறிவு வாதமும் தக்க ஆதாரங்களைக் கொண்டதில்லை என்று சாதித்து விட முடியாது. ஏனென்றால், நீ இதை அடித்துச் சொல்வதே ஒரு யுக்தியைக் கொண்டுதானே? சில யுக்தி வாதங்களுக்கு தக்கபலமான ஆதாரங்கள் இல்லை என்பதால், அது போன்று மற்றவையும் ஆதாரமில்லாதவை என்று நீயாக வைத்துக் கொண்ட எண்ணமே இது. மேலும் நீ சொல்வது போல் எல்லாப் பகுத்தறிவு யுக்தி வாதங்களுமே தக்க ஆதார அடிப்படையில்லாதவை என்றால் மனித வாழ்க்கையின் நடைமுறை எல்லாமே முடிந்துவிட வேண்டியது தான். ஏனென்றால் மனிதர்கள் எதிர்காலத்தில் துன்பம் இல்லாமல் செய்து கொள்ளவும் இன்பம் பெறுவதற்காகவும் பல காரியங்களைச் செய்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் கடந்த காலமும், நிகழ் காலமும், எதிர்காலமும் ஒரே மாதிரியானவை என்பது. தகுந்த ஆதார அடிப்படை இல்லையென்று நீ எதை ஆட்சேபிக்கிறாயோ, அதுதான் உண்மையில் பகுத்தறிவு யுக்திவாதத்தின் அழகு; அதனால் தான் நாங்கள் முன்பே எழுந்த மறுக்கக் கூடிய வாதங்களை மறுப்பதன் மூலமே மறுக்க முடியாத வாதங்களுக்கு வருகிறோம். (பூர்வபட்சம் ஆதாரமற்றது என்பதால் சித்தாந்தமும் ஆதாரமற்றதே என்ற பயம் வேண்டாம்) ஒருவனுடைய மூத்த அண்ணன் மடையனாக இருந்தால் அவன் தம்பியும் மடையனே என்று சாதிக்க முடியுமா?''

கருத்துமுதல்வாதிகள் பகுத்தறிவைப் பழிப்பதற்கு எதிராக நிச்சயமாக எழும் அடிப்படையான வாதங்களை மிகவும் ஆச்சரியமாகவும், தெளிவாகவும் கூறியதுதான் இது. இத்தகைய வாதங்கள் விடும் சவால்களை துணிச்சலுடன் சந்தித்து விடை கூறும் விருப்பம் சிலரிடம்தான் இருக்கிறது, உண்மையைத் திரித்துப் பேசுவதில் மிகவும் கைதேர்ந்தவர்களான நாகார்சுனர், ஸ்ரீ ஹர்ஷர் போன்றவர்களும், அவர்களுடைய நூல்களுக்கு உரை எழுதியவர்களும் அவர்கள்தான். சங்கரர் இந்த வாதங்களின் யுக்தி ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்று அவரே தெரிந்து கொண்டிருக்க வேண்டும்; அல்லது தன் காரியத்திற்கு அது அவசியமில்லை என்று நினைத்து இருக்க வேண்டும்; எப்படியோ அவர் இந்தப் பிரச்சினையில் ஆழமாக ஈடுபட முயலவில்லை; முழு விவாதத்திற்குரிய விஷயம் முழுதையும் வழிமாற்றிவிடுவதைத் தான் செய்கிறார்; முக்கியமானதை விட்டு விட்டுப் பக்கவாட்டில் இழுத்துவிடுகிறார்; அதாவது, வறட்டு வாதங்களை எவ்வளவுதான் தந்திரமாகவும், யுக்தியுடனும் கூறினாலும், அவை மோட்சத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்று கடைசியில் சொல்லிவிடுகிறார். “மனிதனுடைய இறுதி விடுதலையான மோட்சம், இந்த உலகத்திற்குக் காரணமான ஒன்றைச் சார்ந்து - அந்த ஒன்றால்தான் - அடைவதற்கு உரியது. அந்த ஒன்றின் உண்மையான இயல்பை நூல்களின் உதவியில்லாமல் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது; அது புரிந்து கொள்ள இயலாத ஒன்று; ஏற்கனவே நாம் சொன்னபடி அது பிரத்யக்ஷத்திற்குரிய பொருள் ஆவதில்லை . ஏனெனில் அதற்கு வடிவமும் பிறவும் போன்ற குணங்கள் - இயல்புகள் ஏதும் இல்லை; அதை இன்னதென்று காட்டக்கூடிய அடையாளங்களும் இல்லை. அதை ஊகம் செய்து அறிவதற்கான சாதனங்களும் இல்லை. (புகையைப் பார்த்து நெருப்பை ஊகிப்பது போல்). அது பிரத்யக்ஷம் அநுமானம் போன்ற பிரமாணங்களும் இல்லை. ஆக தூய (ஐயமும் பிரமையும் கலக்காத) அறிவு - ஞானம் என்ற விஷயத்தில், மனிதர்களுடைய அபிப்ராயங்கள் ஒன்றுக்கொன்று ஒவ்வாமல் மோதி முட்டிக் கொள்வது சாத்தியமே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது; பகுத்தறிவால் உண்டாக்கப்படும் அறிதல்கள் தமக்குள் ஒவ்வாமல் மோதுவதை யாவரும் அறிவோம்; ஏனெனில் ஒரு தர்க்கிகன் சிரமப்பட்டு இதுதான் சரியான முடிவான அறிதல்கள் என்று விவாதித்து நிலை நாட்டுவதை மற்றொரு தர்க்கிகன் இல்லை யென்றாக்கித் தகர்த்துவிடுகிறான்; இவன் சொல்வதை மூன்றாமவன் ஒருவன் மறுத்து அகற்றிவிடுகிறான்; இதை நாம் தொடர்ந்து காண்கிறோம். ஆதாலால், பகுத்தறிவுடன் தர்க்க வாதம் செய்து கண்டுரைக்கும் அறிதலும் (அறிவும்) அதனால் அறியப்படும் பொருளும் நிரந்தரமாக ஒன்றைப் போல் மற்றது இருப்பதுமில்லை; இது எப்படி தூயதும் இறுதி முடிவுமான அறிவாகும்?

ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், முன்பிருந்தவர்களும், இப்போதுள்வர்களும், இனி வரப்போகிறவர்களுமான தர்கிகர்களைச் சேர்த்து வைத்து, அவர்கள் எல்லாரும் முழு ஒப்புதலுடன் முடிவான அறிவு இதுதான் என்று ஒரு பொருளை ஏற்கும்படிச் செய்வதும் இயலாத காரியம். ஆனால் வேதம் அறியத்தக்கன என்று கூறும் பொருள்கள் அப்படியில்லை . ஏனென்றால் வேதம் சாசுவதமானது. முக்காலத்திற்கும் உரியது. அறிவுக்கு ஆதாரம், அது உறுதியாகக் கொண்ட பொருள்களே வேதம் அறிவிப்பன் என்று கொள்ளலாம்; ஆகவே, இது தான் முடிவான அறிவு எனக் கொண்ட வேதத்தின் மூலமாகவே தூய அறிவைத் தீர்மானித்தால் அதை முன் சொன்ன முக்காலத்துத் தர்க்கிகர்கள் இல்லையென்று கூற முடியாது. ஆகவே, நாங்கள் கூறும் சுத்த ஞானமே முடிவானதென்று நிறுவியிருக்கின்றோம். அந்த ஞானம் உபநிஷத்துக்களில் இருப்பவை; நாம் நம்பத்தக்கதுவும் அதுவே. அதை விட வேறாக ஒரு அறிவு இருப்பது சாத்தியமில்லை ; அதை மதிக்காமல் அசட்டை செய்வது பௌதீக உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு இறுதியான மோட்சம் இல்லையாவதில் போய் முடியும்; ஆகவே, நாங்கள் இறுதியாகக் கொள்வதும், கூறுவதுமான தத்துவ நிலை இதுதான்; அதாவது, வேதங்களையே நிலையான ஆதாரமாக ஏற்றுக் கொண்டும் யுக்திவாதத்தை அதற்குட் பட்டதும், அதை மீறாததுமாக வைத்துக் கொண்டும், சித்தாகிய - அதாவது அறிவு மயமான பிரம்ஹம்தான் இந்த உலகிற்கு காரணம் என்றும் உலகமாயிருக்கும் சாரமான ஆதாரப் பொருள் என்றும் கருத வேண்டும் என்பதே.

பகுத்தறிவுவாதிகள் தமக்குள் மாறுபடுவதால் அது பயனற்றது. என்ற பழைய பல்லவியைத் தவிர இந்த வித்தாரப் பேச்சில் வேறொன்றுமில்லை. மீண்டும் மீண்டும் அவர் புனிதமான நூல்களின் மேல் நாம் முழு முற்றான நம்பிக்கை வைக்க வேண்டு மென்கிறார். அவர் ஏற்றுக் கொள்ளாத வேறு மதங்களும், சமயங்களும் இருக்கின்றன என்றும், அவற்றிற்கும் தனித் தனிப் புனிதமான நூல்கள் உள்ளன என்றும், அவை யாவுமே வேதத்தில்தான் மோட்சம் அடைவதற்கு வேண்டிய ஞானம் உள்ளது என்று கூறுவதை நியாயமென்று கூறவும் இல்லை என்றும், வேதம் கூறும் ஞானமே, மறுத்துரைக்க முடியாததும், வேறுபாடற்ற அறிவும் அதுதானென்று மற்றச் சமய நூல்கள் கூறவில்லை என்றும் சங்கரருக்கு நாம் எடுத்துக் கூறி நினைவுபடுத்துவதில் பயனில்லை. அவருக்கு இவை எல்லாமே சம்பந்தமற்றவை; பொருத்தமும் அற்றவை. அவர் கொள்வது ஒரே ஒரு புனித நூல் தான்; அது வேதம் தான். மேலும் இந்த நிலை சங்கரர் தனக்குத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட தனிப்பாதை.

    இப்படி அவர் தானாகவே தனக்கு எனத் தேர்ந்தெடுத்துக் கொண்ட எண்ணங்களும், கருத்துக்களும் நம்மளவில் மிகவும் சாகசமானது துணிச்சலானது என்று தோன்றலாம்; அவருக்கு அப்படி இல்லை; இந்தத் தான்தோன்றித்தனமான கருத்துக்களை மறுத்துக் கேள்வி எழுப்புகிறவர்களை தர்ம சாத்திரகாரர்கள் சந்தித்துச் சமாளித்தும் விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.”

(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - பக்கம் 254 - 260)

Sunday, 25 March 2018

வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது – வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்


தோழர் அண்ணா.நாகரத்தினம் தனது வலைபூவில் “அடித்தளம்,மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல்” (http://philosophicaldebate.blogspot.in/2011/09/6.html) என்ற தொடரை எழுதியுள்ளார். அதில் காணும் 6ஆம் பகுதி நான் எழுதியதாக வாட்ஆப்பில் பரவிவருகிறது. அதில் உள்ளவை எனக்கு உடன்படாத கருத்தாகும், மேலும் அத்தகைய கருத்துக்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்துகளுக்கு முரணானவை என்பதை தொடர்ந்து பலகாலமாக எழுதிவருகிறேன். இங்கேயும் அதனையே நிலைநிறுத்தப் போகிறேன்.

வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை” – இதுவே வரலாறு பற்றிய இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகும்.

வாழ்நிலை சிந்தனையைப்த் தீர்மானிக்கிறது - இது பொருள்முதல்வாதம்

சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது - இது கருத்துமுதல்வாதம்

இதனை விளக்குவதற்கு மார்க்ஸ் அமைத்துக் கொடுத்தது தான் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் மார்க்ஸ் தமது இறுதிகாலவரையிலான அனைத்து படைப்புகளையும் எழுதியுள்ளார். இந்த கோட்பாட்டில் குறைகாண்பவர்கள் மார்க்சின் முடிவுகளிலும் குறைகாண்பவர்களாவர்.

அடித்தளம் மேற்கட்டமைபப்பு பற்றி மார்க்ஸ்:-
“இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே, இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும். 
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை)

      “பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது." அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறதை இயக்கவியல் அற்றதாகவும் எந்திரத்தனமானதாகவும் தோழர் நாகரத்தினம் கருதுகிறார்.

“மேற்கட்டுமானம் அடித்தளத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது. இதுதான் பொருள்முதல்வாதத்திற்கான‌ அடிப்படை. இங்கு அடித்தளம் முதன்மையாகவும் மேற்கட்டுமானம் இரண்டாம்பட்சமாகவும் இருக்கிறது. இதில் பொருள்முதல்வாதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் இயங்கியல் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டுக்குமான உறவு எப்படி பட்டது என்பதைக் காணவேண்டும். இயங்கியல் என்பது இரண்டு எதிர்வுகளின் முரண்பாடும் ஆகும். இந்த‌ எதிர்நிலைகளில் ஐக்கியமும் போராட்டமும் உள்ளடக்கியிருக்கும். இந்த இரண்டு எதிர்நிலைகளில் ஒன்று மற்றொன்று கட்டுபட்டதாகவோ நிபந்தனைக்குட் பட்டதாகவோ இருக்கவியலாது. இரண்டும் சமமான தகுதியையும், சமமான‌ அழுத்தத்தையும் பெற்றிருக்கும். அவ்வாறில்லாமல் ஒரு எதிர்வானது மற்றொரு எதிர்வை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது இயங்கியலுக்கு எதிரானதாகும். ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை சார்ந்து இயங்குகிறது என்றால், ஒரு எதிர்வு மற்றொரு எதிர்வை பலப்படுத்துகிறது என்றால், ஒரு எதிர்வின் போக்கை மற்றொரு எதிர்வு தீர்மானிக்கிறது என்றால், அவை இயங்கியல் ஆகாது. அது வெறும் எந்திரத்தனமான முரணாக மட்டுமே இருக்க வியலும்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

அடித்தளம் நிர்ணயிக்கும் என்கிற பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இயக்கவியல் அடிப்படையில் தான் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தோழர் நாகரத்தினம் இயக்கவியல் அற்றதாக கருதுகிறார். இதற்குக் காரணம் அடித்தளதம் தீர்மானிக்கும் என்கிற பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது கண்ணோட்டம் அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றிடையேயான இடைசெயல் பரஸ்பரவினைபுரிதலாகும். இது மார்க்சிய அடிப்படைக்கு முரணான புரிதலாகும்.

கருத்துக்களின் தோற்றமும் அதன் மாற்றமும் பற்றி மார்க்ஸ் இயக்கவியல் அடிப்படையில் தான் விவரிக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தோழர் நாகரத்தினம் இல்லை என்பது தான் உண்மை.

மார்க்ஸ்:-
“சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
 (தத்துவவியலின் வறுமை)

கருத்துக்களின் தோற்றமும் அதன் மாற்றமும் இங்கே இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் தான் விளக்கப்பட்டுள்ளது.

மார்க்ஸ் கூறியதை, சில இளைஞர்கள் புதியதாகப் படிக்கும் போது நிர்ணயவாதமாக புரிந்து கொண்டனர் அதனை மறுத்துதான் எங்கெல்ஸ் இறுதிகாலத்தில் எழுதிய கடிதங்களில் பதிலளித்துள்ளார். அப்படிப்பட்ட பதிலை தோழர் நாகரத்தினம் “..பின்னர் எங்கல்சும நூல்களின் மூலமாக‌வும் கடிதங்களின் வாயிலாகவும் அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான உறவை இயங்கியல் ரீதியில் வளர்த்தெடுத்துள்ளனர்.” என்று திரித்து விளக்கம் கொடுக்கிறார்.

அடித்தளத்த்தின் தீர்மானகர பாத்திரத்தை எந்தவகையிலும் மாற்றி எங்கெல்ஸ் எழுதவில்லை, அக்கடிதங்களில், உள்ளடக்கத்துக்கு கொடுத்த அழுத்தம் மேற்கட்டமைப்புக்குக் கொடுக்கவில்லை என்று தான் கூறியுள்ளார். மேலும் பிலோக்குக்கு எழுதிய கடிதத்தில் (செப்டெம்பர் 21 (22) 1890) வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய “லுயீ போனபார்ட்” “மூலதனம்” ஆகிய மூலத்தோற்றுவாய்களில் இருந்து கற்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுகிறார். இத்துடன் தாம் எழுதிய “டூரிங்கு மறுப்பு” “லூத்விக் ஃபாயர்பாக்” நூல்களைக் குறிப்பிடுகிறார். “டூரிங்கு மறுப்பு” என்ற நூல் மார்க்ஸ் பார்வையிடப்பட்டே வெளியிடப்பட்டது. “லூத்விக் ஃபாயர்பாக்” என்ற நூல் மார்க்ஸ் மறைந்தபின்பு எழுதியது.

அந்நூலில்” இப்போது நாம் அதோடு சேர்த்து, மதத்தைப் பற்றிச் சுருக்கமாக மட்டுமே கவனிப்போம். காரணம், மதம் பொருளாயத வாழ்க்கையிலிருந்து மேலும் விலகி நிற்கிறது, அதற்கு மிகவும் அந்நியமானதாகவும் தோன்றுகிறது. மிகப் புராதன காலத்தில், மனிதர்கள் தங்களுடைய சொந்த இயல்பு பற்றியும், அவர்களைச் சுற்றியிருந்த புறநிலை இயற்கை பற்றியும் கொண்டிருந்த தவறான, பழைய கருத்துருக்களிலிருந்து மதம் தோன்றியது. என்றபோதிலும், ஒவ்வொரு சித்தாந்தமும் தோன்றிய பிறகு அப்போது நிலவும் கருத்தோட்டங்களை ஒட்டி வளர்கிறது. அந்தக் கருத்தோட்டங்களை மேலும் வளர்க்கிறது, அப்படிச் செய்யாவிடில் அது ஒரு சித்தாந்தமாக இருக்க முடியாது. அதாவது, சுதந்திரமாய் வளர்ச்சியடைகின்ற, தமக்கே உரிய விதிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்ட, சுதந்திரமான சிந்தனைகளுடன் எந்தத் தொடர்பும் கொண்டதாக இருக்காது. எந்த மனிதர்களின் மூளைகளுக்குள்ளே இந்தச் சிந்தனை நிகழ்வுப்போக்கு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த மனிதர்களின் பொருளாதய வாழ்க்கை நிலைமைகளே அந்நிகழ்வுப் போக்கின் ஓட்டத்தை இறுதியில் தீர்மானிக்கின்றன என்பது, தவிர்க்க இயலாதவாறு இந்த மனிதர்களுக்குத் தெரியாமலே இருந்து விடுகிறது.”
(லூத்விக் ஃபாயர்பாக்)

இங்கே எங்கெல்ஸ் இறுதியில் தீர்மானிக்கும் என்று கூறியதை, மார்க்ஸ் கொடுத்த விளக்கக்குறையை போக்குவதற்கு கூறப்பட்டதாக தோழர் நாகரத்தினம் கருதுகிறார்.

“பின்னர் எங்கல்ஸ் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த சமூக எதிர்வுக்குள்ள உறவு குறித்து தனது கருத்துரையை வழங்குவார். 'இறுதியாக தீர்மானிக்கும்' என்று பொருளாதார அடித்தளத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்குவார்.

'இறுதி நிர்ணயம்' என்ற எங்கல்சின் கோட்பாடு பொருளாதார‌ அடித்தளத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. அதே சமயம், அடித்தளத்தின் மீது செலுத்தும் மேல்கட்டுமான நிர்ணயத்தினை எங்கல்சு புறந்தள்ளவில்லை.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

ஆக, தோழர் நாகரத்தினம் அவர்களின் கருத்து அடித்தளத்தின் தீர்மானரகமான பாத்திரத்தை மறுத்து அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்கிற திருத்தல்வாதிகளின் கண்ணோட்டத்தையே அடைகிறது.

மேற்கட்டமைப்பின் தீர்மானிக்கும் தன்மையை அங்கரிக்கவில்லை என்றால் அது இயக்கவியலுக்கு முரணானது என்கிறார்.

“மேற்கட்டுமானம் அடித்தளத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது. இதுதான் பொருள்முதல்வாதத்திற்கான‌ அடிப்படை. இங்கு அடித்தளம் முதன்மையாகவும் மேற்கட்டுமானம் இரண்டாம்பட்சமாகவும் இருக்கிறது. இதில் பொருள்முதல்வாதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் இயங்கியல் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டுக்குமான உறவு எப்படி பட்டது என்பதைக் காணவேண்டும். இயங்கியல் என்பது இரண்டு எதிர்வுகளின் முரண்பாடும் ஆகும். இந்த‌ எதிர்நிலைகளில் ஐக்கியமும் போராட்டமும் உள்ளடக்கியிருக்கும். இந்த இரண்டு எதிர்நிலைகளில் ஒன்று மற்றொன்று கட்டுபட்டதாகவோ நிபந்தனைக்குட் பட்டதாகவோ இருக்கவியலாது. இரண்டும் சமமான தகுதியையும், சமமான‌ அழுத்தத்தையும் பெற்றிருக்கும்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

மேலும் கூறுகிறார்.

“சர்வ வியாபகப் பரஸ்பரச் செயல்

எங்கும் நிறைந்திருக்கும் முரண்களின் அனைத்தையும் தழுவிய பரஸ்பரச் செய‌ல்பாடுகள்தான் இயக்கவியலுக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது. "நவீன இயற்கை விஞ்ஞானத்தின் கருத்துநிலையிலிருந்து இயக்கத்திலுள்ள பருப்பொருள் முழுவதையும் ஆலோசித்துப் பார்த்தோமெனில் நம்மை எதிரிடுகின்ற முதல் விசயம் பரஸ்பரச் செயல் என்பதே யாகும்... "இந்தச் சர்வ வியாபகப் பரஸ்பரச் செயலிலிருந்தே நாம் உண்மையான காரண காரிய உறவு நிலையை வந்து அடைகின்றோம். தனிப்பட்ட நிகழ்வுகளைப் புரிய வேண்டுமெனில் அவைகளின் பொதுவான பரஸ்பரத் தொடர்பிலிருந்து அவற்றைப் பிய்த்தெடுத்து தனிமைப்படுத்தி ஆராய வேண்டும். அப்பொழுது மாறுகிற இயக்கங்கள் ஒன்று காரணமாகவும் மற்றொன்று விளைவாகவும் வெளிப்படுகின்றன" என் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற நூலில் எங்கல்ஸ் கூறுவார்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

இங்கே எங்கெல்ஸ் எதனை முன்னிருத்துகிறார் என்பதை தோழர் நாகரத்தினம் கவனம் கொள்ளவேயில்லை. பரஸ்பர என்கிற மொழியாக்கத்தை மட்டுமே கவனம்கொண்டு முக்கியமானதை விட்டுவிடுகிறார். பொதுவான பரஸ்பரத் தொடர்பிலிருந்து அவற்றைப் பிய்த்தெடுத்து தனிமைப்படுத்தி ஆராய வேண்டும். அப்பொழுது மாறுகிற இயக்கங்கள் ஒன்று காரணமாகவும் மற்றொன்று விளைவாகவும் வெளிப்படுகின்றன, என்று எங்கெல்ஸ் கூறியதை பொருட்படுத்தவயில்லை. ஒன்று காரணமாகவும் மற்றொன்றுவிளைவாகவும் இருக்கும் என்று தான் எங்கெல்ஸ் கூறியுள்ளார், இரண்டையும் பரஸ்பரமான ஒத்ததாக கூறவில்லை.

எங்கெல்ஸ் இறுதிகாலத்தில் மறுத்தது நிர்ணயவாதமாகும். இது மார்க்சின் கோட்பாட்டை கொச்சையாகப் புரித்தின் விளைவே தவிர, மார்க்சின் குறைபாடு கிடையாது.

“சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை. மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்  ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்”
(எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894)

"இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன" என்பதே மார்க்ஸ் எங்கெல்சின் கருத்தாகும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதில் அடித்தளம் மேற்கட்டடைப்பைத் தீர்மானகரமாளிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதே மார்க்சியமாகும். அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிதல் என்பது கருத்துமுதல்வாதமும் இல்லாது பொருள்முதல்வாதமும் இல்லாது கதம்பமான கண்ணோட்டமாகும். இந்தக் கதம்பக் கண்ணோட்டம் இறுதியில் கருத்துமுதல்வாதத்தில் சரணடையும்.

மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சக்தியாக காட்டுவதே தோழர் நாகரத்தினம் நோக்கமாகும்.

“அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர்தான் மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கமுடியாது. அடித்தளத்தின் வழியில் மட்டுமே மேல்கோப்பில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்றும் கூறமுடியாது. அல்லாத வழிகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுதான் இயங்கியல் அணுகுமுறையாகும்.”
(அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சிய இயங்கியல் - 6)

Sunday, 21 January 2018

சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே சூழ்நிலையை மனிதர்கள் மாற்றுகிறார்கள் - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்

“மனிதர்களின் செயல்கள், புறவயமான, அவசிய நிகழ்ச்சிகளின் தொடர் நிகழ்ச்சியாக நடக்கின்றன. இதுதான் வரலாற்று வளர்ச்சிப் போக்கை உருவாக்குவதாக உள்ளது. மனிதர்கள் தங்கள் வாழ்ககைக்குத் தேவையான அனைத்தையும் அவர்களே படைக்கிறார்கள், கருவிகளை மேம்படுத்துகிறார்கள், தங்களது குறிக்கோளை அடைய முற்படுகிறார்கள். மேலும் சிறந்த வாழ்ககைத் தரத்தை அடையப் போராடுகிறார்கள், இவ்வாறு பல முயற்சிகளில் ஈடுபட்டு, தங்களது சமூக வாழ்ககையை உருவாக்கிறார்கள்.

சமூக வளர்ச்சி விதிமுறைகள் எதுவுமே, மனிதர்களின் நடைமுறைச் செயல்களுக்கு அப்பால் இருக்கவே முடியாது. ஆனால் சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே சூழ்நிலையை மனிதர்கள் மாற்ற முயல்கிறார்கள் என்பதுதான் வரலாற்றின் இயக்க இயலாகும். இதுவும் மனிதர்களின் நடைமுறைச் செயல்கள் மூலம்தான வெளியிடப்படுகிறது. வளர்ச்சியின் விதிமுறைகள் இத்தகைய செயல்களின் போக்கையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கின்றன”

 (பக்கம் 37 -38 வரலாற்றுப் பொருள்முதல்வாதம்)

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் சமூகத்தின் வளர்ச்சியின் பொது விதிகளை சுட்டிக்காட்டுகிறது - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்

“..சமூகத்தைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தை விளக்கிக் கூறுகிறபோது, வரலாற்றைப் படிப்பதற்கான ஒரு வழிகாட்டிதான் மார்க்சியமே ஒழிய, வரலாற்றுப் போக்கையே உருவாக்குவதற்கான ஒரு கருவி, மார்க்கம் அல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே கூறிவிட வேண்டும். வரலாற்று ரகசியங்களைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடிய மந்திரக்கோல் அல்ல மார்க்சியம்.

இந்த நாட்டில் அல்லது அந்த நாட்டில், இந்த அல்லது இன்னொரு கட்டத்தில் நடக்கக் கூடிய வரலாற்றுப் போக்கைக் கணித்து கூறிவிட முடியும் என்று,  வரலாற்றுப் பபாருள்முதல்வாதம் கூறிக் கொள்வது இல்லை. சமூகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடிய பொது விதிகளை இது படிப்பதுடன், பொதுவாகக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வழிகாட்டியாக உருவாக்குகிறது. அதை அமுலாக்குவது, பிரிட்டனிலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், முதலாளித்துவ நாடுகளிலும் சோஷலிஸ்டு நாடுகளிலும், தொழில்மயமான நாடுகளிலும், வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளிலும், மாறுபடலாம். ஏனெனில், அங்குள்ள குறிப்பிட்ட சூழ்நிலையும், நீண்ட முழுமையான வரலாற்றுப் போக்கும், இந்நாடுகளில் அல்லது ஒரு வகையான குழுநாடுகளில் தனித்தனித் தன்மைகளில் வேறுபட்டிருக்கக்கூடும்”
(வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பக்கம் 37 -38)


Monday, 15 January 2018

சமூக முன்னேற்றத்திற்கான புறவயமான கோட்பாடுகள் - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்

“சமூக முன்னேற்றத்திற்கான புறவயமான கோட்பாடுகள் என்று எதாவது உண்டா?

சமூக வளர்ச்சிக்கு உற்பத்தி அடிப்படையாக இருப்பதால், அதிலிருந்துதான் சமூக முன்னேற்றத்திற்கான புறவயக் கோட்பாட்டைக் காண நாம் முயல வேண்டும். இதனை அளவுகோலாகப் பயன்படுத்தி, வரலாற்றுப் போக்கில் எழக்கூடிய வித்தியாசங்களை மதிப்பிடவும், சமுதாயம் அடைந்து விட்டிருக்கிற வளர்ச்சி மட்டத்த் தீர்மானிக்கவும் முடியும்.

உற்பத்தி வளர்ச்சி என்பது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்தால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதால், பொருள்முதல்வாத வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து அவசியமாக எழுவது என்னவென்றால், சமூக முன்னேற்றத்திற்கான மிக உயர்ந்த புறவயமான கோட்பாடுகளை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில்தான் காணவேண்டும், என்பதாகும்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மனிதகுலம், சமூக முனனேற்றக் கட்டங்கள் மூலமாக முன்னேற ஆணிவேராகும். ஏனெனில், இதுதான், அவற்றை அவனுடைய சேவைக்காகப் பயன்படுத்துவதில் அவன் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறான் என்பதைக் காட்டுவதாகவும் இருக்கிறது. மனிதகுலத்தின் சமூக வளர்ச்சிக்கான வாய்ப்பு வசதிகளைத் திறந்து காட்டுவதாகவும் உள்ளது.

இந்தக் கோட்பாடு புறவயமானது. ஏனெனில், இதனைப் பயன்படுத்தி, சமூக வளர்ச்சி மட்டப்படிகளில், சமூகப் பொருளாதாரக் கட்டுமானத்தைத் தீர்மானிக்க உதவுவதாக இருக்கிறது.”

(வரலாற்றுப் பொருள்முதல்வாதம்  - பக்கம் - 477)

Friday, 12 January 2018

சமுதாய வாழ்நிலையும் சமுதாய உணர்வும் – கி.ஷஹ்நாஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

“சமுதாயத்தின் வரலாறு இயற்கையின் வளர்ச்சியிலிருந்து கணிசமாக மாறுபடுகிறது. இயற்கையில் உணர்வுள்ள சக்திகள் கிடையாது, அங்கே வளர்ச்சி தன்னிச்சையாக நடைபெறுகிறது. சமுதாயத்தில் விஷயம் வேறு விதமானது. இங்கே உணர்வும் சித்தமும் கொண்ட மனிதர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் தம்முன் குறிப்பிட்ட கடமைகளை வைத்து அவற்றை நிறைவேற்ற முயலுகின்றனர். உணர்வு, கருத்துக்கள், லட்சியங்கள் தான் சமுதாய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்ற ஒரு மாயை ஏற்படுகிறது.

உண்மையில் இப்படியல்ல. உணர்வோடு இயங்கக் கூடிய மக்கள் அவர்களது சித்தத்தையும் பகுத்தறிவையும் சாராத குறிப்பிட்ட புறவயச் சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். மனிதன் வாழ வேண்டுமானுல் அவன் உணவு, உடை, காலணி, இருப்பிடம் முதலிய பொருளாயதத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தேவைகள் அவனை இயற்கையுடனும் மற்ற மக்களுடனும் குறிப்பிட்ட உறவு முறைகளை வைத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கின்றன: அவன் நிலத்தை உழுகிறான், வீடுகளைக் கட்டுகிறான், ஆடையைத் தைக்கிறான், உற்பத்திக் கருவிகளைத் தோற்றுவிக்கிறான், தனது உழைப்பின் விளைபொருட்களைப் பரிவர்த்தனை செய்து கொள்கிறான். இவை எல்லாவற்றிலிருந்தும் மனிதர்களின் பொருளாயத வாழ்க்கை, அவர்களது சமுதாய வாழ்நிலை உருவாகிறது. சமுதாயத்தில் எந்தவிதக் கருத்துக்களும் தத்துவங்களும் நிலவினாலும் இவற்றைச் சாராத புறவய விதிகள் இந்த வாழ்நிலைக்கு உண்டு.
பொருளாயத நலன்களை உற்பத்தி செய்வதற்கான மக்களின் உழைப்பு நவடிக்கைதான் சமுதாய வாழ்நிலையின் முக்கிய சாரமாகும்.
...
உழைப்பு என்பது மனித வாழ்க்கைக்கும், சமுதாயம் நிலவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் இயற்கையான மற்றும் அவசியமான நிபந்தனையாகும்.

மக்களின் சமுதாய வாழ்நிலைதான் அவர்களது சமுதாய உணர்வை அதாவது கண்ணோட்டங்கள், கருத்துக்கள், சித்தாந்தங்கள், தத்துவங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை, சுருங்கக் கூறின் சமுதாயத்தினுடைய ஆன்மீக வாழ்வின் உள்ளடக்கமாக எவை விளங்குகின்றனவோ, அவையனைத்தையும் நிர்ணயிக்கின்றது. சமுதாய உணர்வின் பல்வேறு வடிவங்களில் மக்களது சமுதாய வாழ்நிலையின் நிபந்தனைகளும் முதிர்ச்சியடைந்த தேவைகளும் ஒரளவு முற்றிலுமாகப் பிரதிபலிக்கின்றன.

எந்த ஒரு கருத்தையும் அல்லது தத்துவத்தையும் எடுத்துக் கொண்டாலும் அவற்றின் வேர்கள் எப்போதும் சமுதாய வாழ்நிலையில், சமுதாய வாழ்க்கையின் பொருளாயாத சூழ்நிலைகளில் இருக்கும். சமுதாய வளர்ச்சியின் அடிப்படையை மக்களின் உணர்வில் தேடாமல், அவர்களது சமுதாய வாழ்நிலையில், பொருளாயத நலன்களின் உற்பத்தி வளர்ச்சியில் தேடி வேண்டும் என்று முக்கிய முடிவு இதிலிருந்து தோன்றுகிறது.”

(சமூக விஞ்ஞானம்)

Friday, 15 December 2017

சமூகம் பற்றிய கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் கண்ணோட்டத்தை அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டின் வாயிலாக விளக்கப்படுகிறது.

மார்க்சும் எங்கெல்சும் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி கூறிய கருத்தாக்கத்தை மூன்று வகையில் தொகுத்துப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதையும். இரண்டாவதில், மேற்கட்டமைப்பு அடித்தளத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், மற்றும் வடிவத்தை அமைப்பதில் பெரிதளவாயிருப்பதையும், மூன்றாவதில், மேற்கட்டமைப்பின் இடைச்செயலை மறுத்திடவில்லை என்பதோடு, இறுதியில் பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதையும் குறிப்பிடுகிறது.

     அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்.  இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்குப் பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்று தாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.  இவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகளை அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

அடித்தளத்தில் மேற்கட்டமைப்பின் தாக்கம்

உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்,  பொருளாதார இயக்கம் முடிவில் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பல இனங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. 

      அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான இடைச்செயல்

இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கதை மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

பரஸ்பவர  வினைபுரிதல் என்பது உற்பத்திச் சக்திகள், கம்யூனிச சமூகமாய் செயல்படும் அளவுக்கு வளர்ந்திட்ட நிலையில் காணக்கூடியதாகும்.

எங்கெல்ஸ் "இறுதியில் தீர்மானிக்கிறது" என்று தமது கருத்தை இறுதி நாட்களில் மாற்றிக் கொண்டார் என்று புரட்டுகின்றனர். இறுதியில்  தீர்மானிக்கிறது என்பதை “இறுதி தீர்ப்பு நாள்” போன்று எல்லாம் நடந்து முடிந்த பிறகான கடைசியில் என்று பொருள் மாற்றி விளக்குகின்றனர். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி முடிவெடுக்கும் போது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் எதிர்வினைபுரியும் இவற்றில் இறுதியில் முடிவெடுப்பது அடித்தளம் தான் என்று எங்கெல்ஸ் கூறியதை திரித்துப் பொருள் விளக்கம் கொடுக்கின்றனர்.

இல்லாத நாளை “இறுதி தீர்ப்பு” நாளாக வைத்தது போல், பொருளாதாரக் காரணங்கள் தீர்மானிக்கும் என்பதை இல்லாததாக்கும் முயற்சியாக “இறுதி” என்று எங்கெல்ஸ் குறிப்பிடுவதை எல்லாம் நடந்து முடிந்த பிறகான “இறுதி” என்று மார்க்சிய மாமேதைகள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர் கூறிவருகின்றனர். எல்லாம் நடந்து முடிந்தவுடன் இறுதியில்தான் பொருளாதார காரணங்கள் தன் எதிர்வினையைப் புரிகிறது என்றும், இந்தப் பொருளாதாரக் காரணங்கள் சமூக மாற்றத்துக்கு துணைச் சக்திதான் என்றும் தவறாகவும் மார்க்சியத்துக்கு புறம்பாகவும் விளக்குகின்றனர்.


      சமூக வாழ்நிலையே சமூக உணர்வுநிலையை தோற்றுவிக்கிறது என்பதை இவ்வகையில் மறுதலிக்கின்றவை வரலாற்றியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரானவையாகும்.

      சோவியத் யூனியன் தமது இறுதிகட்டத்தில் இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற கோட்பாட்டையே முன்வைத்து. சோவியத் யூனியனில் ஆதிக்க வர்க்கம் காணப்படவில்லை, உற்பத்தியில் சோஷலிசக் கட்டத்தைக் கடந்து கம்யூனிசக் கட்டத்தை அடைந்துவிட்டோம், அதனால் தங்களது நாட்டில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்ற தவறான முடிவின் விளைவாய்தான்  அழிந்து போனார்கள். சோஷலிசக் கட்டத்திலேயே இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற தவறான கண்ணோட்டம் பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் இதுபற்றிய கேள்விக்கு இடமேது.

      மார்க்சியத்தை சில வாக்கியங்களுக்குள் புரிந்தவர்கள் செய்யும் குளறுபடியே இவைகள் யாவும். அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் உள்ள இயக்கவியல் தொடர்வை அறியாமலும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கும் என்பதில் உள்ள பொருள்முதல்வாத விளக்கத்தை புரியாமலும் மார்க்சியம் என்பதை சிலவார்த்தைக்குள் அடக்கப் பார்க்கின்றனர்.


அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம். மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம். இதனை ஏற்று புரிந்து கொள்ளாமல், ‘அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தை தீர்மானிக்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதே போல் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் நிர்ணயிக்கிறது, அடித்தளம் மேற்கட்டமைப்பை இறுதியில் தான் தீர்மானிக்கிறது’ என்றெல்லாம் கூறுவது கருத்துமுதல்வாதக் கண்ணோட்ட வயப்பட்டதேயாகும்.