உற்பத்தியை நிகழ்த்தும் போது இயற்கையை மாற்றுகிற அதே
நேரத்தில் மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுகின்றனர், அப்போது உறவுகள் ஏற்படுகிறது. அத்தகைய உற்பத்தி
தொடர்பாக நடைபெறும் உறவுகள் தான் உற்பத்தி உறவுகளாகும். சமூகத்தில் நிகழும்
உறவுகளில் இதுவே முதன்மை பெற்றவையாக இருக்கிறது. மற்ற உறவுகளை இதுவே தீர்மானிக்கிறது.
தனக்குத் தேவையானவைகளை மனிதன் தன்னந்தனியாக அனைத்தையும்
தோற்றுவிக்க முடியாது. தான் உற்பத்தி செய்ததை பிறருக்குக் கொடுத்தும், தனக்கு
தேவைப்படும், ஆனால் தன்னால் உருவாக்கப்படாத பொருளை பிறரிடம்
பெற்றும் வாழவேண்டியிருக்கிறது. இந்தச் செயற்பாடுகள், மனிதர்களிடையே
குறிப்பிட்ட சமூகப் பிணைப்புகளை உருவாக்குகிறது. இந்த பிணைப்புகள், புறநிலையானவை, அதாவது மனிதனின் உணர்வுநிலையை சாராமல்
இருப்பவையாகும்.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு, ஏற்பவே
உற்பத்தி உறவுகள் தோன்றுகிறது. புதிய தலைமுறையினர் தமது முதல் அடியினை, முந்திய தலைமுறையினர் தோற்றுவித்திருக்கும் வாழ்நிலைமைகளின் வளர்ச்சி
நிலையின,் தொடர்ச்சியாகத் தான் எடுத்துவைக்கின்றனர்.
உற்பத்தி நிகழும்போது ஏற்படும் அனைத்து உறவுகளும், உற்பத்தி
உறவு எனப்பதில்லை. இதில் உள்ள பொருளாரரதார உறவுகளே, உற்பத்தி
உறவுகள் என்றழைக்கப்படுகிறது. குறிப்பாகச் சொன்னால் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை மற்றும் நுகர்வு ஆகியவற்றின்
போது ஏற்படும் நிகழ்வுப்போக்கின் தொடர்பே, உற்பத்தி உறவுகள்
எனப்படும்.
உற்பத்தி உறவுகளில் முதன்மையாக விளங்குவது, உற்பத்திச்
சாதனங்களிடையே மனிதர்களுக்கு உள்ள உறவுகள், அதாவது
உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு உடைமையாய் இருக்கின்றன, என்பதை
அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகளுக்கு சொந்தமாக
இருப்பதால், அப்போது உற்பத்தியின் விளைபொருட்கள்
முதலாளிக்குச் சொந்தமாகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு உடைமையாக
இருக்கின்றன என்பதே, உற்பத்தி உறவுகளை நிர்ணயிக்கின்றன.
அதன்படி, உற்பத்திப் பொருட்களின் வினியோகம் தனிச்சொத்து
அடிப்படையில் சுரண்டல் கூட்டத்தின் நலன்களுக்கு ஏற்ப நடைபெறுகிறது. சமூகம்
சுரண்டல் சமூகமாக நிலவுகிறது. சமூகத்தில் தனியுடைமை நிலவினால், அங்கே ஆதிக்கம், கீழ்படிதல் என்ற சுரண்டல் உறவுகள்
செயல்படுகிறது.
முதலாளித்துவ சமூகத்தில் உடைமைகள் முதலாளிகளுக்கு
தனியுடைமையாய் இருக்கின்றன. சட்டப்படியான பெயரளவுக்கு சுதந்திரமாக உள்ள தொழிலாளி
வேலைக்கு அமர்த்தப்படுகிறான். எந்த உடைமையும் அவனுக்கு சொந்தமில்லை, இந்த
நிர்பந்த நிலைமையில் அவன் தனது உழைப்புச் சக்தியை விற்கவேண்டிய கட்டாயத்திற்கு
ஆட்படுகிறான்.
உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும்
இடையேயான ஒற்றுமையே குறிப்பிட்ட சமூக பொருளாதார அமைப்பாக நிலவுகிறது. உழைப்பு கருவிகளிலும், உழைப்பு திறமைகளிலும் ஏற்படும் படிப்படியான வளர்ச்சி உற்பத்திச்
சக்திகளின் வளர்ச்சியை பெருக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளில்
ஏற்படும் மாற்றங்களை ஒட்டி, உற்பத்தி உறவுகளிலும் மாற்றங்கள்
ஏற்பட வேண்டும், ஆனால் உற்பத்திச் சக்திகளில்
குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படும் பொழுது, சொத்துடைமை
வர்க்கம் பழைய உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படுவதற்கு தடையாய் நிற்கிறது. இந்த
உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல், சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறது. இதனைத் தொடர்ந்து பழைய சமூகப்
பொருளாதார அமைப்பு மறுதலிக்கப்பட்டு, புதிய சமூக பொருளாதார
அமைப்பாக உருவெடுக்கிறது.
No comments:
Post a Comment