Sunday 26 August 2018

உழைப்பின் குறிப்பொருள் (Objects of Labour)


உற்பத்தியை தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருளை உழைப்பின் குறிப்பொருள் என்றழைக்கப்படும். அதாவது  எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள்.

தொடக்க காலத்தில் இயற்கையில் இருந்து மட்டுமே, உழைப்பின் குறிப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர். அவ்வாறு இயற்கையிலிருந்து எடுக்கப்படும் போது, அவை உற்பத்திச் சக்தியாகிறது. கையாளப்படாத பொருட்கள் வெறும் இயற்கையின்  ஒரு பகுதி என்று தான் அழைக்கப்படும்.

உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாக கிடைப்பவை, அவை பபூமியிலிருந்து கிடைக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு உகந்த நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும்.

மற்றது, ஏற்கெனவே உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டதான கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத் தேவையான பருத்தி, ஏற்கெனவே உருக்கி ஆயத்தமான நிலையிலுள்ள  இரும்பு, அதாவது இரும்பைக் கொண்டு உருவாக்கப்படும் பொருளுக்கு, இரும்பு கச்சாப்பொருளாகும், இது போன்றவை இவ்வகையினைச் சேர்ந்ததாகும்.

உழைப்புச் செயல்பாட்டில் உழைப்புக் கருவிகளைக் கொண்டு, மனிதன் தனது தேவைகளை  நிறைவு செய்யும் பொருட்டு, உழைப்பின் குறிப்பொருளை மாற்றுகிறான். இந்த உழைப்பின் விளைவே உற்பத்திப் பொருள் எனப்படுகிறது.

உழைப்பின் குறிப்பொருளைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
கன்னி நிலம் (பொருளாதார வழியில் பேசுவதானால் இதில் நீரும் அடங்கும்) இப்படியே பயன்படுத்தத் தக்க தயார் நிலையில் அவசியப் பண்டங்கள் அல்லது வாழ்வுச் சாதனங்களை மனிதனுக்கு வழங்குகிறது. அது மனிதனைச் சாராமல் இயற்கையாகவே இருப்பது, மனித உழைப்பின் சர்வப்பொது குறிப்பொருளாய் அமைவது. உழைப்பு சில பொருட்களைச் சுற்றுப்புறத்துடனான நேரடித் தொடர்பிலிருந்து பிரித்தெடுக்க மட்டுமே செய்கிறது.

அந்தப் பொருட்களெல்லாம் உழைப்பின் குறிப்பொருட்கள், இயற்கை தானாகவே வழங்குபவை. இயற்கையாகவே அமைந்த நீரில் நாம் பிடிக்கிற மீன்களும், இயற்கையான வனத்தில் நாம் வெட்டுகிற மரங்களும், படிவ நாளங்களிலிருந்து நாம் எடுக்கிற தாதுப் பொருட்களும் இப்படிப்பட்டவையே. மறுபுறம், உழைப்பின் குறிப்பொருள் முந்தைய உழைப்பின் மூலம் வடிகட்டப்பட்டதென்று சொல்லக் கூடுமானால், அதைக் கச்சாப் பொருள் என்று அழைக்கிறோம்.

ஏற்கனெவே எடுக்கப்பட்டுக் கழுவுவதற்குத் தயாராய் உள்ள தாதுப்பொருள் இப்படிப்பட்டதே. கச்சாப் பொருள் அனைத்தும் உழைப்பின் குறிப்பொருளாகும்,      ஆனால் உழைப்பின் குறிப்பொருள் ஒவ்வொன்றும் கச்சாப்பொருள் அன்று. உழைப்புச் சாதனங்களைக் கொண்டு சிறிது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டவையே கச்சாப்பொருளாக முடியும். 
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 247)

No comments:

Post a Comment