Sunday, 26 August 2018

அடித்தளமும் மேற்கட்டமைப்பும்


சமூகத்தின் வளர்ச்சியையும், அதன் சாரத்தையும் அறிவதில் மக்களுக்கு நெடுங்காலமாக ஆர்வம் இருந்துவருகிறது. இதற்கு முதன்மையான காரணம், சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வும், பாதுகாப்பின்மையுமாகும், இவையே மக்களையும், சிந்தனையாளர்களையும், சமூகத்தின் இயங்கு சக்தி எது? என்று தேடவைத்துள்ளது.

சமூகத்தை இயக்குவது எது? என்ற கேள்விக்கு கருத்துமுதல்வாதிகளும், மதவாதிகளும் சமூகத்திற்கு வெளியேயுள்ள சக்தி, கடவுள் ஆகிவற்றின் விருப்பப்படி நடைபெறுகிறது, என்ற கருத்தை முன்வைக்கின்றனர். மற்றும் சிலர் அரசர், ஆட்சியாளர், தளபதி, தலைசிறந்த மாமேதை போன்றோர்களின் விருப்பப்படி சமூகம் அமைகிறது என்றனர். இதனோடு கூட, வரலாற்றில் ஏற்படும் கலகங்கள், எழுச்சிகள், போர் நடவடிக்கைகள், தத்துவயியல் போராட்டங்கள் போன்ற சிக்கலான திடீர் நிகழ்வால் உருவாவதாக மற்றும் சிலர் கூறினர். 

மார்க்ஸ் சமூக வளர்ச்சி என்பது இயற்கையாக வரலாற்றில் நிகழும் போக்கு என்றும், அது புறநிலையான விதிகளுக்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதையும் மெய்ப்பித்தார். இயற்கையில் நிகழும் புறநிலை விதிகள், சமூகத்திற்கு கிடையாது என்று மார்க்ஸ் காலத்திற்கு முன்புவரை சொல்லப்பட்டு வந்தது.

 எங்கெல்ஸ் கூறுகிறார்:-
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

இயற்கை, சமூகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே இவ்வுலகமாகும்.   சமூகத்தை இயற்கையிலிருந்து தனித்து பிரித்து புரிந்து கொள்ள முடியாது. சமூகம் தமது இயக்கத்தை இயற்கையுடன் இணைந்தே செயல்படுகிறது.  இதில் இயற்கை, மாறாத சில விதிகளுக்கு உட்பட்டவையாக  இருப்பதை பொதுவாக ஒப்புக்கொள்வர். ஒத்த நிலைமைகள் எப்போதும் ஒத்த விளைவுகளையே உருவாக்குகின்றன, என்பது இயற்கையில்  உள்ள அறிவியல் விதியாகும். ஆனால் சமூக மாற்றத்தையோ அல்லது வளர்ச்சியையோ விதிகளுக்குள் கொண்டு வரயியலாது என்பது,  பலகாலமாக கூறப்பட்டு வரும் கருத்தாகும். இதனை மார்க்சியம் மறுத்து, இயற்கையில் உள்ள மாற்றத்தை உணர்த்தும்  அறிவியலைப் போல், சமூக மாற்றத்திற்கான விதிகளையும் அறிந்து கொள்ளலாம், என்று சமூக வளர்ச்சியை அறிவியல் கண்ணோட்டத்தில்  விளக்குகிறது. இதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று பெயர்.

லெனின் கூறுகிறார்:-
"இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்  விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய  கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த  முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம்  காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான  இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து  முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது.  இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம்,  மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார  அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல்  கட்டமைப்பாகும்."
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

இதனை மறுத்து சமுதாய வளர்ச்சி என்பது இயற்கையின் வளர்ச்சியிலிருந்து பெருமளவிற்கு மாறுபடுகிறது. இயற்கையில் உணர்வுள்ள  சக்திகள் இருப்பதில்லை, ஆனால் சமுதாயத்தில் உணர்வு பெற்றுள்ள மக்கள் செயல்படுகிறார்கள். மக்களின் விருப்பப்படி, அதாவது  மக்களிடம் காணப்படும் உணர்வுகளின்படி அவர்களால் முன்வைக்கப்பட்ட லட்சியமே, சமூக வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று  கருத்துமுதல்வாத தத்துவவாதிகள், மற்றும் மதவாதிகள் கூறிவருகிறார்கள். ஆனால் மார்க்சியம் தத்துவயியல், மதம், அரசியல்  நிறுவனங்கள் போன்றவை எல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மேல் உருவான மேல்கட்டமைப்பாகும் என்று நிறுவுகிறது.

      வரலாற்றை இயக்க மக்கள் தேவைப்படுகிறார்கள், இயற்கை வளர்ச்சிக்கு மக்களின் நடவடிக்கை தேவையில்லை என்பதை அறிந்த மார்க்சியம், சமூகத்தில் செயல்படும் மக்கள், தாம் நினைத்தப்படி சமூகத்தை அமைத்துக்கொள்ள முடியவில்லை என்பதையும் அறிவுறுத்துகிறது.

மார்க்ஸ் கூறுகிறார்:-
“மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.”           
                 (லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்)

      உணர்வோடு செயல்படும் மக்கள், அவர்களது மனம், சிந்தனை போன்றவற்றை சாராத புறநிலை சூழ்நிலையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்்கைச் சாதனங்களுக்காக இயற்கையுடனும், பிறமனிதர்களுடனும் குறிப்பிட்ட உறவை நிகழ்த்துகிறான். இந்த பொருளாயத வாழ்க்கை, அவர்களது சமுதாய வாழ்நிலைகளைத் தோற்றுவிக்கிறது. அதாவது, இதுவரை சமூகத்தில் வளர்ச்சியுற்ற, உற்பத்திச் சாதனங்களைக் கொண்டே மக்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால் தான் மக்கள் தாம் விரும்பும் படியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிவதில்லை. பொருளாயத வாழ்விற்காக மக்களின் உழைப்பு நடவடிக்கைகளே சமுதாய வாழ்நிலையை உருவாக்குகிறது. இந்த சமூக வாழ்நிலையே, சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

சமூக வாழ்நிலை, சமூக உணர்வுநிலை ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவை, அதாவது சமூகத்தில் நிகழும் அகநிலை, புறநிலை ஆகியவற்றை ஆராய்ந்த மார்க்சியம், சமூக வாழ்நிலை தான் சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற முடிவிற்கு வருகிறது.

இதனை மார்க்ஸ் கூறுகிறார்:-
இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே, இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” 
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை)

இம் முன்னுரையின் இந்தப் பகுதியில் மார்க்ஸ் தன்னுடைய தத்துவயியல் கண்ணோட்டமான பொருள்முதல்வாதத்தை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த முன்னுரையின் பொழிப்பு:-

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும். 

இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும்.

இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

அடித்தளத்தில் ஏற்படுகிற மாற்றங்கள், மேல்கட்டமைப்பின் முழுமையும் விரைவாக அல்லது சற்று மெதுவாக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

அடித்தளமே மேல்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது.

இவ்வாறு முடிவெடுத்ததிலிருந்து மார்க்ஸ் இந்த முடிவையே, தனது பொதுவான தத்துவயியல் கண்ணோட்டமாக, தமது அராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக அமைத்துக்கொண்டார்.

ஒரு சமூகத்தின் முரண்பாட்டை,  அந்த சமூகத்தின் உற்பத்தியில் இருந்துவருகிற உற்பத்தி சத்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள போராட்டத்தின் வழியாகவே விளங்கிக்கொள்ள முடியும்.

ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்பிற்கு மாறவேண்டுமானால், அங்கு உற்பத்தி சக்திகள் போதுமான அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும், இதற்கு முன்பாக பழைய சமூகம் அழிக்கப்பட முடியாது.

பழைய உற்பத்தி உறவுகள் மாறவேண்டும் என்றால், புதிய உற்பத்தி சக்திகள் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

இந்த புறநிலை விதிகளின் படியே, மனித குலம் தமது சாதிக்கக் கூடிய கடமைகளை அமைத்துக் கொள்கிறது.

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பொருளாதார நிலைமைகள் தோன்றுகின்ற பொழுதுதான் அதற்கான முடிவும்கிடைக்கும்.

இதன்படி மார்க்ஸ் கூறுவது, மனித சித்தத்தை சாராத புறநிலை போக்காக, உற்பத்தி நடைபெறுகிறது, அப்போது ஏற்படுகிற உற்பத்தி உறவுகளின் அடிப்படைகளே, அன்றைய பொருளாதார வாழ்வாகவும் சமூகத்தின் அடித்தளமாகவும் அமைகிறது. இந்த அடித்தளத்திற்கு ஏற்ப சட்ட, அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு தோன்றுகிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. இதுவே மார்க்சுடைய சமூகவியல் கண்ணோட்டமான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவயியல் பிரிவாக அமைகிறது. இதனை புரிந்து கொள்வதற்கு மார்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தை சற்று விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

சமூகஉற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. இவ்வாறு கூறுவதால் மேற்கட்டமைப்பு என்பது தன்முனைப்பின்றி, அடித்தளத்தின் பிரதிபலிப்பாக மட்டும் செயல்படுவதாக சொல்லிவிட முடியாது. மேல்கட்டமைப்பின் தனிப் போக்கை மார்க்சியம் மறுத்திடவில்லை. அடித்தளத்தின் மீதான மேல்கட்டமைப்பின் தாக்கம், அடித்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, இதனால் தான் மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்புநிலையானது என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. தீர்மானகரப் பங்காற்றுவது அடித்தளமேயாகும். அடித்தளத்தால் உருவாக்கப்பட்ட மேற்கட்டமைப்பு, அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது. தோன்றிய அடித்தளத்தை வலுபடுத்த முடியுமே தவிர அடித்தளத்தில் எந்த மாற்றத்தையும், மேல்கட்டமைப்பால் உருவாக்க முடியாது.

மேற்கட்டமைப்பு என்பதின் தன்முனைப்பான செயற்பாட்டை மறுத்திடாமலும், இதன் செயப்பாட்டின் இன்றியமையாததை மார்க்சியம் அறிந்திடாமலும் இல்லை, அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம், மேற்கட்டமைப்பில் உடனே, தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் கூறவில்லை, மேற்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அடித்தளத்தால் தீர்மானிக்கப்படுகிறது. மேற்கட்டமைப்பு, அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட வகையில் சுதந்திரத்தோடு செயல்படுகிறது என்பதைத்தான் மார்க்சியம் வலியுறுத்துகிறது. 

சமூக வாழ்வின் அடிப்படை பொருளுற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது.  இந்த பொருள் உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இவ்விரண்டையும் உட்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment