Sunday, 26 August 2018

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான இயக்கவியல் தொடர்பு


உற்பத்திமுறையில் இரண்டு இன்றியமையாத தன்மை உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் ஆகும்.  இவற்றில் ஒன்றை தனியே பிரித்து பார்க்க முடியாது. இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் இயல்புக்கு பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு, இன்றியமையாதவையாகும். ஆனால் இந்த பொருத்தம் தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்க கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி முதிரும் போது முரணும் பெருகுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி, முதன்மையாய் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் தோன்றுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு, உற்பத்திக் கருவிகளை செம்மைப்படுத்துவதும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் கூடவே மனிதர்களின் உழைப்புத் திறன் தேர்ச்சி பெறுகிறது, உற்பத்தி அனுபவம் வளமை அடைகிறது.

      உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி குறிப்பிட்ட கட்டம் வரை, உற்பத்தி உறவுகளை பெரிய அளவிற்கு பாதிக்கப்படாமல் கட்டுப்பட்டே காணப்படுகிறது. ஆனால் உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண்பட வைக்கிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக மேம்பாடடைகிறது, பழைய உற்பத்தி உறவுகளோ, அந்த புதிய வளாச்சியடைந்த உற்பத்திச் சக்தியுடன் முரண்படுகிறது.

பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்திச் சக்தியை மந்தப்படுத்த முயற்சிக்கிறது, புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாற்றுகிறது.  புதிய உற்பத்தி சக்திகளுக்கு, பொருத்தமான உற்பத்தி உறவுகள் பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்திமுறையிலிருந்து, மற்றொரு உற்பத்திமுறைக்கு மாற்றம் அடைவதாகும். அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையிலிருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் சென்றடைவதாகும்.

தனிச்சொத்துடைமையின் தோற்றத்திலிருந்து, சமூகம் வர்க்கமாக மாறியது. வர்க்க சமூகத்தின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் உந்து விசையாக இருப்பது வர்க்கப்போராட்டமே ஆகும். 


No comments:

Post a Comment