Sunday 26 August 2018

உழைப்புக் கருவிகள் (Instruments of Labour)


கருவிகளைப் பயன்படுத்தாமல், உழைப்பை உற்பத்தியில் செலுத்த முடியாது. மனிதன், உழைப்புக் கருவிகளை, உழைப்பின் குறிப்பொருளின் மீது செயல்படுத்தியே பொருட்களை உற்பத்தி செய்கிறான். தொடக்க காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு ஆகியவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள்,  தொழில்நுட்பம் போன்றவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைப்புக் கருவிகளோடு சேர்ந்து இந்த தொழில்கூடம், கிடங்கு, ரயில்வே, கால்வாய், மின்சாரம் போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகளாகிறது.

உழைப்புக் கருவிகளை தோற்றுவிப்பதிலிருந்து, மனித உழைப்பு தொடங்குகிறது எனலாம். ஒவ்வொரு சமூக பொருளாதார அமைப்பையும், அன்றைய உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியின் அளவைக் கொண்டே, அதன் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ளலாம். உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்கு உழைப்புக் கருவிகள் பெரும் பங்காற்றுகின்றன. உற்பத்தி முறையின் மாற்றம் என்பது உழைப்புக் கருவியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைகிறது. உற்பத்தி முறையின் மாற்றம் சமூக மாற்றமாக காட்சித்தருகிறது.

பண்டைய கூட்டுவாழ் சமூகத்தில் கற்கோடாரி, தடித்த கழிகள் போன்றவற்றை உழைப்புக் கருவிகளாகப் பயன்படுத்தினர். அதனால் அச் சமூகம் கொண்டுள்ள எளிய கருவிகளால் இயற்கையை வெல்வதற்கு சக்தி குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அடிமைச் சமூகத்தில் இரும்பாலன கருவிகள் வளர்ச்சியடைந்திருந்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இரும்பை உருக்கும் முறையின் தொடர்ச்சியாக, பட்டறைக்குத் தேவையான கருவிகள் வளர்ச்சியடைந்தது, இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் இயந்திரம், கணிப்பொறி போன்ற சாதனங்கள் உழைப்பிற்குத் துணைபுரிகிறது. தற்போது இயற்கையின் மீது செலுத்தும் சக்தி பெருமளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

உழைப்புக்  கருவிகளைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
உழைப்புக் கருவிகள் என்பது உழைப்பாளி தனக்கும் தன் உழைப்பின் குறிப்பொருளுக்கும் இடையே வைப்பதும், அவரது செயற்பாட்டின் கடத்தியாகப் பயன்படுவதுமான பொருள், அல்லது பொருட் தொகுதி ஆகும். அவர் சில பொருட்களின் யாந்திரிக, பௌதிக, இரசாயனப் பண்புகளைப் பயன்படுத்தி பிற பொருட்களைத் தமது நோக்கங்களுக்கு சேவகம் புரியச் செய்கிறார்.

பழங்கள் போன்ற தயார் நிலையிலுள்ள வாழ்வுச் சாதனங்களை சேகரிப்பதில் மனிதனின் கைகால்களே உழைப்புக் கருவிகளாகப் பயன்படுகின்றன. இவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தால், உழைப்பாளி சொந்தமாக்கிக் கொள்கிற முதற்பொருள் உழைப்பின் குறிப்பொருளன்று, உழைப்புக் கருவியே.

இவ்வாறு, இயற்கை அவரது செயற்பாட்டுக்குதவும் உறுப்புகளில் ஒன்றாகின்றது. அதனை அவர் தமது உறுப்புகளோடு இணைத்துக் கொண்டு  விலிலிய நூல் என்ன சொன்னாலும்  தமது ஆகிருதியை ஓங்கி வளரச் செய்கிறார். பூமி அவரது ஆதி உக்கிராணமாய் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, வீசுவதற்கும், அரைப்பதற்கும், அடிப்பதற்கும், வெட்டுவதற்கும் இன்ன பிற காரியங்களுக்குமான கற்களை அது அவருக்கு வழங்குகிறது. பூபூமியே ஓர் உழைப்புக் கருவிதான்.

ஆனால், அது விவசாயத்தில் அவ்வாறு பயன்படுத்தப்படுவதற்கு, வரிசையான இதர பல உழைப்புச் சாதனங்களும், ஒப்பளவில் உழைப்பின் வளர்ச்சி நிலையும் அவசியம். உழைப்பு சிறிதளவு வளர்ச்சி கண்டதுமே, அதற்கென தயாரிக்கப்பட்ட தனிவகைக் கருவிகள் தேவைப்படுகின்றன. இவ்வாறு மிகப் பழங் குகைகளில் கற்கருவிகளையும் கல்லாயுதங்களையும் காண்கிறோம். மனித வரலாற்றின் மிக ஆரம்ப காலத்தில், பழக்கப்பட்ட மிருகங்கள், அதாவது குறிக்கோளுடன் வளர்தெடுக்கப்பட்டு உழைப்பினால் மாற்றங்களுக்குள்ளான மிருகங்கள், - திருத்திச் செப்பனிட்ட கற்கள், மரம், எலும்புகள், கிளிஞ்சல்கள் ஆகியவற்றோடு - கூட  உழைப்புக் கருவிகளாக முக்கியப் பங்குவகிக்கின்றன.

உழைப்புக் கருவிகளின் உபயோகமும் புனைவும்  குறிப்பிட்ட சில மிருக ராசிகளிடையே இவை முதிரா நிலையில் காணப்பட்ட போதிலும்  மனித உழைப்பு நிகழ்முறைக்கே உரித்தான தனிச் சிறப்புகளாகும், எனவே, கருவி செய்யும் மிருகம் என்று மனிதனுக்கு இலக்கணம் வகுக்கிறார் பிராங்க்ளின்.

மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும்.

வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க உதவுவது தயாரிக்கப்பட்ட பொருட்களை எவை என்பதன்று, அவை தயாரிக்கப்பட்டது எப்படி என்பதும், எக்கருவிகளால் என்பதுமே. உழைப்புக் கருவிகள் மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சி நிலைக்கு ஓர் அளவுகோலை வழங்குவது மட்டுமல்லாமல், அந்த உழைப்பு நடைபெறுகிற சமூக நிலைமைகளைச் சுட்டிக் காட்டும் குறிகளாகவும் உள்ளன.

....இன்னும் விரிவான அர்த்தத்தில், நாம் உழைப்புக் கருவிகள் என்ற வகையில், உழைப்பை அதன் குறிப்பொருளுக்கு நேரடியாக மாற்றிக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படுபவையும், எனவே ஏதேனும் ஒரு விதத்தில் செயற்பாட்டின் கடத்திகளாகப் பயன்படுபவையுமான அந்தப் பொருட்களோடு கூட, உழைப்பு நிகழ்முறையை நடத்துவதற்கு அவசியமான எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவை நேரடியாக உழைப்பு நிகழ்முறையில் நுழைவதில்லை, ஆனால் இவையின்றி அது நடைபெறவே முடியாது, அல்லது பகுதியளவுக்கே நடைபெற முடியும்.  பூபூமி இவ்வகைப்பட்ட சர்வப் பொது கருவி என்பதை மீண்டும் காண்கிறோம். ஏனெனில் உழைப்பாளி நிற்பதற்கு ஓர் இடத்தையும் அவரது செயற்பாடு ஈடுபடுத்தப்படுவதற்கு ஒரு களத்தையும் அது வழங்குகிறது. முந்தைய உழைப்பின் பலனாய் அமைந்து, இவ்வகை உழைப்புக் கருவிகளாகவும் இருப்பவற்றில் பட்டறைகள், கால்வாய்கள், சாலைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 247 - 248)

No comments:

Post a Comment